உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான (National Day for Truth and Reconciliation) ஆறாவது தேசிய நினைவு நாளில் நாடளாவிய ரீதியில் அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆறாவது ஆண்டாக கனடா முழுவதும் புதன்கிழமை (30) உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய நாள் உணர்ச்சிப்பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தேவாலயங்கள், அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பாடசாலைகளில் சித்திரவதைகளை அனுபவித்து உயிர் பிழைத்தவர்கள், வீடு திரும்பாமல் உயிர் நீர்த்த முதற்குடியினர் குழந்தைகள் நினைவாக இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கனடா முழுவதிலும் உள்ள முக்கியப் பொது இடங்களில் ‘ஒவ்வொரு குழந்தையும் முக்கியம்’ (Every Child Matters) என்ற வாசகம் அடங்கிய ஆரஞ்சு நிறக் கொடிகள் ஏற்றப்பட்டு, சிறப்பு நினைவு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்ற வளாகத்தில் நினைவு அஞ்சலி ஒன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
‘Remembering the Children’ என்ற பெயரில் Ottawa நாடாளுமன்ற வளாகத்தில் இந்த 90 நிமிட நினைவு நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இதில் பங்கேற்பவர்கள் முதற்குடியினர் குழந்தைகளை நினைவு கூர்ந்து மதிப்பளிக்கும் விதமாக, சிறிய குழந்தைகள் காலணிகளை அடுக்கி தங்களது அஞ்சலியை செலுத்த ஏற்பாடாகியுள்ளது.
Alberta மாகாணம் Edmonton நகரில் நடைபெறும் சிறப்பு நினைவு நிகழ்வில் பிரதமர் Mark Carney பங்கேற்கிறார்.
ஆங்கிலம், பிரெஞ்சு தவிர Algonquin, Denesuline, Innu-Aimun, Inuktitut (Northern Baffin), Mi’kmaq, Michif, Oji-Cree, Plains Cree, Western Ojibway என 9 வெவ்வேறு பழங்குடியின மொழிகளில் பிரதமரின் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியானது.
முதற்குடியினர் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அநீதிகளுக்கு அரசாங்கம் முழு பொறுப்பேற்கிறது என தனது அறிக்கையில் குறிப்பிட்ட பிரதமர் வலுவான செயல்பாடுகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.
“நாம் உயிர் பிழைத்தவர்களுக்கு வெறும் நினைவேந்தலை மட்டும் கடனாகக் கொண்டிருக்கவில்லை; அதையும் தாண்டிய தகுந்த ‘நடவடிக்கைகளை’ எடுக்க கடமைப்பட்டுள்ளோம்” என Mark Carney உறுதியளித்தார்.
ஆனாலும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம் (Truth and Reconciliation – TRC) பரிந்துரைத்த 94 முக்கியக் கோரிக்கைகளில், கடந்த 11 ஆண்டுகளில் வெறும் 14 கோரிக்கைகள் மட்டுமே முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது என கண்காணிப்பு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
19-ஆம் நூற்றாண்டு முதல் 1996 வரை, சுமார் 1,50,000-க்கும் மேற்பட்ட முதற்குடியினர் குழந்தைகள் தங்கள் குடும்பங்களை விட்டு பலவந்தமாக பிரிக்கப்பட்டு, அரசு நிதியுதவி பெற்ற குடியிருப்புப் பாடசாலைகளில் அடைக்கப்பட்டனர்.
அங்கு நிலவிய கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு, சித்திரவதைகளால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்ததை முந்தைய ‘உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம்’ (TRC) ஒரு “கலாச்சார இனப்படுகொலை” (Cultural Genocide) என அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
Ottawa, Edmonton தவிர Toronto, Vancouver, Calgary, Iqaluit உள்ளிட்ட பகுதிகளில் பிரத்தியேக நினைவு தின நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
