போர்க் குற்றவாளிகள் மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச உட்பட நான்கு பேர் மீது கனடா விதித்த தடைகளை பலரும் வரவேற்று வருகின்றனர் .
இலங்கை அரச அதிகாரிகளுக்கு எதிராக கனடா விதித்துள்ள பொருளாதார தடைகளை மாகாண சபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் வரவேற்றுள்ளார்.
தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதியையும் பொறுப்புக்கூறலையும் எதிர்கொள்ளும் நிலையில் இன்றைய அறிவித்தல் சரியான திசையை நோக்கிய ஒரு படியாகும் என Scarborough-Rouge Park மாகாண சபை உறுப்பினரான அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அதிகாரிகள் மீது பிறப்பித்துள்ள கனடிய அரசாங்கத்தின் தடைகளைக் கனடியத் தமிழர் பேரவை வரவேற்றுள்ளது.
போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் இலங்கையின் மீது எழுந்த நிலையில், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதை தனது அறிக்கையில் கனடியத் தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறல்களுக்கு காரணமானவர்கள் மீது தடைகளை விதித்ததற்காக கனடிய அரசாங்கத்திற்கு கனடியத் தமிழர் தேசிய அவை நன்றி தெரிவித்துள்ளது.
தமிழ் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலில் இன்றைய தடை அறிவித்தல் ஒரு மிக முக்கியமான படியாகும் என கனடியத் தமிழர் தேசிய அவை நம்பிக்கை தெரிவித்துள்ளது.