மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உட்பட நான்கு இலங்கை அரச அதிகாரிகள் மீது கனடா தடைகளை விதித்துள்ளது.
2009 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் விளங்கிய மஹிந்த ராஜபக்ச, அதே காலப் பகுதியில் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த அவரது சகோதரன் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீது கனடா தடைகளை விதித்துள்ளது.
தவிரவும் இலங்கை இராணுவத்தின் ஸ்ராவ் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, கடற்படை புலனாய்வு அதிகாரி லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் மீதும் செய்வாய்க்கிழமை (10) தடைகள் அறிவிக்கப்பட்டன.
இலங்கை ஆயுதப் போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பான நான்கு இலங்கை அரச அதிகாரிகள் மீது சிறப்புப் பொருளாதார ஏற்பாடுகள் சட்டத்திற்கு அமைவாக இந்த தடைகள் அறிவிக்கப்பட்டன.
கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly இந்த தடைகளை அறிவிக்கும் அறிவித்தலை வெளியிட்டார்
சிறப்புப் பொருளாதார ஏற்பாடுகள் சட்டத்தின் விதிகள் தடை விதிக்கப்படுவோருடனான வணிகத் தொடர்புகளைத் தடை செய்வதால் கனடாவில் இருக்கக்கூடிய அவர்களது சொத்துக்கள் உறை நிலையில் வைக்கப்படுகிறது.
அதேவேளை குடிவரவு, அகதிகள் பாதுகாப்புச் சட்டப்படி அவர்கள் கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவதும் தடுக்கப்படுகிறது.
இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களிற்கு தண்டனையின் பிடியிலிருந்த விலக்களிக்கப்படுவதை கனடா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்பதற்கான உறுதியான செய்தி இன்றைய தடை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.