Winnipeg நகர மசூதி ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த வார ஆரம்பத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
உள்ளூர் மசூதி குறி வைக்கப்பட்டது வெறுப்புணர்வு சார்ந்த குற்றமாக இருக்கலாம் என்ற கோணத்தில் Winnipeg காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
Rahma இஸ்லாமிய மையத்திற்கு ஏற்பட்ட சேதம், ஒரு airsoft அல்லது pellet துப்பாக்கியால் ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.
புதன்கிழமை (29) இரவு இரண்டு பேர் வாகனத்தில் இருந்து இஸ்லாமிய மைய கட்டிடத்தை நோக்கி பலமுறை துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த சம்பவத்தின் போது மையத்தின் பல ஜன்னல்கள் உடைக்கப்பட்டன.
சந்தேக நபர்கள் மையத்தின் வெளியே கூடியிருந்தவர்களை நோக்கி இனவெறித் தாக்குதல் வார்த்தைகளை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் குறிப்பிட்ட சம்பவங்களை, வெறுப்புணர்வு அடிப்படையில் நிகழ்த்தப்பட்டிருக்கக்கூடிய குற்றமாக காவல்துறை விசாரித்து வருகிறது.
இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இதன் சேத மதிப்பு சுமார் $3,000 வரை இருக்கும் எனவும் காவல்துறை குறிப்பிடுகிறது.
குறிவைக்கப்பட்ட மசூதி உட்பட அப்பகுதியில் உள்ள ஏனைய மசூதிகளிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தங்கள் ரோந்து பணிகளை அதிகரிக்க இருப்பதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் Winnipeg நகரின் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல அரசியல் தலைவர்கள் இந்தச் சம்பவத்தை கண்டித்துள்ளனர்.
இஸ்லாமிய வெறுப்புணர்வு அடிப்படையிலான இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரதமர் Mark Carney தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் Winnipeg காவல்துறைக்கு தனது முழு ஆதரவு உண்டு என கூறிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி, அவர்களுக்கு ஆதரவளிக்க RCMP தயாராக உள்ளதாகவும் கூறினார்.
இந்தச் சம்பவத்தை “மிகவும் கவலைக்குரியது” என Winnipeg நகர முதல்வர் Scott Gillingham குறிப்பிட்டார்.
சேதமடைந்த மையத்தைப் பழுது பார்ப்பதற்கான நிதியை மாகாண அரசு வழங்கும் என Manitoba மாகாண அமைச்சர் Nellie Kennedy தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவோ அல்லது குற்றம் சாட்டப்படவோ இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
