ஆப்கானிஸ்தானில் கனடாவின் வெளியேற்ற முயற்சிகள் முடிந்துவிட்டதாக கனேடிய அதிகாரிகள் வியாழக்கிழமை காலை உறுதிப்படுத்தினர்.
இறுதி கனேடிய இராணுவ விமானம் காபூலில் இருந்து புறப்பட்டுள்ள நிலையில் ஆப்கானியர்களை மீட்கும் பணி முடிவடைகிறது என வியாழன் காலை அறிவிக்கப்பட்டது.
காபூலில் கனேடியப் பணி முடிவடைந்துவிட்டதாகவும், பெரும்பாலான கனேடியப் பணியாளர்கள் உள்ளூர் நேரப்படி வியாழன் காலை விமான நிலையத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் பாதுகாப்புப் பணியாளரின் செயல் தலைவர் Gen. Wayne Eyre கூறினார்.
காபூல் விமான நிலையத்தை விட்டு இறுதியாக வெளியேறியவர்களில் கனேடியர்களும் இருந்தனர் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து சுமார் 3,700 பேரை கனடா வெளியேற்றியதாகவும் அவர் கூறினார்.
விமான நிலையம் தொடர்ந்து தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியதாகவும், கனடாவும் அதன் நேச நாடுகளும் வியக்கத்தக்க வகையில் செயல்பட்டதாகவும் Eyre வியாழன் காலை நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தங்கி இருக்கும் மற்றும் வெளியேற விரும்புவோருக்கு இன்றைய அறிவிப்பு துன்பகரமான செய்தியாக இருக்கும் என்பதை அறிவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சு கூறுகின்றது.
August மாதம் 31ஆம் திகதியன்று அமெரிக்கா வெளியேறுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் கனடா வெளியேறியுள்ளது.
கனடாவின் வெளியேற்றம் குறித்த அறிவித்தல் வெளியான சில மணி நேரத்தில் காபூல் விமான நிலையத்தில் குண்டுத் தாக்குதல்கள் நிகழ்ந்தன.
இந்தத் தாக்குதல் குறித்து அறிந்துள்ளதாக கூறும் கனடிய ஆயுதப் படையினர், தமது அனைத்து உறுப்பினர்களும் பாதுகாப்பாக உள்ளதை உறுதிப்படுத்தினர்.
ஆப்கானிஸ்தானில் இன்னும் எத்தனை கனேடியர்கள் எஞ்சியிருக்கிறார்கள் என்பதை தீர்மானிக்க மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது.