தேசியம்
கட்டுரைகள்

வரலாறு பதிக்கும் கனடிய தமிழ் அரசியல் தம்பதியினர்

Toronto மாவட்ட பாடசாலை வாரியத்திற்கு அறங்காவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருமணமான தம்பதிகளாக பார்த்தி கந்தவேள், அனு ஸ்ரீஸ்கந்தராஜா 2018-ஆம் ஆண்டு வரலாறு படைத்தனர். இவர்கள் 2025-ஆம் ஆண்டில் Toronto நகர சபையில் அடுத்த அதிகார ஜோடியாக மாறக்கூடும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது. பாடசாலை அறங்காவலர் அனு ஸ்ரீஸ்கந்தராஜாவின், Toronto நகரசபையின் இடை தேர்தலுக்கான பிரசாரம், அவரையும் அவரது கணவர் பார்த்தி கந்தவேளையும் Toronto நகர சபையின் அடுத்த அரசியல் அதிகார ஜோடியாக மாற்றக்கூடும்.

Scarborough-Rouge Park தொகுதியின் Toronto நகரசபை உறுப்பினர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலர் அனு ஸ்ரீஸ்கந்தராஜா தாக்கல் செய்துள்ளார். September 29 நடைபெறவுள்ள இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளில் வேட்புமனு பதிவு செய்த இரண்டு தமிழர்கள் உட்பட ஆறு வேட்பாளர்களில் அனு ஸ்ரீஸ்கந்தராஜாவும் ஒருவராவார். April மாதம் நடந்த பொதுத் தேர்தலில் Ajax தொகுதியில் Liberal கட்சிக்காக முன்னாள் Toronto நகர பிரதி முதல்வர் Jennifer McKelvie போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து, அவரது Scarborough-Rouge Park தொகுதி ஆசனம் வெற்றிடமானதாக அறிவிக்கப்பட்டது. தமிழர்களின் வாக்குகள் அதிகமாக உள்ள இந்தத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் நான்கு தமிழர்கள் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அனு ஸ்ரீஸ்கந்தராஜா York பல்கலைக்கழகத்தில் மனிதநேயப் (Humanities) பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தவிரவும் 2018 முதல் Scarborough-Rouge Park தொகுதிக்கான Toronto மாவட்ட பாடசாலை வாரியத்திற்கான அறங்காவலர்களாகப் பணியாற்றி வருகிறார். தனது தொகுதியில் “சமூகத்தை மையமாகக் கொண்ட அபிவிருத்தியில்” கவனம் செலுத்தும் வகையில் தனது பிரசாரம் அமையும் என வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறினார். “மாற்றம் என்பது தாங்கள் தேர்ந்தெடுக்கும் ஒன்றாக இருப்பதற்குப் பதிலாக, தங்கள் மீது திணிக்கப்படுவதாக மக்கள் உணர்கிறார்கள். அவர்களுக்கு தங்களின் சொந்த ஜனநாயகத்தை தாங்களே கட்டுப்படுத்துகிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துவதே எனது குறிக்கோள்,” என அவர் குறிப்பிட்டார்.

தேசியம் August 2025 சஞ்சிகையில் வெளியான முழுமையான கட்டுரை ……….

 

அனு ஸ்ரீஸ்கந்தராஜா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தபோது அவருடன் இருந்தவர் அவரது கணவரான பார்த்தி கந்தவேள். Scarborough தென்மேற்கு தொகுதியின் Toronto நகர சபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள். 2023-இல் நகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், அவர் அனு ஸ்ரீஸ்கந்தராஜாவுடன் Toronto மாவட்ட பாடசாலை வாரியத்தில் அறங்காவலராக (Scarborough தென்மேற்கு) பணியாற்றினார். இதன் மூலமே அவர்கள் அந்த சபையின் முதல் திருமணமான தம்பதியாக ஆனார்கள். “நாங்கள் ஒரு பதவிக்காலத்தில் பாடசாலை சபையில் ஒன்றாக பணியாற்றினோம், மேலும் அங்கு சில தேவையான மாற்றங்களைச் செய்தோம்” என அனு ஸ்ரீஸ்கந்தராஜா, பார்த்தி கந்தவேளுடன் Toronto நகர சபையில் இணைவதற்கான சாத்தியம் குறித்து வினவப்பட்டபோது கூறினார். Toronto நகரசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்கள் Toronto நகர சபையில் இருக்கும் முதல் திருமணமான தம்பதிகளாக இருக்க மாட்டார்கள் எனவும், கடைசியாகவும் இருக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார் – மேலும் அது Scarborough-விற்கு நன்மையாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Olivia Chow  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் Toronto நகர முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், அவர் 1990-களிலும் 2000-களின் ஆரம்பத்திலும் தனது கணவர் Jack Layton-டனுடன் Toronto நகரசபையில் பணியாற்றினார். முன்னாள் நகரசபை உறுப்பினர் Joe Cressy-யின்   பெற்றோரான Gordon Cressy, Joanne Campbell ஆகிய இருவரும் நகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் அது நடைபெற்றது சமகாலத்தில் அல்ல. அவர்கள் திருமணத்திற்கு முன்னதாக பணியாற்றினார்கள்.

அரசியலுக்கு இது ஒன்றும் புதிதாக இருக்காமல் விடலாம் – ஆனால் கனடிய தமிழர் வரலாற்றில் இது ஒரு பதிவாகும்.

ரம்யா சேது – LJI Reporter

Related posts

சிக்கலில் உள்ளதா Pierre Poilievre தலைமை?

Lankathas Pathmanathan

இலையுதிர் கால பொருளாதார அறிக்கை

Lankathas Pathmanathan

2021 தேர்தல்: சில குறிப்புகள் -நாடாளுமன்றத்தில் மூன்று புதிய பூர்வகுடி உறுப்பினர்கள்!

Gaya Raja

Leave a Comment