Scarboroughவில் அமையவுள்ள முதல் கனடிய தமிழ் சமூக மையத்தின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்தது. ஞாயிறன்று நடைபெற்ற பொது கூட்டத்தில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் இதுவரை செயல்பட்ட நிர்வாக சபை உறுப்பினர்களினால் தெரிவு செய்யப்பட்டனர்.
இரகசிய வாக்கெடுப்பு மூலம் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இந்த நிலையில் புதிதாக தெரிவான உறுப்பினர்களின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக விரைவில் வெளியாகும் என தெரியவருகிறது.
புதிய நிர்வாக சபையில் தன்னார்வ தொண்டராக செயல்படுவதற்கென 25க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர். இவர்களில் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த தெரிவு, அதனுடன் தொடர்புள்ள பொது கூட்டம் தொடர்பான கேள்விகள் சில
1) புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் ஏன் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டனர்?
2) ஒரு பொது அமைப்பில் ஜனநாயக முறைப்படி பகிரங்கமாக நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிலை கூட கனடாவில் இல்லையா?
3) புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் தெரிவு இரகசிய வாக்கெடுப்பின் மூலம் நிகழுமென்றால் ஏன் ஒரு பொது கூட்டம் நடைபெறவேண்டும்?. இந்த தெரிவை வழமையான நிர்வாக சபை கூட்டத்தில் நிகழ்த்தி முடிவை அறிவித்திருக்கலாமே!
3) இந்த பொது கூட்டத்திற்கு ஏன் ஊடகங்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்படவில்லை?. ஊடகம் என்ற பெயரில் சிலருக்கு தனிப்பட்ட அழைப்பு மாத்திரம் விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் நேரடியாக “தனிப்பட்ட முறையில்” விடுத்துள்ளார் என தெரிய வருகிறது. இவ்வாறு தனிப்பட்ட அழைப்பு விடுக்க அந்த உறுப்பினருக்கு யார் அனுமதி வழங்கியது? ஏன் அந்த உறுப்பினர் தனக்கு இணக்கமானவர்களை மாத்திரம் இந்த கூட்டத்திற்கு அழைத்தார்?
புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவை உறுதிப்படுத்தும் அறிக்கை வெளிவருகையில் இந்த கேள்விகளுக்கான பதில்கள் வழங்கப்பட வேண்டும்!
இது தொடர்பான தவறுக்கு பொது வெளியில் விளக்கம் வழங்கப்படவும் வேண்டும்!
தமிழ் சமூக மையம் என்பது தனி நபரோ அல்லது உறுப்பினர்கள் கொண்ட ஒரு நகர்வல்ல. நகர, மாகாண, மத்திய அரசுகளில் பெரும் நிதி உறுதிப்பட்டில் முன்னெடுக்கப்படும் ஒரு திட்டம். இதை கனடாவில் இயங்கும் சில தனிநபர் கட்டுப்படுத்தும் (individual controlled) அமைப்புக்களின் திட்டம் போன்று மாற்றிவிட வேண்டாமே!
இந்த “individual controlled” அமைப்புக்களால் சமூகம் எதிர்கொண்ட – எதிர்கொள்ளும் – எதிர்கொள்ளப் போகும் சவால்கள் அனைவரும் அறிந்ததே!