கனடாவில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் துணைத் தூதரகத்துடன் கனடிய தமிழர் பேரவையின் (CTC) சுமூகமான உறவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் புதிய தகவல் அம்பலமாகியுள்ளது.
Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியை அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு Brampton நகர முதல்வர் Patrick Brownக்கு எழுதியுள்ள கடிதத்தில் கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் Thushara Rodrigo வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஏற்படுத்த CTC போன்ற தமிழ் அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை நினைவுத் தூபி அமைக்கும் Brampton நகரின் முயற்சி தடம்புரளச் செய்யும் என இந்தக் கடிதத்தில் கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் எச்சரித்துள்ளார்.
HD எனப்படும் இமாலயப் பிரகடன கட்டமைப்பின் கீழ் பௌத்த பிக்குகளுடன் CTC முன்னெடுத்த நகர்வுகளின் முக்கியத்துவம் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இமாலய பிரகடனத்துடன் தொடர்பில்லை என CTC மறுத்தாலும், இந்தக் கடிதம் அதன் உண்மை தன்மையை கேள்விக்கு உட்படுத்துகிறது.
Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதை எதிர்க்க CTC பயன்படுத்தப்படுகிறது என்பதை இந்தக் கடிதம் உறுதிப்படுத்துகிறது.
கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர், Brampton நகர முதல்வருக்கு அனுப்பிய இந்தக் கடிதத்தின் பிரதி கனடிய தமிழர் கூட்டினால் பெறப்பட்டு அதன் விபரங்கள் மக்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ் சமூகத்தின் நம்பிக்கைக்கு CTC தொடர்ந்தும் துரோகம் இழைத்து வருவதை இந்தக் கடிதம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என கனடிய தமிழர் கூட்டு குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கை அரசின் இந்த முயற்சியை கனடாவில் வெளிநாட்டு தலையீடாக கருத இடம் உள்ளது என கனடிய தமிழர் கூட்டு தெரிவிக்கிறது.
கனடிய தமிழர்களுக்கு எதிரான CTC இன் இதுபோன்ற நடவடிக்கை கனடாவில் உள்ள தமிழர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை குறைத்து மதிப்பிடுகிறது எனவும் கூட்டு கூறுகிறது.
கனடாவில் இலங்கை அரசின் தலையீட்டை CTC உடனடியாக கண்டிக்க வேண்டும் என கூட்டு கோரியுள்ளது.
அதேவேளை இனப்படுகொலை நினைவுச் சின்னம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை CTC தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கூட்டு வலியுறுத்தியுள்ளது.
இந்தக் கடிதம் குறித்து கருத்து தெரிவிக்க கனடிய தமிழர் பேரவை, கனடாவுக்கான இலங்கை துணைத் தூதரகம், Brampton நகர முதல்வர் ஆகியோரை தேசியம் தொடர்பு கொண்டுள்ளது.
இது குறித்து அவர்களின் தரப்பு கருத்து கிடைக்கப் பெறும் நிலையில் – அவற்றை பொது வெளியில் பகிர தேசியம் தயாராக உள்ளது.