வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக திங்கட்கிழமை கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் Ambassador பாலம் காலை முதல் மாலை வரை மூடப்பட்டிருந்தது.
Windsor, Ontarioவுக்கும் – Detroit, Michiganனுக்கும் இடையேயான பாலத்தின் கனேடியப் பக்கத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக காவல்துறையினர் திங்களன்று காலை வரவழைக்கப்பட்டனர்.
இரண்டாம் நிலை ஆய்வு பகுதியில் வாகனத்திற்குள் வெடிபொருட்கள் இருந்த சந்தேகத்தில் கனடா எல்லை சேவை நிறுவனத்தால் தங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக Windsor காவல்துறையினர் கூறுகின்றனர்.
குறிப்பிட்ட வாகனத்தின் சாரதி மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அவர் CBSAயின் காவலில் இருப்பதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்
இந்த சம்பவத்தில் வேறு எந்த நபருக்கும் தொடர்பு இருப்பதாக நம்பப்படவில்லை.
அமெரிக்காவிலிருந்து கனடா வரும் போக்குவரத்துக்கு பாலம் மூடப்பட்ட நிலையில், Windsor காவல்துறையின் வெடிபொருள் அகற்றும் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது.
மாலை 5 மணிக்கு முன்னதாக பாலத்தில் இயல்பான நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பித்தது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரின் விசாரணை தொடர்கின்றது.