அமெரிக்க ஜனாதிபதி Donald Trump விடுக்கும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கனடியர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிக்கின்றனர்.
கனடிய பொதுத் தேர்தல் வாக்களிப்பு April 28 நடைபெறுகிறது. இதில் பிரதமர் Mark Carney நாட்டைத் தொடர்ந்து வழிநடத்துவதற்கான வாய்ப்பைப் பெற போராடுகிறார். இதற்கிடையில், அண்டை நாடான அமெரிக்காவுடனான பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
முன்னாள் மத்திய வங்கியாளரான Mark Carney-யின் முக்கிய தேர்தல் போட்டியாளர், Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre ஆவார். இலகுவாக இந்தத் தேர்தலை வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட Pierre Poilievre-ரின் அரசியல் செல்வாக்கு அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-பின் அச்சுறுத்தல்களால் மோசமடைந்துள்ள அமெரிக்க-கனடா உறவுகள் மத்தியில் குறைந்துள்ளது.
கனடியர்கள் பிரதமரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை – அவர்கள் தொகுதியில் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு வாக்களிக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைப் பெறும் கட்சி அரசாங்கத்தை அமைக்கும், அதன் தலைவர் பிரதமராகப் பதவியேற்பார்.
Mark Carney-யின் Liberal கட்சியும், Pierre Poilievre-ரின் Conservative கட்சியும் முன்னணியில் இருந்தாலும், Jagmeet Singh தலைமையிலான புதிய ஜனநாயகக் கட்சி (NDP), பசுமைக் கட்சி, Quebec மாகாணத்தை மையமாகக் கொண்ட Bloc Québécois உள்ளிட்ட பிற முக்கிய அரசியல் கட்சிகளும் வாக்குச் சீட்டில் இடம்பிடிக்கின்றன.
வர்த்தகப் போரும் வீட்டு விலைகளும்
முன்னாள் பிரதமர் Justin Trudeau பதவி விலகியபோது, Pierre Poilievre இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், கனடா மீது Donald Trump விதித்த கடுமையான வரிகளும், நாட்டின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களும் இந்தத் தேர்தலை பெரிதும் மாற்றியுள்ளன.
கனடாவின் இறக்குமதிகள் மீது வரி விதிக்க Donald Trump எடுத்த முடிவு கனடிய வணிகங்களைப் பாதித்துள்ளன. இதை எதிர்கொண்ட Mark Carney, வேலை வாய்ப்புகளுக்கு அழுத்தம் ஏற்படும் எனவும் கடினமான காலத்தை கனடா எதிர்கொள்ளும் எனவும் எச்சரித்துள்ளார். Donald Trump-பின் புதிய வரிகள் அமெரிக்க பொருளாதாரத்தையும், அதன் விளைவாக உலகப் பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கின்றன என Mark Carney கூறினார். கனடியர்கள் அதிக வாழ்க்கைச் செலவுடன் போராடி வருகின்றனர். அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் இந்தப் போராட்டத்தை மேலும் மோசமாக்கும். வரிகளும், அதற்கான எதிர்-வரிகளும் வீடுகளின் விலையை உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலும், கனடாவிலும் வாகனங்களின் விலையை அதிகரித்துள்ளது. பங்கு சந்தையில் சரிவு எதிர்கொள்ளப்படுகிறது. இதனால் பொருளாதார மந்தநிலை, அதிகரித்த வேலையின்மை ஆகியவை உருவாகலாம் என்ற அச்சுறுத்தல் உள்ளது.
நிதி மனிதர் எதிர் தொழில்முறை அரசியல்வாதி
Donald Trump-புடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர வாய்ப்பு உள்ளதாகக் அரசியலில் புதியவரான Mark Carney கூறியுள்ளார். ஆனால் நம்பகமான கூட்டாளிகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அவர் முயற்சிக்கிறார். வழக்கத்திற்கு மாறாக, பிரதமரானவுடன் அவரது முதல் வெளிநாட்டு பயணமாக ஐரோப்பாவிற்கு சென்று, பிரான்ஸ், இங்கிலாந்தில்அதிகாரிகளுடன் பாதுகாப்பு, இராணுவம், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேசினார்.
அரசியலில் புதியவராக இருந்தாலும், தனது போட்டியாளரைப் போலல்லாமல், Mark Carney-யின் நிதித்துறையில் பல தசாப்த அனுபவம், உலகளாவிய நெருக்கடிகள், புரட்சிக் காலங்களில் அரசாங்கங்களை வழிநடத்த உதவியது. இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக, Brexit சவாலைச் சமாளிக்க அவர் உதவினார். இது இப்போது அமெரிக்காவில் வரிகளால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஒத்திருப்பதாக Mark Carney கூறினார். இந்தப் பந்தயத்தில் அமெரிக்கர்கள் பலவீனமடைவார்கள் எனவும் அவர் கூறினார்.
நீண்டகால நட்பு நாட்டுடனான வர்த்தகப் போரை வழிநடத்துவதற்கு Mark Carney தகுதியானவர் என பல கனடியர்கள் கருதுகின்றனர். நெருக்கடியில் ஒன்றிணைவது அவசியம் – தெளிவான நோக்கத்துடனும் வலுவாகவும் செயல்படுவது அவசியம் என அமெரிக்க ஜனாதிபதியை எதிர்கொள்ள சிறந்த நபராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் வகையில் Mark Carney கூறினார்.
அமெரிக்காவுடனான பதற்றங்கள், முன்னாள் பிரதமர் Stephen Harper-ரின் Conservative அரசாங்கத்தில் அமைச்சரவை உறுப்பினராகப் பணியாற்றிய தொழில்முறை அரசியல்வாதி Pierre Poilievre-ரின் முன்னேற்றத்தை மந்தப்படுத்தியுள்ளது. அதிகாரத்துவத்தைக் குறைப்பது குறித்த Pierre Poilievre-ரின் கடுமையான சொல்லாட்சியும், கனடாவிற்கு முதலிடம் – “Canada First” என்ற மக்கள் வாத கொள்கையும், Liberal ஆட்சியால் சோர்ந்தவர்களிடையே முன்னர் ஆதரவைப் பெற்றன. ஆனால், இப்போது Donald Trump-புடன் ஒப்பிடப்படுவதை Pierre Poilievre தவிர்க்க முயல்கிறார்; கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாநிலமாக்குவதாக Donald Trump விடுத்த அச்சுறுத்தலை கடுமையாக விமர்சித்தார், அமெரிக்காவுக்கு எதிரான வரிகளை ஆதரித்தார், மேலும் தான் MAGA இயக்கத்துடன் உடன்படுபவர் இல்லை என மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
கனடியர்கள் யாரைத் தேர்ந்தெடுப்பார்கள்?
தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்ததில் இருந்து மக்கள் கருத்து கணிப்பில் Mark Carney முன்னிலை வகிக்கிறார். கனடா எவ்வாறு ஏனைய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும், பதிலடி வரிகளை ஒழுங்கமைக்கும் என்பது குறித்து Mark Carney தனது பிரதான எதிர் போட்டியாளரை விட தெளிவான நிலைப்பாட்டை முன்வைத்ததால் மக்கள் ஆராதவில் முன்னிலையில் உள்ளார். கனடியர்களிடையே நிலவும் வலுவான அமெரிக்க எதிர்ப்பு உணர்வையும் அவநம்பிக்கையையும் Mark Carney வாக்காக மாற்ற முனைகிறார்.
உண்மையில் இது Pierre Poilievre வெல்ல வேண்டிய தேர்தல்!
ஆனால் Mark Carney வெல்வார் போலத் தெரிகிறது!!
இலங்கதாஸ் பத்மநாதன்