கனடிய தமிழர் பேரவையின் (பேரவை / CTC) முன்னாள் தலைவர் ராஜ் தவரட்ணசிங்கம் பேரவைக்குள் நீண்ட காலமாக தொடரும் தலைமைத்துவத்தின் பரந்த தோல்விகளை தனது நடவடிக்கைகள் மூலம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றார். இந்த வருடத்தில் இரண்டு முறை, அவர் கனடிய தமிழரையும், அவர்களின் அரசியல் முயற்சிகளையும் கடுமையாக விமர்சித்து இரண்டு மின்னஞ்சல்களை அனுப்பி உள்ளார். முன்னர் அவர் தமிழ் இனப்படுகொலை, தமிழ் மரபுத் திங்கள் அங்கீகாரங்களையும், இவற்றுக்காக முன்னின்று செயற்பட்ட கனடியத் தமிழ் அரசியல்வாதிகளையும், தமிழ்ச் சமூகச் செயற்பாட்டாளர்களையும் கடுமையாகத் தாக்கி, கனடா முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகளுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்தார்.
கனடியத் தமிழரின் குரல் எனத் தம்மை நியாயப்படுத்துவதில், பேரவை தனது இருப்பின் பெரும்பகுதியைச் செலவழித்து வரும் பின்னணியில் இது போன்ற நகர்வுகள் அதற்கு முரணாக எவ்வாறு அமைந்துள்ளது என்பதை விளக்கும் முழுமையான கட்டுரை ஒன்றை தேசியம் வெளியிட்டது.
“தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?” என்ற தலைப்பிலான அந்த கட்டுரையை இங்கு வாசிக்கலாம்:
கட்டுரை: தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா? – தேசியம்
கட்டுரை ஒளி/ஒலி வடிவில்: www.youtube.com/watch?v=s0X68IEZud8&t=20s
இப்போது, Ontario பாடசாலைகளில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் குறித்த கல்வியை குறைமதிப்பிற்கு உட்படுத்த ராஜ் தவரட்ணசிங்கம் மீண்டும் முனைகிறார். முன்னர் போலவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு இது குறித்த மின்னஞ்சல் ஒன்றை அவர் அனுப்பி வைத்துள்ளார்.
பேரவையின் நிர்வாக மாற்றம் குறித்த கனடிய தமிழர் சமூகத்தின் தொடரும் அழைப்பை புதுப்பித்துள்ளது – நியாயப்படுத்தி உள்ளது.

இந்த நிலைப்பாடுகள் ராஜ் தவரட்ணசிங்கத்தின் தனிப்பட்ட கருத்துக்கள் இல்லை என்பதே பலரது விமர்சனமாக உள்ளது. அவர் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பேரவையின் நகர்வுகள், ஊடக செயல்பாடுகள், அரசியல் நிலைப்பாடுகளை வழிநடத்திய ஒருவராக இருந்துள்ளார். ராஜ் தவரட்ணசிங்கத்தின் இந்தக் கூற்றுகள் வெறும் முரண்பாடுகள் நிறைந்தவை மாத்திரமல்ல. அவை ஒரு பரந்த வடிவத்தின் மிகச் சமீபத்திய எடுத்துக்காட்டுகளாகும். இவை பேரவையின் நீண்டகால மௌனம், மறுப்பு, தமிழர் மறுதலிப்பு அரசியல் கலாச்சாரத்தில் வேரூன்றியுள்ளது. இவை ஒன்றும் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அல்ல. அவை பேரவையின் நிறுவன அதிகாரத்திலிருந்து துண்டிக்கப்பட்டவையும் அல்ல. தொடரும் இது போன்ற ராஜ் தவரட்ணசிங்கத்தின் இனவெறிப் பேச்சுகள் கடுமையான தொனியில் கண்டிக்கப்படவேண்டியவை. இவை பேரவை நோக்கிய சர்ச்சையை பூதாகரமாகியுள்ளது. பேரவையின் நிர்வாக மாற்றம் குறித்த கனடிய தமிழர் சமூகத்தின் தொடரும் அழைப்பை புதுப்பித்துள்ளது – நியாயப்படுத்தி உள்ளது.

மௌனம் என்பது ஒப்புதல்
தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த, தொடர்ந்து நிகழும் இனப்படுகொலையை மறுக்கும் ஒருவரை அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பதவியில் தொடர அனுமதிப்பது, அதற்கான ஒப்புதலாக நோக்கப்பட வேண்டியது.
இமாலயப் பிரகடனம், மகிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு போன்ற பின்னணியில் ராஜ் தவரட்ணசிங்கம் தனது ஆலோசகர் பதவியில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டாலும், அவரது அடிப்படை உறுப்பினர் நிலை இதுவரை நீக்கப்படவில்லை. அவர் அமைப்பினுள், அமைப்பைச் சுற்றி – இன்னும் செல்வாக்குடன் இயங்குகிறார். இந்த விடயத்தில் பேரவையின் தொடர் மௌனம் கனடிய தமிழர் சமூகத்துக்கு அவமதிப்பாகும். தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த, தொடர்ந்து நிகழும் இனப்படுகொலையை மறுக்கும் ஒருவரை அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பதவியில் தொடர அனுமதிப்பது, அதற்கான ஒப்புதலாக நோக்கப்பட வேண்டியது. இது ஒன்றும் தனிப்பட்ட ஒரு நபர் குறித்த விமர்சனமல்ல – இது தோல்வியை நோக்கி செல்லும் ஒரு அமைப்பின், ஒரு சமூகத்திற்கு எதிரான தொடர் நகர்வின் வெளிப்பாடாகும்.
பேரவையின் வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான இந்த நகர்வு முதல்முறையாக நிகழவில்லை:
- இலங்கை அரசின் ரூபவாஹினிக்கான அழைப்பு
- இமாலயப் பிரகடனம் – மகிந்த ராஜபக்சவுடன் சந்திப்பு
- இலங்கை அரசின் வெளிநாட்டு தலையீட்டை மௌனமாக ஏற்றுக்கொள்வது
- கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச் சின்னத்தை தடுக்கும் முயற்சியில் உதவியது
இந்தப் பட்டியல் இன்னும் நீண்டது!
இந்த முடிவுகளில் முக்கிய பங்காற்றியவர்கள் ராஜ் தவரட்ணசிங்கம் – நிர்வாக இயக்குநர் டான்டன் துரைராஜா.

இந்த நடவடிக்கைகள் தற்செயலானவை அல்ல. பேரவையினால் திட்டமிட்டு எடுக்கப்படும் தொடர்ச்சியான முடிவுகளை தமிழர் விரோதம் என்று மட்டுமே விவரிக்க முடியும். இவற்றையெல்லாம் வெறும் தவறுகளாக மாத்திரம் நோக்க முடியாது. அவை தலைமைத்துவ முடிவுகள். இவை திட்டமிட்ட பேரவையின் தலைமைத்துவத்தின் தீர்மானங்களே. இதில் ராஜ் தவரட்ணசிங்கம் இணை குற்றவாளி மாத்திரமே. இந்த முடிவுகளில் முக்கிய பங்காற்றியவர்கள் ராஜ் தவரட்ணசிங்கம் – நிர்வாக இயக்குநர் டான்டன் துரைராஜா. இவர்களே இவற்றுக்கு திட்டமிட்டவர்கள். இவர்களே இவற்றை செயல் படுத்தியவர்கள். இந்த முடிவுகளுக்கும் அவை சமூகத்தில் ஏற்படுத்திய தீங்குக்கும் அந்த முடிவுகளை எடுத்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
இந்த நிலையில் கனடிய தமிழர் சமூகத்தின் கோரிக்கைகள் நியாயமானவை:
- ராஜ் தவரட்ணசிங்கத்தின் அடிப்படை உறுப்பினர் நிலை பேரவையினால் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
- ராஜ் தவரட்ணசிங்கத்தின் கருத்துகள் பேரவையின் நிலைப்பாடு அல்ல என்பதை பேரவை பொது வெளியில் அறிக்கையாக வெளியிட வேண்டும்.
- டான்டன் துரைராஜா உடனடியாக பதவி விலக வேண்டும் – அல்லது அவரை பதவியில் இருந்து பேரவையின் நிர்வாகம் பணி நீக்கம் செய்ய வேண்டும்.
- பேரவையின் நிர்வாக மறுசீரமைப்புக்கு ஏதுவாக சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய இடைக்கால குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
இம்முறையும் தெருவிழா தோல்வியடையும் நிலைக்கு வந்தால், அதற்கான காரணம் மக்களோ அல்லது போராட்டக்காரர்களோ இல்லை. அது பேரவை தலைமையின் முழுத் தவறாகும்.
முன்னைய ஆண்டுகளில் பரவலாகக் கொண்டாடப்பட்ட தமிழர் தெருவிழா, 2024 -ஆம் ஆண்டு பேரவையின் தமிழர் விரோத போக்கினால் பலராலும் நிராகரிக்கப்பட்டு – சமூக நிராகரிப்பின் உதாரணமாக மாறியது. 2025-இல் தமிழர்கள் தெருவிழாவை புறக்கணிக்கும் முடிவை மீண்டும் எடுக்கும் போது, அல்லது மக்கள் ஆதரவு இழந்து, இந்த ஆண்டு தெருவிழா நடைபெறுவது சாத்தியமில்லாத நிலை ஏற்படும் போது, அதற்கு பேரவையின் இன்றைய நிர்வாகம் தன்னைத்தானே குறை கூற வேண்டும். இம்முறையும் தெருவிழா தோல்வியடையும் நிலைக்கு வந்தால், அதற்கான காரணம் மக்களோ அல்லது போராட்டக்காரர்களோ இல்லை. அது பேரவை தலைமையின் முழுத் தவறாகும்.
பேரவையில் உடனடி மாற்றம் அவசியமானது.

கடந்த 18 மாதங்களாக, தமது தவறுகளை ஏற்றுக் கொள்வதாக பேரவை தனிப்பட்ட முறையில் கூறியுள்ளதே தவிர, அவற்றில் எதுவும் தமிழர் சமூகம் எதிர்பார்க்கும் உண்மையான சீர்திருத்தம் அல்லது கட்டமைப்பு மாற்றத்திற்கு வழி வகுக்கவில்லை. அண்மைய மாதங்களில் “மன்னிப்பு” அல்லது “ஆழ்ந்த கவலை” என்ற சொற்தொடர்கள் உள்ளடக்கிய சில அறிக்கைகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவை மாற்றத்திற்கான அடிப்படை முயற்சிகள் இல்லை என்பதே நிதர்சனமாகும். பேரவையில் உடனடி மாற்றம் அவசியமானது. அது அவர்களின் மௌனம் என்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளியாக அமைய வேண்டும்.
இலங்கதாஸ் பத்மநாதன்
