COVID தடுப்பூசி பெறுவது குறித்த தயக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் பல்கலாச்சார இனரீதியிலான செய்தி ஊடகங்களை இணைத்துக் கொள்ளல் தற்போதைய சூழலில்
அவசியமாகின்றது.
அண்மைய நாட்களில், கனடா முழுவதிலும் உள்ள மருத்துவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதில்உள்ள தயக்கத்தை எதிர்த்துப் போராட வெவ்வேறு கலாசாரங்களுடன் உரையாடல் செய்யும் திறன் கொண்ட பரப்புரைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஆனால், எமது தேவை அதை விட அதிகமாக உள்ளது. நீண்ட கால பராமரிப்பு இல்லங்களில், அதிக அபாயமுள்ள சூழலில் பணியாற்றுகின்ற போதிலும், வயோதிபர்களுக்கும் நோயாளர்களுக்கும் தனிப்பட்ட சுகாதார உதவிகளை வழங்கும் தொழிலாளர்கள் (personal support workers – PSWs) கொரோனாவுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு மறுப்பதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
மேலே குறிப்பிட்டவர்கள் அடங்கலாக அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் பலரும் பெரிதும் இனமயமாக்கப்பட்டவர்களாக உள்ளனர்.
நாடெங்கிலும் அதிகளவான COVID 19 தொற்றாளர்களைக் கொண்ட பகுதிகளாக புதிதாக கனடிய குடியுரிமையைப் பெற்றவர்களையும் புலம் பெயர்ந்தோரையும் கொண்டுள்ள பகுதிகள் (population centres) உள்ளன.
அதை அறிந்ததும், அரசாங்கம் பொது சுகாதார அறிவிப்புகளை முடிந்தவரை பல்கலாச்சார செய்தி ஊடகங்களில் வெளியிடும் என நீங்கள் கற்பனை செய்யலாம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது அவ்வாறு நடக்கவில்லை.
கனேடிய அரசாங்கம் ஆங்கிலம், பிரஞ்சு தவிர 11 மொழிகளில் மட்டுமே விளம்பரம் செய்கிறது. எந்தவொரு அரசாங்க விளம்பரங்களையும் தங்கள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளாத பல செய்தி ஊடகங்கள் நாட்டில் உள்ளன.
சில மருத்துவர்கள் நேரடியான அனுபவத்திலிருந்து அறிக்கை செய்துள்ளதற்கிணங்க
பல்கலாச்சார ஊடகங்களுக்கான அணுகல் சில சந்தர்ப்பங்களில் இருப்பதில்லை.
COVID பெருந்தொற்று தாக்கிய போது, பல்கலாசார ஊடகங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டன.
பல்கலாசார (இன ரீதியிலான) செய்தித்தாள்கள், வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் விளம்பரதாரர்களில் பெரும்பாலானோர் சிறு வர்த்தகர்கள். நிகழ்வுகள், கருத்தரங்குகளின் தொகுப்பாளர்கள் என அனைத்து துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பல்கலாசார செய்தி நிறுவனங்கள் சிலவற்றுக்கு சில அரசாங்க உதவிகள் சென்றடைந்தாலும், பலவற்றிற்கு, விளம்பரத்தின் வீழ்ச்சி பெரும் பின்னடைவாக இருந்தது. எந்தவொரு அரசாங்க உதவியும் பல ஊடகங்களுக்கு கிடைக்கவில்லை.
இதன் காரணத்தால், ஊடக நிறுவனங்கள் பல மூடப்பட்டன, முற்றிலும் digital மயமாகின,வௌியீட்டு காலத்தைக் குறைத்தன, ஊழியர்களை பணி நீக்கின, வௌியீட்டு சுழற்சியைக் குறைத்தன அல்லது மேற்சொன்னவற்றில் பல விடயங்களைச் செய்தன.
இது நாளுக்கு நாள், புதிய கனேடியர்களுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் நம்பகமான, துல்லியமான செய்திகள் கிடைப்பதைக் குறைத்தன. தகவல்களுக்காக அச்சிடப்பட்ட தமது இனம் (மொழி) சார் பத்திரிகைகளை சார்ந்திருக்கும் ஆங்கிலம் பேசாத முதியவர்களுக்கு, செய்திகளைப் பெறுவதற்கான வாய்ப்பு குறைந்தது அல்லது குறைக்கப்பட்டது.
அவர்கள் தற்போதும் ஒரு செய்தித்தாளைப் பெறுகிறார்கள் என்றாலும், அச்செய்தித்தாள் அரசாங்க மூலங்களிலிருந்தான துல்லியமான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே இன்னும் மோசமான விடயமாகும்.
இதனால், COVID தொற்று, அதற்கான தடுப்பூசி குறித்தான தவறான தகவல்களுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராடும் நிலையில், இச்சூழல் அதனை மிகவும் கடினமானதாக்கும்.
COVID தொற்று பற்றி தவறான தகவல்கள் பரவியிருந்தாலும், பல்கலாசார செய்தியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை நாங்கள் கண்காணித்துள்ளோம் – பணி நீக்கங்கள் தற்போது 80 சதவீதத்தை எட்டியுள்ளன.
தொடர்ந்து செயற்பாட்டை தக்க வைத்துக்கொள்ள போராடும்
செய்தி நிறுவனங்கள் குறைந்த செய்தியாளர்களைக் கொண்டிருப்பதால், அவை குறைவான செய்திகளையே பகிர்கின்றன.
COVID தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் தயக்கத்தை சரிசெய்யக்கூடிய மந்திர வித்தைகள் எதுவும் இல்லை. ஆனால், பல்கலாசார செய்தி நிறுவனங்கள், அவை தேவைப்படும் சமூகங்களுக்கு உதவும். இது dollarகளைப் பற்றியது மாத்திரமல்ல – பொது சுகாதார நிபுணர்களை பல்கலாசார ஊடக நிகழ்ச்சிகளுக்கு அரசாங்கம் அனுப்ப வேண்டும், செய்தி அறிக்கைகள் முடிந்தவரை பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, அன்றாட அரச செய்தியறிக்கைகள் பல்கலாச்சார ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மேலும், பல்கலாசார வௌியீட்டாளர்களின் இருப்பை தக்கவைத்து, அவை பெருந்தொற்றுக்கு முந்தைய வௌியீட்டு அட்டவணைகளுக்கு அமைய மீண்டும் செயற்பட நாம் உதவ வேண்டும்.
கனடாவின் சீன மொழி செய்தி ஊடகம் கனடாவிலிருந்து வெளியாகும் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவது மாத்திரமன்றி, இது உலகெங்கிலும் பரப்பப்படும் தவறான தகவல்களையும் எதிர்த்துப் போராடுகிறது. போலந்து, ஸ்பானிஷ் உட்பட அனைத்து மொழி ஊடகங்களுக்கும் இது பொருந்தும். போலி செய்திகளை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழி உண்மையின் துணையுடன் போராடுவது தான்.
பல்கலாசார ஊடகவியலாளர்கள் அதை முடிந்தவரை பல மொழிகளிலும் பரப்பத் தயாராக உள்ளனர்.
மூலம்: Maria Saras Voutsinas (நிர்வாக இயக்குநர் – National Ethnic Press and Media Council of Canada
தமிழில்: Bella Dalima
(தேசியம் சஞ்சிகையின் February 2021 சஞ்சிகையில் வெளியான கட்டுரை)