குடியிருப்பு பாடசாலை மறுப்பைக் குற்றமாகக் கருதும் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
NDP நாடாளுமன்ற உறுப்பினர் Leah Gazan இந்த சட்டமூலத்தை தனிநபர் பிரேரணையாக வியாழக்கிழமை (26) சபையில் சமர்ப்பித்தார்.
குடியிருப்பு பாடசாலை அமைப்பு முறையில் இருந்து உயிர் பிழைத்தவர்கள், அவர்களின் குடும்பங்கள், சமூகங்களுக்கு ஏற்படும் தீங்கை தடுக்க இந்த சட்டமூலம் உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த தனிநபர் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், முதற்குடியினர் மக்களுக்கு எதிரான வெறுப்பை ஊக்குவிப்பதற்காக குற்றவியல் சட்டத்தின் கீழ் ஒருவர் குற்றச்சாட்டு எதிர்கொள்ளலாம்.
முதற்குடியினர் பூர்வீக கலாச்சாரங்கள், மொழிகளை அழிப்பதே இந்த குடியிருப்பு பாடசாலைகளில் நோக்கம் என Leah Gazan தெரிவித்தார்.
அரசாங்கம் நல்லிணக்கத்தில் தீவிரமாக இருந்தால், அது குடியிருப்பு பாடசாலை அமைப்பு முறையில் இருந்து உயிர் பிழைத்தவர்கள், அவர்களின் குடும்பங்களை வெறுப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
முதற்குடியினர் பூர்வீக கலாச்சாரங்கள், மொழிகள், குடும்பங்களின் பாரம்பரியத்தை அழிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு இனப்படுகொலைதான் இந்த குடியிருப்பு பாடசாலை அமைப்பு எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் Leah Gazan தெளிவுபடுத்தினார்.
150,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் குடியிருப்புப் பாடசாலைகளில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த பாடசாலைகளில் இணைந்த 6,000 குழந்தைகள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் இறுதி குடியிருப்பு பாடசாலை 1996ல் மூடப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் Leah Gazan கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையை முன்வைத்திருந்தார்.
குடியிருப்புப் பாடசாலைகளில் அமைப்புகள் ஒரு இனப்படுகொலை செயல் என அந்த பிரேரணை வலியுறுத்தியது.
இந்தப் பிரேரணை அனைத்துக் கட்சிகளாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.