அமெரிக்க அரசியலில் கனடிய அமைச்சர்கள் செல்வாக்கு செலுத்த முயல்வதாக கனடாவுக்கான அமெரிக்கத் தூதரகம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை கனடிய பிரதமர் நிராகரித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் “ஏற்றுக்கொள்ள முடியாதவை என தெரிவித்த பிரதமர் Mark Carney அவை ஆதாரமற்றவை என குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் Pete Hoekstra வெளியிட்ட அறிக்கைக்கு தனது கடுமையான ஏமாற்றத்தை Mark Carney பதிவு செய்தார்.
தற்போது துருக்கிக்கு தனது அதிகாரப்பூர்வ இருதரப்புப் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை (23) சந்தித்தபோது இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கனடியத் தொழில்துறை அமைச்சர் Mélanie Joly,உள்ளிட்டோரின் பழைய பேச்சுக்களை அமெரிக்கத் தூதரகம் ‘தேர்தல் தலையீடு’ எனப் பட்டியலிட்டதை Mark Carney நிராகரித்தார்.
அமெரிக்கா விதித்த வர்த்தக வரிகளால் பாதிக்கப்பட்ட கனடியத் தொழிலாளர்களைக் காக்க, எல்லையோர அமெரிக்க மாநிலங்களின் வணிகர்களிடம் பேசுவது சர்வதேச வர்த்தக விதிகளுக்கு உட்பட்டது என Mark Carney வாதிட்டார்.
இதனைத் தேர்தல் தலையீடு என அமெரிக்கா சித்தரிப்பது வேடிக்கையானது எனவும் கனடிய பிரதமர் கூறினார்.
கனடிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சட்டத்திற்கு உட்பட்டு பிரச்சாரம் செய்யும் முழு உரிமை கனடாவுக்கு உள்ளது என Mark Carney திட்டவட்டமாக கூறினார்.
கனடா – அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அமெரிக்க அரசியலில் கனடாவின் தலையீடு குறித்த குற்றச்சாட்டு கடந்த புதன்கிழமை (21) வெளியானது இங்கு குறிப்பிடத்தக்கது.
