Toronto நகரில் வீடுகளில் அத்துமீறி நுழைபவர்கள் மூலம் நிகழும் வன்முறைகள் குறித்து Ontario மாகாண முதல்வர், Toronto நகர முதல்வர் ஆகியோர் தமது எச்சரிக்கையை வெளியிட்டனர்.
Toronto-வின் Casa Loma பகுதியில் வீடொன்றில் அத்துமீறி நுழைந்தவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 39 வயது இசைக்கலைஞர் Michael Eckert இந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் நகரம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bridle Path பகுதியில் வீடொன்றுக்குள் மூன்று மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுடப்பட்ட சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள்ளாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் Doug Ford, தனது குடும்பத்தைக் காக்க தன்னிடம் சட்டப்பூர்வமாக உள்ள துப்பாக்கியை பயன்படுத்த பின்னிற்க மாட்டேன் என கூறினார்.
வீட்டிற்குள் அத்துமீறி நுழைபவர்களிடமிருந்து குடும்பத்தை பாதுகாக்க மக்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் பயன்படுத்த அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தான் அச்சமும் கோபமும் அடைந்துள்ளதாக Toronto நகர முதல்வர் Olivia Chow தெரிவித்தார்.
ஒரு மாதத்திற்குள் Toronto-வில் நடந்த இரண்டாவது கொடூர வீடு அத்துமீறல் குறித்து வியாழக்கிழமை (26) செய்தியாளர்களிடம் பேசிய Olivia Chow கோபம் வெளியிட்டார்.
இதற்கிடையே, தற்காப்பு, சொத்து பாதுகாப்பு உரிமைகள் தொடர்பான குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக Ontario மாகாண Solicitor General Michael Kerzner அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் இதுவரை Toronto காவல்துறையில் 111 வீடு அத்துமீறல் வழக்குகள் பதிவாகியுள்ளன.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 29 சதவீதம் அதிகமானதாகும்.
