மத்திய அரசின் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நந்தார் காலத் தேர்தலைத் தூண்டுவதை விரும்பவில்லை என அனைத்து கட்சிகளின் அரசியல்வாதிகளும் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது குறித்து எவரும் உறுதிப்பாட்டை வெளியிடவில்லை.
பிரதமர் Mark Carney அரசின் முதலாவது வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சர் François-Philippe Champagne செவ்வாய்க்கிழமை (04) சமர்பிக்கின்றார்.
Donald Trump தலைமையிலான அமெரிக்க அரசுடனான வர்த்தக சவாலுக்கு மத்தியில், எந்த வகையான அரசாங்கத்தை வழிநடத்த Mark Carney விரும்புகிறார் என்பதை இந்த வரவு செலவுத் திட்டம் தெளிவுபடுத்தும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.
இந்த வரவு செலவுத் திட்டம் பிரதமரின் புதிய நிர்வாகத்தின் முன்கூட்டிய வீழ்ச்சியையும் தூண்டக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது
இந்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில், சிறுபான்மை Liberal அரசாங்கம் பெரும் சவால்களை எதிர்கொள்ள கூடும் என பரவலாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வரவு செலவுத் திட்டம் குறித்து தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக பிரதமர் Mark Carney கடந்த வார விடுமுறையில் சமிச்சை காட்டினார்.
இந்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாக்குகள் அரசாங்கத்திடம் இதுவரை இல்லை என அரசாங்க அவைத் தலைவர் Steven MacKinnon சமீபத்தில் கூறி இருந்தார்.
ஆனாலும் இந்த வரவு செலவுத் திட்டத்தை தனது கட்சி எதிர்த்து வாக்களிக்குமா என்பதை Conservative தலைவர் Pierre Poilievre கூற மறுத்து வருகிறார்.
அரசாங்கம் கனடியர்களுக்கு சரியான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்தால், முன்கூட்டிய தேர்தலைத் தவிர்க்கலாம் என திங்கட்கிழமை (03) நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போது அவர் கூறினார்.
இந்த நிலையில், வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க எதிர்க்கட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என்ற அச்சுறுத்தல் மூலம் அரசாங்கம் பொதுமக்களை ஈர்க்கவில்லை என Bloc Québécois நாடாளுமன்ற குழுத் தலைவர் தெரிவித்தார்.
கடந்த April மாதத்தில் கனடியர்கள் சிறுபான்மை அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்ததால், Liberal கட்சி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நெருக்கமாக பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தனது கட்சியின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க வாய்ப்பில்லை என Bloc Québécois தலைவர் Yves-François Blanchet கூறியுள்ளார்.
ஆனால் நிதியமைச்சருக்கும், Yves François Blanchet-க்கும் இடையிலான அண்மைய பேச்சுவார்த்தைகள், அவரது கட்சி இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காமல் போகும் நிலையை ஏற்படுத்தலாம் என்ற ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
NDP இந்த வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்தாலோ அல்லது வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தாலோ Liberal அரசாங்கம் இதில் வெற்றி பெறலாம்.
தனது கட்சி உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் இருந்து விலகி இருப்பதை NDP தலைவர் Don Davies நிராகரிக்கவில்லை.
இதில் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் குறிப்பிட்ட ஆவணத்தைப் படிக்க வேண்டும் என இடைக்கால NDP தலைவர் கூறினார்.
வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பாக அமைவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்துப் பேசுவதற்காக Mark Carney அண்மைய வாரங்களில் எதிர்க்கட்சித் தலைவர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்தார்.
செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்களிப்பு இந்த மாத இறுதிக்குள் நடைபெறும்.
சிறுபான்மை Liberal அரசாங்கம், இந்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற மூன்று வாக்குகள் குறைவான நிலை உள்ளது.
இதனால் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற ஏனைய கட்சி உறுப்பினர்களின் ஆதரவு தேவையான நிலை Liberal அரசுக்கு தோன்றியுள்ளது.
நாடாளுமன்றத்தில் Liberal அரசாங்கம் 169 ஆசனங்களைக் கொண்டுள்ளனர்.
ஏனைய கட்சிகள் 174 ஆசனங்களைக் கொண்டுள்ளனர்.
Conservative 144, Bloc Québécois 22, NDP 7, பசுமைக் கட்சி ஒன்று என ஆசன பகிர்வு அமைகிறது.
