கனடிய தமிழர் கூட்டுக்கும் (கூட்டு), கனடியத் தமிழ் பேரவைக்கும் (பேரவை) இடையிலான பேச்சுவார்த்தையில் தேக்க நிலை தோன்றியுள்ளது.
டான்டன் துரைராஜாவை பதவியில் இருந்து நீக்குவதற்கு பேரவை மறுத்து வருவது, இரு தரப்பு பேச்சுவார்த்தை தேக்க நிலையை அடைந்ததற்கான பிரதான காரணியாக அமைகிறது!
பேரவையின் நிர்வாக இயக்குநர் டான்டன் துரைராஜாவை பதவியில் இருந்து நீக்குவதற்கு பேரவை மறுத்து வருவது, இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தை தேக்க நிலையை அடைந்ததற்கான பிரதான காரணியாக அமைகிறது. இதன் மூலம் டான்டன் துரைராஜா குறித்த சமூகத்தின் கேள்வியால் பேரவை மீண்டும் பின்னடைவை சந்தித்துள்ளது. இது பேரவைக்கு எதிராக முழுமையான புறக்கணிப்பு அறிவிக்கப்படும் நிலையை தோற்றுவித்துள்ளது. பேரவை எதிர்கொள்ளவேண்டிய சீர்திருத்தத்திற்கும், சமூக ஒற்றுமைக்கும் டான்டன் துரைராஜா பல ஆண்டு காலமாக மையத் தடையாக இருப்பதாக இந்த சந்திப்பு குறித்து தேசியம் அறிகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, பொறுப்புக்கூறல், நிர்வாகம் குறித்த நீண்ட கால கவலைகளையும் சமூகத்தின் கேள்விகளையும் நிவர்த்தி செய்யும் நோக்கில் கூட்டும் பேரவையும் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்ததை தேசியம் உறுதிப்படுத்தியது.
பேரவையின் இயக்குனர் சபை உறுப்பினர் டில்ஷான் நவரட்ணராஜா, தமிழ் தேசியத்தை வெறும் “கனவு” என இழிவான தொனியில் கேலி!
வியாழக்கிழமை (17) மாலை இணையம் மூலம் நடைபெற்ற இறுதி சந்திப்பு கருத்து மோதலில் முடிவடைந்தது. பேரவையின் இயக்குனர் சபை உறுப்பினர் டில்ஷான் நவரட்ணராஜா, தமிழ் தேசியத்தை வெறும் “கனவு” என இழிவான தொனியில் கேலி செய்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் டான்டன் துரைராஜாவின் தலைமைத்துவ தோல்வி குறித்த விமர்சனைகளை தகுதியின் அடிப்படையில் எதிர்கொள்ள மறுத்தார். பதிலாக தமிழரின் தேசியத்தை வெறும் “கனவு” என இழிவான முறையில் கேலி செய்தார். தவிரவும் பேச்சுகளில் பங்கேற்ற கூட்டின் பிரதிநிதி ஒருவரை தகாத முறையில் பேசினார். பேரவையின் இன்றைய தேவையான சீர்திருத்தத்திற்கான தடையின் அடையாளமாக இந்தப் பரிமாற்றத்தை சந்திப்பின் பங்கேற்பாளர்கள் தேசியத்திடம் விவரித்தனர்.

பேரவையின் தலைவர் குமார் ரட்ணமும், முன்னாள் தலைவர் சிவன் இளங்கோவும் மன்னிப்பு கோர வேண்டிய கட்டாயம்
குறிப்பிட்ட பேச்சுகளில் இருந்து இடைநடுவே வெளியேறிய டில்ஷான் நவரட்ணராஜாவின் நடத்தைக்காக பேரவையின் தலைவர் குமார் ரட்ணமும், முன்னாள் தலைவர் சிவன் இளங்கோவும் மன்னிப்பு கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் டில்ஷான் நவரட்ணராஜா மின்னஞ்சல் மூலம் பேரவையின் இயக்குனர் சபையிடம் மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட கூட்டத்தில் அவரது அநாகரிக நடத்தையால் நேரடியாக பாதிக்கப்பட்ட நபர்களிடம் அவர் மன்னிப்பு கோரவில்லை. பிரதானமாக தமிழ் தேசியவாதம் குறித்த அவரது இழிவான தொனியிலான நிலைப்பாடு குறித்து அவர் இந்த மின்னஞ்சலில் எந்த கருத்தையும் குறிப்பிடவில்லை.
பேரவை டில்ஷான் நவரட்ணராஜாவை இயக்குனர் சபையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்!
டில்ஷான் நவரட்ணராஜாவின் இந்த செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது – கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியது. இதற்கு பொறுப்பேற்று பேரவை அவரை இயக்குனர் சபையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். இந்த நடத்தையை புறக்கணித்து விட்டு கடந்து செல்ல முடியாது. டில்ஷான் நவரட்ணராஜா ஏற்கனவே விமர்சனத்திற்கு உள்ளானவர். பேரவை சமூகத்தில் இருந்து தகுந்த விமர்சனங்களை எதிர் கொள்ளும் போதெல்லாம், பொது வெளியில் கண்டிக்கத்தக்க, அநாகரிகமான கருத்துக்களை பகிரும் வரலாற்றை டில்ஷான் நவரட்ணராஜா கொண்டுள்ளார். ஒரு சமூக உறுப்பினர், அவரது குழந்தைகள் குறித்து இழிவான தனிப்பட்ட செய்திகளையும் அவர் கடந்த ஆண்டு அனுப்பியிருந்தார். மேலும் டான்டன் துரைராஜா பதவியில் இருந்து நீக்கப்பட்டால் பேரவை மூடப்படும் என பகிரங்கமாக பொது வெளியில் மிரட்டியுள்ளார்.

2024 தெருவிழாவின் போது, அவர் காவல்துறையினருடன் உரையாடுவதும், ஆர்ப்பாட்டக்காரர்களை அடையாளப் படுத்தி காவல்துறையினருக்கு சுட்டிக்காட்டுவது போல் தோன்றும் ஒளிப்படங்கள் வெளியாகின. கனடிய தமிழர் சமூகம் குறித்தும், பேரவை ஏன் உருவாக்கப்பட்டது, யாரால் உருவாக்கப்பட்டது போன்ற அடிப்படை விடயங்களில் டில்ஷான் நவரட்ணராஜாவுக்கு ஒரு வரலாற்றுப் பாடம் அவசியமாகிறது. தமிழ் தேசியவாதத்தை கேலி செய்து, அது பாதுகாக்க வேண்டிய கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துபவருக்கு பேரவையில் இடமிருக்க முடியாது.
இரு தரப்பினருக்கும் இடையிலான கடந்த மாத சந்திப்புகளை, பேரவை முன்னேற்றமாக வகைப்படுத்த முடியாது
இரு தரப்பினருக்கும் இடையிலான கடந்த மாத சந்திப்புகளை, பேரவை முன்னேற்றமாக வகைப்படுத்த முடியாது என்பதை இந்த சந்திப்பின் இறுதியில் இருதரப்பினரும் இணங்கினர். இந்த சந்திப்புகள் குறித்து தேசியம் முன்வைத்த கேள்விக்கு இந்தக் கட்டுரை வெளியிடப்படும் வரை பேரவை எந்த பதிலையும் வழங்கவில்லை. அதேவேளை வெள்ளிக்கிழமை (18) மாலை உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமான ஒரு ஊடகவியலாளர் சந்திப்புக்கு பேரவை அழைப்பு விடுத்துள்ளது இங்கு குறிப்பிட வேண்டியது.

பேரவையின் இன்றைய சர்ச்சையின் மைய புள்ளியாக இருப்பது பேரவையின் முன்னாள் தலைவரும் மூத்த ஆலோசகருமான ராஜ் தவரட்ணசிங்கம் – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நிற்கும் ஒளிப்படமாகும். பேரவை இந்த ஒளிப்படத்தை, “பெருமையுடன்” தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது. மகிந்த ராஜபக்ச, தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டவர். மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர் கோத்தாபய ராஜபக்ச உட்பட நான்கு பேர் கனடாவினுள் நுழைய கனடிய அரசாங்கம் January 2023-இல் தடை விதித்தது.
மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு ராஜ் தவரட்ணசிங்கத்தை தான் அறிவுறுத்தியதாக டான்டன் துரைராஜா ஒப்புக்கொண்டார்
இந்தத் தடை விதிக்கப்பட்ட சில மாதங்களில் வெளிச்சத்திற்கு வந்த இந்த ஒளிப்படம் எடுக்கப்பட சந்திப்பில் ராஜ் தவரட்ணசிங்கம் தனது சொந்த முடிவில் பங்கேற்றதாக பேரவை ஒரு வருடத்திற்கும் மேலாக வலியுறுத்தியது. ஆனாலும் இந்த சந்திப்பில் பேரவையின் சார்பாக கலந்து கொள்ளுமாறு ராஜ் தவரட்ணசிங்கத்தை தான் அறிவுறுத்தியதாக சமீபத்தில் கூட்டுடனான இரண்டு சந்திப்புகளில் டான்டன் துரைராஜா ஒப்புக்கொண்டார். இந்த ஒப்புதல் வாக்குமூலம், 2024 February மாதம் நடைபெற்ற பேரவையின் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் உட்பட, அமைப்பின் முந்தைய பொது நிலைப்பாட்டிற்கு நேரடியாக முரணானது.
மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்புக்கு பொறுப்பேற்று ராஜ் தவரட்ணசிங்கம் பதவி விலகியுள்ளார். ஆனால் இதற்கு திட்டமிட்ட டான்டன் துரைராஜா இன்றும் பதவியில் உள்ளார்.
இது எவ்வளவு முரண்பாடாக உள்ளது?
சமூக நம்பிக்கையை சேதப்படுத்திய பரந்த அளவிலான பேரவையின் முடிவுகளில் மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. பேரவையின் வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான இந்த நகர்வு முதல்முறையாக நிகழவில்லை:
- இலங்கை அரசின் ரூபவாஹினிக்கான அழைப்பு
- இமாலயப் பிரகடனம் – மகிந்த ராஜபக்சவுடன் சந்திப்பு
- இலங்கை அரசின் வெளிநாட்டு தலையீட்டை மௌனமாக ஏற்றுக்கொள்வது
- கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தை தடுக்கும் முயற்சியில் உதவியது
இந்தப் பட்டியல் இன்னும் நீண்டது!
பேரவை, ஸ்ரீலங்கா அரச அதிகாரிகளுடன் கொண்டிருக்கும் தொடர்பு குறித்து பல ஆண்டுகளாக கடுமையான கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது. கனடாவுக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் நிகழ்வுகளில் பங்கேற்பது, தமது நிகழ்வுகளுக்கு இலங்கைத் தூதரக அதிகாரிகளை விருந்தினர்களாக அழைப்பது என பேரவை பரவலான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது பேரவை, SJV செல்வநாயகம் ஞாபகார்த்த சொற்பொழிவு நிகழ்வொன்றை (SJV Chelvanayakam Memorial Lecture), அவரை கௌரவிக்கும் வகையில் நடத்தியது. இந்த நிகழ்வில் Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo கலந்து கொண்டிருந்தார்.
பேரவை முன்னெடுக்கும் வருடாந்த கலை நிகழ்வான, ‘தமிழர் தெருவிழா – 2024’ காலத்தில், சமூகத்தின் குமுறல்கள் பெரும் கொந்தளிப்பாக வெளிப்பட்டது. அண்மைய காலத்தில் பேரவையின் தலைமைத்துவத்தின் மிக வெளிப்படையான தோல்வி “தெருவிழா 2024-இல்” வெளிச்சத்துக்கு வந்தது. முன்னைய ஆண்டுகளில் பரவலாகக் கொண்டாடப்பட்ட நிகழ்வு – இம்முறை பலராலும் நிராகரிக்கப்பட்டு – சமூக நிராகரிப்பின் உதாரணமாக மாறியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் Markham வீதியில் தெருவிழாவின் இரு தினங்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரவையின் பதில் நடவடிக்கை சமூகத்தின் கவலைகளை அதிகரித்தன. ஆர்ப்பாட்டங்களில் காவல்துறையினரின் துவிச்சக்கர வண்டி மோதியதில் ஒரு பெண் காயமடைந்தார். இந்த சம்பவம், ஆர்ப்பாட்டக்காரர்களை அதிகாரிகள் எதிர்கொள்ளும் காட்சிகளுடன், தமிழ் சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
சாவடி அமைக்கும் விற்பனையாளர்கள், கலைஞர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்கள் பங்களிப்பு குறித்து அவதானமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
2024 தெருவிழாவின் பாதுகாப்பிற்காக பேரவை முந்தைய ஆண்டுகளை விட கணிசமான அதிகரித்த தொகையை செலவிட்டுள்ளதை தகவல்கள் மூலம் தேசியம் உறுதிப்படுத்தியது. தெருவிழாவின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க பேரவை முயற்சித்ததையும், அதிகரித்த காவல்துறை அமுலாக்கத்தையும் கைதுகளையும் கோரியதையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தேசியத்திடம் பேசியபோது உறுதிப்படுத்தினர்.
தெருவிழாவில் சாவடி அமைத்த விற்பனையாளர்கள் பெரும் நிதி இழப்பை எதிர்கொண்டனர். அவர்கள் பணத்தைத் திரும்பத் தருமாறு கோரி பேரவையின் அலுவலகத்திற்கு சென்ற போது, அலுவலக கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. சமூகத்தை சந்திப்பதற்கு பதிலாக, Toronto காவல்துறையினர் மூலம் அவர்களுக்கு பதிலளிக்க முடிவு செய்தது பேரவை. கனடியத் தமிழரின் குரல் எனத் தம்மை நியாயப்படுத்துவதில் தனது இருப்பின் பெரும்பகுதியைச் செலவழித்து வரும் பேரவையின் நடவடிக்கைகள் அதற்கு முரணாக அமைந்துள்ளன என்ற நீண்ட கால குற்றச்சாட்டுக்கு இதைவிட தகுந்த உதாரணம் அமையாது.
இதுபோன்ற பின்னணியிலும் கூட்டுடனான பேரவையின் பேச்சுவார்த்தைகள் தேக்கமடையும் தன்மையை அடைந்துள்ள நிலையிலும் தெருவிழா 2025 நடைபெற உள்ளது. சமூகத்தில் உள்ள அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்காமல், பேரவையின் தலைமை குறித்த சமூகத்தின் கவலைகளை கருத்தில் கொள்ளாமல் கடந்த 18 மாத காலத்தை கடத்திய பேரவை மீண்டும் தெருவிழாவுக்கு அழைப்பு விடுகிறது. இந்த நிலையில் சாவடி அமைக்கும் விற்பனையாளர்கள், கலைஞர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்கள் பங்களிப்பு குறித்து அவதானமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
தவறுகளுக்கான பொறுப்புக்கூறல் இல்லாமல் தீர்வுக்கு எந்த வழியும் இல்லை. உண்மையில் தங்கள் குரலாக யார் உள்ளனர் – யார் தொடர்ந்து தங்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதை அறிய கனடிய தமிழர்கள் தகுதியுடையவர்கள்.
இந்த நிலையில் பேரவையிடம் கனடிய தமிழர் சமூகத்தின் கோரிக்கைகள் நியாயமானவை:
- ராஜ் தவரட்ணசிங்கத்தின் அடிப்படை உறுப்பினர் நிலை பேரவையினால் உடனடியாக நீக்கப்பட வேண்டும் – அவரது கருத்துகள் பேரவையின் நிலைப்பாடு அல்ல என்பதை பேரவை பொது வெளியில் அறிக்கையாக வெளியிட வேண்டும்.
- டான்டன் துரைராஜா பதவி விலக வேண்டும் – அல்லது அவரை பதவியில் இருந்து பேரவையின் நிர்வாகம் பணி நீக்கம் செய்ய வேண்டும்.
- தமிழ் தேசியம் குறித்த இழிவான நிலைபாட்டுக்காக பேரவை டில்ஷான் நவரட்ணராஜாவை இயக்குனர் சபையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
- பேரவையின் நிர்வாக மறுசீரமைப்புக்கு ஏதுவாக சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய இடைக்கால குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
பேரவைக்குள் மாற்றம் இனியும் ஒரு தெரிவல்ல!
இலங்கதாஸ் பத்மநாதன்
