இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக கனடிய அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என Brampton நகர முதல்வர் Patrick Brown கோரியுள்ளார்.
கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Jolyக்கு இந்த கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றை Patrick Brown அனுப்பி உள்ளார்.
Brampton நகரில் அமையவிருக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவு தூபிக்கான அடிக்கல் புதன்கிழமை (14) நாட்டப்பட்டது.
இந்த முயற்சியை கைவிடுமாறு கோரும் இரண்டு கடிதங்களை கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் Thushara Rodrigo Brampton நகர முதல்வர் Patrick Brownக்கு அனுப்பியிருந்தார்.
இந்தக் கடிதங்களை மேற்கோள் காட்டி, கனடிய உள்நாட்டு விடயங்களில் இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான வெளிநாட்டு தலையீடுகள் குறித்து கவனம் செலுத்த Patrick Brown கனடிய வெளிவிவகார அமைச்சரை கோரியுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்த கனடிய தமிழர் பேரவை – CTC – போன்ற அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை இந்த நினைவுத் தூபி அமைக்கும் முயற்சி தடம்புரளச் செய்யும் என இந்தக் கடிதங்களில் கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர், Brampton நகர முதல்வரை எச்சரித்திருந்தார்.
இலங்கை அரசாங்கத்தின் இது போன்ற வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக கனடிய அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என Brampton நகர முதல்வர் Patrick Brown தனது கடிதத்தில் கோரியுள்ளார்.