தேவை ஏற்படின் COVID தொற்றுக்கு மத்தியிலும் தேர்தல் ஒன்றை நடத்தத் தயாராக உள்ளதாக கனடாவின் தலைமை தேர்தல் அதிகாரி Stéphane Perrault தெரிவித்தார்.
ஒரு பொது சுகாதார நெருக்கடியின் போது தேர்தலை நடத்துவதில் உள்ள பல்வேறு சவால்களை குறித்தும் தேர்தல் அதிகாரி நாடாளுமன்றத்தின் நடைமுறைகள் விவகாரங்களுக்கான குழுமுன் கோடிட்டுக் காட்டினார். தேர்தல் நடைமுறைகளை சரிசெய்வதற்கான நெகிழ்வுத்தன்மைக்கும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை அவர் கோரியுள்ளார்
தொற்று காலத்தில் நடைபெறும் பொதுத் தேர்தலில் மில்லியன் கணக்கான கனடியர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் தேர்தல் நாளுக்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படும் அஞ்சல் வாக்குகள் தேர்தல் நாளுக்குப் பின்னர் தேர்தல் திணைக்களத்திடம் கிடைக்கப் பெற்றாலும் அவை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கையை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்
அஞ்சல் வாக்குகள் காரணமாக தேர்தல் முடிவுகள் சில நாட்களுக்கு வெளியாகாமல் இருக்கலாம் எனவும் கனடாவின் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்