December 12, 2024
தேசியம்
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னிட்டு பிரதமர் அறிக்கை

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டுப் பிரதமர் Justin Trudeau அறிக்கை ஒன்றை வெளியிட்டார்

முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட்ட அர்த்தமற்ற வன்முறையால் ஏற்பட்ட வேதனையுடன் வாழும் போரால் பாதிக்கப்பட்டவர்கள், தப்பிப்பிழைத்தோர், அவர்களது அன்புக்குரியோரை நினைவில் கொள்கிறோம் என தனது அறிக்கையில் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்களதும், தப்பிப் பிழைத்தோரதும் உரிமைகளுக்காகவும், இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொள்வோருக்காகவும் குரல் கொடுப்பதைக் கனடா நிறுத்தமாட்டாது என Justin Trudeau கூறினார்.

May மாதம் 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாகப் பிரகடனம் செய்யும் பிரேரணையை கனடிய நாடாளுமன்றம் கடந்த ஆண்டில் ஒருமனதாக நிறைவேற்றியதை தனது அறிக்கையில் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

பிரதமரின் முழுமையான அறிக்கை

முதலாவது தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டுப் பிரதம மந்திரி வெளியிட்ட அறிக்கை

“இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின்போது ஏற்பட்ட துயர்நிறைந்த உயிரிழப்புகள் குறித்து இன்று நாம் ஆழ்ந்து சிந்திக்கிறோம். முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட்ட சம்பவங்களில் பல பத்தாயிரம் தமிழர்கள் உயிரிழந்து, மேலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள், காயமடைந்தார்கள் அல்லது இடம்பெயர்க்கப்பட்டார்கள். அர்த்தமற்ற இந்த வன்முறையால் ஏற்பட்ட வேதனையுடன் வாழும் போரால் பாதிக்கப்பட்டவர்கள், தப்பிப்பிழைத்தோர் மற்றும் அவர்களது அன்புக்குரியோர் ஆகியோரை நாம் இன்று நினைவில் கொள்கிறோம்.

“நாடு முழுவதிலும் நான் கடந்த பல ஆண்டுகளில் சந்தித்தவர்களின் அனுபவங்கள் உட்பட, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்க் கனேடியர்களின் அனுபவங்கள் – மனித உரிமைகள், சமாதானம், ஜனநாயகம் என்பன குறைத்து மதிப்பிடப்படக் கூடாதென்பதற்கான நீடித்திருக்கும் நினைவூட்டலாக அமைகின்றன. இதன் காரணமாகவே, மே 18 ஐ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாகப் பிரகடனம் செய்யும் பிரேரணையை நாடாளுமன்றம் கடந்த ஆண்டில் ஒருமனதாக நிறைவேற்றியது. இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்களதும், தப்பிப் பிழைத்தோரதும் உரிமைகளுக்காகவும், இலங்கையில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்கொள்வோருக்காகவும் குரல் கொடுப்பதைக் கனடா நிறுத்தமாட்டாது.

“இலங்கையில் நிலவும் மனித உரிமைகள், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசிடம் கோரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை எமது சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து 2022 ஆம் ஆண்டு ஒக்ரோபரில் நாம் நிறைவேற்றினோம். இலங்கையில் எதிர்வரும் ஆண்டுகளில் சமாதானத்தையும், மீளிணக்கத்தையும் அடைவதற்கு இன்றியமையாத அம்சங்களான மதம், நம்பிக்கை, பன்மையியல் ஆகியவற்றின் சுதந்திரத்தை வலியுறுத்தும் வேறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதில் கனடா உலக நாடுகளுக்குத் தலைமைத்துவம் வழங்கியுள்ளதுடன், உலகம் முழுவதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நாம் தொடர்ந்தும் செயலாற்றுவோம். அத்துடன், இலங்கைத் தீவில் புரியப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக இலங்கை அரச அதிகாரிகள் நான்கு பேர் மீது 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் எமது அரசு தடைகளையும் விதித்தது.

“தமிழ்க் கனேடியர்கள் எமது நாட்டுக்கு ஆற்றிய மற்றும் தொடர்ந்து ஆற்றிவரும் பல்வேறு பங்களிப்புகளையும் கண்டுணருமாறு கனேடிய அரசின் சார்பாக அனைத்துக் கனேடியர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இலங்கையில் ஆயுதப் போரினால் ஏற்பட்ட தாக்கம் பற்றி அறிந்துகொள்ளுமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும் ஆதரவை வெளியிடுமாறும் அனைவரையும் ஊக்குவிக்கிறேன்.”

Related posts

உக்ரைனில் இனப்படுகொலை: கனேடிய நாடாளுமன்றத்தில் பிரேரணை

Lankathas Pathmanathan

கனடா ரஷ்யாவுடனான போரை தவிர்க்க வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

நிறைவுக்கு வந்தது Liberal அமைச்சரவை சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment