Markham நகர இல்லத்தில் இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழ் பெண் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவரும், வளர்ப்பு நாயும் பலியாகினர்.
இதில் மற்றொரு ஆண் படுகாயமடைந்தார்.
வெள்ளிக்கிழமை (07) காலை 6:30 மணியளவில் நெடுந்தெரு 48 – Castlemore வீதிகளுக்கு அருகில் உள்ள Solace வீதியில் உள்ள இல்லம் ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இதில் 20 வயதான நிலக்சி ரகுதாஸ் என்ற தமிழ் பெண் பலியானார்.
இவர் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டார்.
இந்தத் தாக்குதலின் போது German Shepherd நாய் ஒன்றும் உயிரிழந்துள்ளதாக York பிராந்திய காவல்துறையினர் கூறினர்.
இந்த சம்பவம் இலக்கு வைக்கப்பட்ட துப்பாக்கிச் சூடு என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பிட இல்லம் கடந்த காலங்களில் பல முறை குறி வைக்கப்பட்டது என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
2018 ஆம் ஆண்டு முதல் இந்த இல்லத்தின் மீது குறைந்தது ஐந்து முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த வருடம் மாத்திரம் இதுபோன்ற மூன்று சம்பவங்கள் குறித்து விசாரித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவங்களில் சந்தேகத்திற்குரிய நபர்கள் தூரத்தில் இருந்து குறிப்பிட இல்லத்தை நோக்கி சுட்டதாக தெரியவருகிறது.
இந்த சம்பவம் குறித்த விசாரணை காவல்துறைனர் ஆரம்பித்துள்ள நிலையில், இந்த கொலைக்கான சாத்தியமான நோக்கம் குறித்து ஊகிக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு சந்தேக நபர்கள் புதிய ரக, கருப்பு நிறமுடைய, நான்கு கதவுகள் கொண்ட Acura TLX வாகனத்தில் குறிப்பிட இல்லத்தில் இருந்து வேகமாக செல்வதை கண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால் சந்தேக நபர்கள் குறித்து விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.