இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக கனடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Brampton நகர முதல்வர் Patrick Brown இந்த வலியுறுத்தலை முன்வைத்தார்.
Brampton நகரில் அமையவிருக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவு தூபிக்கான அடிக்கல் புதன்கிழமை (14) நாட்டப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய Patrick Brown, கனடிய உள்நாட்டு விவகாரங்களில் இலங்கை அரசாங்கத்தின் தலையீடுகளை கண்டு அஞ்ச போவதில்லை என கூறினார்.
இலங்கையில் தமிழர்கள் தமது அன்புக்குரியவர்களை நினைவு கூறுவதை தடுக்கும் அரசாங்கம், கனடாவில் அவ்வாறு செய்ய முடியாது எனவும் Patrick Brown தனது உரையில் சுட்டிக் காட்டினார்.
புதன்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வில், இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவான போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நினைவுத் தூபியை அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு Brampton நகர முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் Thushara Rodrigo கோரியிருந்தது அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது.
இலங்கையில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்த CTC போன்ற தமிழ் அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை நினைவுத் தூபி அமைக்கும் Brampton நகரின் முயற்சி தடம்புரளச் செய்யும் என இந்தக் கடிதத்தில் கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் எச்சரித்திருந்தார்.
இலங்கை அரசின் இந்த முயற்சியை கனடாவில் வெளிநாட்டு தலையீடாக கருத இடம் உள்ளது என கனடிய தமிழர் கூட்டு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.