Scarborough Town Centre வணிக வளாக கழிப்பறையில் 19 வயது தமிழ் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. 19 வயதான டானியல் அமலதாஸ் என்ற தமிழ் இளைஞன் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இந்த மரணம் ‘சந்தேகத்திற்குரியது’ என கருதப்பட்டது, ஆனால் அவர் கொல்லப்பட்டதாக Toronto காவல்துறையினர் கண்டறிந்தனர். Ontario தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (Ontario Tech University) மாணவராக இருந்தவர் டானியல் அமலதாஸ்.

தனது புதல்வன் குறிப்பிட்ட தினம் வணிக வளாகத்தில் தனது நண்பர்களைச் சந்திக்க சென்றார் என டானியல் அமலதாசின் தாயான Judy Basil தெரிவித்தார். Scarborough Town Centre துப்பாக்கிச் சூடு குறித்த செய்தியை அறிந்த போது அவர் வணிக வளாகத்தின் அருகில் இருந்துள்ளார். iPhone location செயலி ஊடாக தனது இருப்பிடத்தை தனது தாயுடன் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் கொண்டவர் டானியல் அமலதாஸ். வணிக வளாக துப்பாக்கிச் சூடு குறித்து அறிந்த போது தாயார் தனது தொலைபேசியில் டானியல் அமலதாஸ் எங்கே இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அப்போது அவர் இன்னமும் வணிக வளாகத்தில் தான் இருக்கின்றார் என அவரது iPhone செயலி உறுதிப்படுத்தியது. மேலும் அவரது இருப்பிடம் மாறவில்லை. வணிக வளாக உணவு விடுதி பகுதியின் கழிப்பறையில் டானியல் அமலதாஸ் இறந்து கிடந்ததை காவல்துறையினர் குடும்பத்தினருக்கு தெரிவிக்க பல மணி நேரம் ஆனது. தனது மகன் கொல்லப்பட்டதை அறிந்த தாய், வணிக வளாகத்திற்கு விரைந்தார் – ஆனால் அவர் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். குற்றம் நடந்த இடத்திற்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. எங்கும் சிதறிக் கிடந்த இரத்தம் அவர்களின் மோசமான கனவின் சாட்சியமாக அமைந்தது.

August 21 வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஒருவர் சுடப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் Scarborough Town Centre வணிக வளாகத்திற்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், வணிக வளாக உணவு விடுதி பகுதிக்கு அருகிலுள்ள கழிப்பறையின் தரையில் டானியல் அமலதாசை கண்டனர். அவருக்கு அருகில் கைவிடப்பட்ட ஒரு துப்பாக்கி காவல்துறையினரால் மீட்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் ஊடகங்களிடம் பேசிய Toronto காவல்துறையின் பகீர் சர்வானந்தன், இந்த துப்பாக்கிச் சூடு “சந்தேகத்திற்குரியது” என மாத்திரம் கூறினார். ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை ஒரு கொலை என காவல்துறையினர் அழைக்கவில்லை. அதனால் சில நாட்களுக்கு, டானியல் அமலதாஸ் தற்கொலை செய்து கொண்டதாக இணையத்தில் ஊகங்கள் பரவின. இரண்டு நாட்களுக்குப் பின்னர் தான் Toronto காவல்துறை அதன் கொலை பிரிவு இந்த விசாரணையை பொறுப்பேற்றதாக அறிவித்தது. இந்த மரணம் ஒரு இலக்கு வைக்கப்பட்ட கொலையாக விசாரிக்கப்படுவதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். 2025-ஆம் ஆண்டில் Toronto நகரத்தின் 27-ஆவது கொலை இதுவாகும்.
டானியல் அமலதாஸ் கொல்லப்பட்ட போது, அவர் Ontario தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு வாகன பொறியியல் துறை மாணவராக இருந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். ஒரு சிறந்த மாணவரான அவர் Costco பன்னாட்டு சில்லறை விற்பனை நிறுவனத்தில் வேலை செய்தும் வந்தார். வாகனங்கள் மீதான அவரது காதல், சமையலில் அவரது ஆர்வம் குறித்தும் குடும்பத்தினர் குறிப்பிடுகின்றனர். தனது சகோதரர் அன்பான, அக்கறையுள்ள, தன்னலமற்ற நபர் என்கிறார் டானியல் அமலதாசின் சகோதரி ஜெசிகா அமலதாஸ். அவரை ஒரு கடின உழைப்பாளி என கூறும் சகோதரி முழுநேரமாக பல்கலைக்கழகத்திற்கு சென்று கொண்டிருந்தபோதும், டானியல் அமலதாஸ், மூன்று நாட்கள் முழு நேரமாக வேலை செய்து கொண்டிருந்தார் என குறிப்பிடுகிறார்.
டானியல் அமலதாஸ் மரணத்தில் இரண்டு பதின்ம வயதினர்கள் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர். இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் விதிமுறைகளின் கீழ் பெயரிட முடியாத 17 வயது ஆண் சந்தேக நபர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் அறிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன என்பது குறித்த விபரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை. சந்தேக நபர்கள் இவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. காவல்துறையினரின் விசாரணையின் மத்தியில் அன்புக்குரியவர்கள் பதில்களைத் தேடுகிறார்கள். டானியல் அமலதாசுக்கு எந்த கும்பல்களுடனோ அல்லது தெரு வன்முறை குழுக்களுடனோ எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர் குடும்பத்தினர். விசாரணையை நம்பிக்கையிடன் காவல்துறையினரிடம் விட்டு விடுவதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர். விசாரணைகள் தொடரும் நிலையில் இந்த மரணம் குறித்து டானியல் அமலதாசின் குடும்பத்தினர் ஊகங்களை மாத்திரமே வெளியிடுகின்றனர். யாரோ ஒருவர் தனது மருமகனை கொள்ளையடிக்க முயன்றிருக்கலாம், அந்தச் செயல்பாட்டின் போது அவரைக் கொன்றிருக்கலாம் என்பதே தனது ஒரே யூகம் என்கிறார் அவரது மாமனான Anthony Basil.
இளம் வயது திடீர் மரணத்தால் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர், September மாத ஆரம்பத்தில் ஒரு நினைவு நிகழ்வை நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
இலங்கதாஸ் பத்மநாதன்
– தேசியம் August 2025 சஞ்சிகையின் முகப்பு கட்டுரை
