தெற்கு Manitobaவில் 3 குழந்தைகள், 2 பெண்கள் இறந்ததை அடுத்து சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்
மூன்று இடங்களில் ஐந்து சந்தேகத்திற்கிடமான மரணங்கள் குறித்து RCMP விசாரணை நடத்தி வருகின்றது.
ஞாயிற்றுக்கிழமை (11) காலை 7.30 மணியளவில் இந்த விசாரணை ஆரம்பித்ததாக RCMP தெரிவித்தது.
Carman, Manitobaவில் நெடுஞ்சாலை 3 இல் வாகன விபத்து குறித்த விசாரணைக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.
அங்கு ஒருவரை மோதிய வாகனம் சம்பவ இடத்தில் தரித்து நிற்காமல் சென்றது.
சம்பவ இடத்தில் பள்ளத்தில் ஒரு பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் மீட்டனர்.
அவர் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, Cartier, Manitobaவில் நெடுஞ்சாலை 248 இல் வாகனம் ஒன்று தீப்பிடித்ததாக RCMPக்கு காலை 10 மணியளவில் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றடைய முன்னர், எரிந்து கொண்டிருந்த வாகனத்தில் இருந்து மூன்று இளம் குழந்தைகள் ஒருவரினால் வெளியேற்றப்பட்டனர்
இந்த மூன்று குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வாகனம் தீப்பிடித்த இடத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அதிகாரிகள் தொடர்ந்த விசாரணையை அடுத்து Carman, Manitobaவில் ஒரு இல்லத்தில் இருந்து மற்றொரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
இந்த மூன்று சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என காவல்துறையினர் கூறினர்.
ஐந்து மரணங்களும் சந்தேகத்திற்குரியதாக கருதப்படுகிறது.
29 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
இவர் மீது குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரை சுமத்தப்படவில்லை.
இந்த சம்பவத்தால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்
சந்தேக நபரும் மரணமடைந்தவர்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
ஆனாலும் சந்தேக நபர் அல்லது மரணமடைந்தவர்களின் அடையாளங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.
இந்த சம்பவங்கள் குறித்து RCMP அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.