December 12, 2024
தேசியம்
கட்டுரைகள்ராகவி புவிதாஸ்

ஸ்ரீலங்காவில் இன்னும் அமைதி இல்லை!

இலங்கைத்தீவில் 26 வருடங்கள் தொடர்ந்த ஆயுதப் ‌போராட்டம் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்தது – ஆனாலும் இன்னமும் அங்கு அமைதி ஏற்படவில்லை. முள்ளிவாய்க்கால் நினைவு தினம் May மாதம் நினைவு கூறப்பட்ட போதிலும், இலங்கைத்தீவில் சமாதானத்திற்கும் பாதுகாப்புக்கும் எந்த விதமான உறுதிப்பாடும் இதுவரையிலும் இல்லை. 2009ஆம் ஆண்டு ஆயுத மோதலில் வெற்றி பெற்றதன் மூலம், சமாதானத்தை அடைய இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். ஆனாலும் நடந்தது அதுவல்ல. இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இறுதி யுத்தத்தில் உயிர்தப்பிய 300,000 தமிழர்களை ஆயுதப் போராட்டம் முடிவடைந்த இடத்திலேயே அடிமைகளாக திறந்த வெளிச்சிறைச் சாலைகளில் அடைத்து வைத்தார். இந்தச் சிறை முகாம்களில் பிரசன்னமாகியிருந்த ஸ்ரீலங்கா இராணுவத்தின் உறுப்பினர்களினால், பல தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டும், பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டும், பாதிப்புக்களை எதிர்கொண்டனர். மாதங்கள் சில கழிந்து, பொதுமக்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், பலர் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த தமது பாரம்பரிய நிலங்களுக்குத் திரும்ப முடியவில்லை. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் பொது மக்களின் நிலங்களை இராணுவம் தொடர்ந்தும் ஆக்கிரமித்துள்ளது. யுத்தத்தின் இறுதிக்  கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த தமது உறவினர்களை அவர்களது குடும்பத்தினர் இன்றுவரை காணவில்லை. இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

இவர்களைத் தேடும் தொடர் முயற்சியில் இன்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளனர். பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் சிறையில் உள்ளனர். இந்தச் சிறைகள் பரந்த சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகம் நிறைந்த இடங்களாகவே உள்ளன. மக்கள் தொடர்ந்தும் இராணுவமயமான சூழல்களில் வாழ்கின்றனர். அமைதி தங்கள் வாழ்வைக் களைந்து விட்டது என்ற தொடர் நினைவூட்டல்களை மாத்திரம் இவர்கள் எதிர்கொள்கின்றனர். ஒருவகையில் , முள்ளிவாய்க்காலில் தப்பிப் பிழைத்தவர்கள், எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் இல்லாமல் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த பத்து ஆண்டுகளில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், நீதியை நாடுவதற்கும், நிலையான சமாதானத்தை அடைவதற்குமான முயற்சிகள் சிதைந்துவிட்டதாகவே  உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை 2014இல் போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்தது. இந்தவிசாரணை 2015ஆம் ஆண்டில், இலங்கைத்தீவில் மனித குலத்துக்கு எதிரான போர்க் குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் நடந்துள்ளதாக முடிவு செய்திருந்தது. இந்த முடிவுகளை தொடர்ந்தும், தொடர்ச்சியான சர்வதேச அழுத்தத்தின் விளைவாகவும், இலங்கை அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, ஒரு உள்நாட்டு கலப்பு சட்ட செயல்முறையை (domestic hybrid legal process) நிறுவுவதற்கு உறுதியளித்தது. ஆனாலும் போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப் படுகொலைகளுக்கு எதிரான உள்நாட்டுச் சட்டங்களை இயற்றுவதற்கான தனது உறுதிப்பாட்ட‌ை இலங்கையின் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. ஸ்ரீலங்கா தனது அரசாங்கத்தை பல மொழி, பல இன மற்றும் பல மதத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் மாற்றுவதற்கான வாய்ப்பைக் கைப்பற்றத் தவறிவிட்டது. மாறாக, பத்து ஆண்டுகளாக, தமிழ் மக்கள் மற்றும் ஸ்ரீலங்கா அரசிடையே, முரண்பாட்டின் முதன்மையான,  அடிப்படை காரணங்களை அடையாளம் காண இலங்கை  தவறிவிட்டது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் தமது நிலப்பகுதி, மொழி, கலாச்சாரம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின்மீது அடிப்படை தீர்மானங்களை எடுப்பதற்கு உத்தரவாதம்அளிக்கப்படவில்லை. இதில் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை கொண்ட ஒரு வலுவான மத்திய கட்டமைப்பு விடயங்கள் குறித்த உத்தரவாதங்கள் எதுவும் இல்லை. சிங்கள மொழி மற்றும் பௌத்த மதம் ஆகியவற்றின் அரசியலமைப்பின் பிரதானத்தை இந்த அமைப்பு மேலும் வலுவூட்டுகின்றது. இந்த 10 ஆண்டுகளில், இந்த நிகழ்வுகள் செயல்களிலும் வார்த்தைகளாலும் வலுவூட்டப்பட்டுள்ளன.

அண்மையில் நிகழ்ந்த தேவாலயங்கள் மீதான உயிர்த்த ஞாயிறு தாக்குதல், அதனைத் தொடர்ந்த முஸ்லீம் மக்களின் இலக்குக்கள் மீதான தாக்குதல்கள் ஆகியவை இலங்கைத்தீவின் இன்றைய கள நிலையை மாற்றியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் சிறுபான்மையினரை பாதுகாக்கத் தவறிய இலங்கை அரசின் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் இலங்கை பாதுகாப்பு அமைப்பினதும் அதன் செயலற்ற அரசாங்கத்தினதும் பின் விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. ஸ்ரீலங்கா அரசு தனது மக்களின் உண்மையான தன்மையை அங்கீகரிப்பது அவசியம். இன்றைய ஸ்ரீலங்கா அரச முறை ‌ஒரு செயலற்ற வடிவமே. தற்போதைய தலைமையும், தொடர்ந்து தலைமைக்காகத் காத்திருப்பவர்களும், நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தத் தேவையான  மனஉறுதியைக்கொண்டிருக்கவில்லை. அதற்கு ஒரு புதிய அரசியல் ஒப்பந்தம் நிறுவப்பட்டு,  சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவது அவசியம். தற்போதைய  சிங்கள பௌத்த அரச அமைப்பானது இலங்கைத்தீவுக்கு சிறந்ததாக அமையவில்லை.  நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு, அனைத்து மக்களின் தேவைகளையும் அபிலாஷைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும்.  பத்து ஆண்டுகளில், இலங்கைத்தீவு இன்னுமொரு இரத்த ஆற்றை எதிர்கொள்ள முடியாது. உண்மை கண்டறியப்பட வேண்டும்.  நீதி வழங்க, அதன் கொள்கைகள் மறுகட்டமைக்கப்பட வேண்டும்.  வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளத் தவறுவது, அது மீண்டும் இடம்பெறவதற்கு காரணமாகிவிடும்.

ஹரி ஆனந்த சங்கரி கனடிய பாரம்பரிய மற்றும் பன்முக அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் தமிழில் ராகவிபுவிதாஸ்

 

Related posts

இன அழிப்புக்கு எதிரான கனடாவின் நிலைப்பாடு!

Gaya Raja

யார் இந்த இடைக்கால Conservative தலைவர் Candice Bergen?

Lankathas Pathmanathan

கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரும், பிரதி அமைச்சரும் தமிழர்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment