தேசியம்
கட்டுரைகள்பத்மன்பத்மநாதன்

ஓராண்டு முடிவில் Wet’suwet’en பழங்குடி மக்களின் போராட்டங்கள் பயனளித்தனவா?

கடந்த February மாதம் 10 ஆம் திகதி , 2020 ஆம் ஆண்டு அன்று, வடமேற்கு British Columbiaவின் Unist’ot’en முகாமில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டமை, தேசிய பொருளாதாரத்தை முடக்கும் நோக்குடன் நாடு முழுவதும் அவர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளைத் தூண்டுவதற்கு காரணமானது.

பழங்குடி மக்களின் உரிமைகள் குறித்து குறைந்தபட்சம் ஒரு கணமாவது கனடா கவனம் செலுத்தியது. ஒரு வருடம் கழித்து, சிறிய மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகத் தோன்றலாம். ஆனால், பல ஆண்டுகால எதிர்ப்பிற்குப் பிறகு, Wet’suwet’en பூர்வீகத் தலைவர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த அரசாங்கத்துடனான உறவில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளனர்.

கடந்த குளிர்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் துறைமுகங்கள், பாலங்கள், எல்லை தாண்டிய பயணங்கள், புகையிரதப் போக்குவரத்திற்கு தடையாகவிருந்தன.

கனேடிய புகையிரதங்கள் ஒவ்வொரு நாளும் எடுத்துச் செல்லும் 425 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் நிர்கதியாகி விரயமாகின.

COVID-19 பரவல், அதன் விளைவாக ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார முடக்கம் என்பன முற்றுகை, ஆர்ப்பாட்டங்கள், அவற்றின் பின்விளைவுகள் பற்றிய செய்திகளை மறைத்திருக்கலாம், ஆனாலும் Wet’suwet’en பழங்குடியினரின் எதிர்ப்பு தொடர்ந்தது.

பெருந்தொற்று முடக்கத்திற்கு மத்தியில், May 14 ஆம் திகதி Wet’suwet’en பூர்வீகத் தலைவர்கள் கனேடிய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டு, ஒரு மைல்கல்லை எட்டினர்.

இந்த ஒப்பந்தம் நிலங்கள் மீதான அவர்களின் அதிகாரத்தை அங்கீகரிப்பதுடன், பகிரப்பட்ட ஆட்சியெல்லை தொடர்பான பேச்சுவார்த்தைக்கான ஒரு செயன்முறையை கோடிட்டுக் காட்டுகிறது.நில உரிமைகளை Wet’suwet’en மக்களின் மரபார்ந்த அதிகார அமைப்புக்கள் வைத்திருப்பதை அங்கீகரிக்கும் வகையில், “அவர்களின் நிர்வாக முறையின் கீழ்” என தலைப்பிட்டு மாகாண மற்றும் கனேடிய அரசாங்கங்களின் அங்கீகாரத்தை இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்துகிறது.

இந்த ஒப்பந்தமானது  மாகாணக் கொள்கையில் வெளிப்படையான மாற்றத்தைக் குறிக்கிறது. பழங்குடியினரின் நில உரிமைகளை முனைப்புடன் அங்கீகரிப்பதற்கும், நிலத்தின் மீதான பகிரப்பட்ட ஆட்சி எல்லைக்கான பேச்சுவார்த்தைக்கும் மாகாணம் தனது விருப்பத்தை வெளிப்படுத்திய முதல் நிகழ்வாக இது அமைந்துள்ளது .


பழங்குடியினரின்  நிர்வாக மரபுகளை வெறுமனே அகற்ற வேண்டிய ஒரு வரலாற்று எச்சமாகக் கருதாமல், மாகாண வளங்களை முகாமைத்துவம் செய்யும் எதிர்காலத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கருதி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவதை இது பிரதிபலிக்கிறது.

பழங்குடி மக்களின் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகி தற்போது ஒரு வருடம் கழிந்துவிட்ட நிலையில், பகிரப்பட்ட ஆட்சி எல்லை மாகாண அரசாங்கத்திற்கும் பழங்குடியினத் தலைவர்களுக்கும் இடையில் எவ்வாறு செயற்படுகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியாத விடயமாக உள்ளது.

இயற்கை வளங்களை விற்பனைப் பொருட்களாகக் கருதும் சட்ட கருத்தியல்களும், நிலத்தை புனிதமாகக் கருதும் Wet’suwet’en பழங்குடியினரின் பொறுப்புகளும் எவ்வாறு ஒப்பந்தம் செய்துகொள்ள முடியும்? வரலாறு எதையேனும் சுட்டிக்காட்டுவதாக இருந்தால், மாகாணம் இன்னமும் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

கடலோர குழாய் வழி எரிவாயு திட்டம் (Coastal GasLink project) தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் எவ்வித விடயமும் உள்ளடக்கப்படவில்லை. எவ்வாறாயினும், பழங்குடி மக்களின் பூர்வீகத் தலைவர்கள் அந்தத் திட்டத்தை சுற்றியுள்ள மோதலை திறம்படக் கையாண்டு, இறுதியில் நீண்ட காலமாக எதிர்பார்த்த தமது நில உரிமைகளுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

மேலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஒரு உடன்படிக்கையாக வைத்துக்கொள்ளாமல் , நிலம் மீதான பழங்குடி மக்களின் அதிகாரத்தை பாதுகாக்கும் வகையில், முற்றிலும் வேறுபட்ட உடன்படிக்கைக்கான பேச்சுவாத்தைக்கு அரசாங்கம் முன்வந்திருப்பதைக் காட்டுகிறது.

இந்த உடன்படிக்கை நடைமுறையில் இருப்பதால், பழங்குடியின  மக்களின் பூர்வீகத் தலைவர்கள் தற்போது வள இணை முகாமைத்துவம் தொடர்பில் மாகாண அரசை  எவ்வாறு அணுக விரும்புகிறார்கள்.

பூர்வீகத் தலைவர்களுக்கும் ஒதுக்கீட்டு தலைமைத்துவத்திற்கும் இடையிலான ஆக்கபூர்வமான உறவை எவ்வாறு உருவாக்க விரும்புகிறார்கள் என்பது பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபட முடியும். அதாவது, பழங்குடியினரின் பூர்வீகத் தலைவர்கள் எதிர்காலத்தில் நில நிர்வாகத்தில் பங்காற்றுவதை அரசாங்கம் இறுதியாக அங்கீகரித்திருக்கிறது.

இந்த ஒப்பந்தம் குழாய்வழி எரிவாயு தொடர்பான மோதலைத்  தீர்க்கவில்லை. போராட்டங்கள் சற்றுத் தணிந்துள்ள நிலையில், Wet’suwet’en பழங்குடியின பூர்வீகத் தலைவர்கள் நீதிமன்றங்களை நாடி, குழாய்வழி எரிவாயுத்  திட்டத்துக்கான மாகாண அரசின் ஒப்புதல் குறித்து நீதித்துறை மீளாய்வு செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Wet’suwet’en பழங்குடியினர் மத்தியில் காணப்படும் வேறுபாடுகளாவன:  தேர்ந்தெடுக்கப்பட்ட இணை அரசாங்கங்கள் புதிய கட்டமைப்பை எதிர்க்கின்றன. மேலும், தொழில்துறை ஆதரவுடைய அதிருப்தியாளர்கள், குழுக்கள் மத்தியில் சிறுபான்மையினராகவிருந்தாலும் பூர்வீகத் தலைவர்களுக்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றனர்.

குழாய்வழி எரிவாயு பிரச்சினையை விட Wet’suwet’en நிலப் போராட்டம் மிகப்பெரியது. நிலத்தை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பது பற்றியது.

பகிரப்பட்ட ஆட்சி எல்லைக்கான பேச்சுவார்த்தைக்கு பழங்குடியின பூர்வீகத் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பது, அனைத்து கனேடியர்களுக்கும் நிலத்துடன் ஒரு பரஸ்பர உறவை உருவாக்குவதற்கான அழைப்பாகும்.

இதனை வெறுமனே ஒரு ஒப்பந்தமாகவோ, சமரசம் என்றோ அல்லாமல் ஒரு வெகுமதியாகவே பார்க்க வேண்டும்.

பத்மன் பத்மநாதன்

(தேசியம் சஞ்சிகையின் March 2021 பதிப்பில் வெளியான கட்டுரை)

Related posts

2021 Ontario மாகாண வரவு செலவு திட்டம் – ஒரு பார்வை

Gaya Raja

தேர்தல் 2021 நேருக்கு நேர் விவாதம் – வென்றது யார்?

Gaya Raja

முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலை ;உண்மையும் நல்லிணக்கமும்

Gaya Raja

Leave a Comment