தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள் இலங்கதாஸ் பத்மநாதன்

Markham நகரில் வெளிநாடுகளின் கொடிகளுக்கு தடை இல்லை! தோல்வியடைந்தது தீர்மானம்!

Markham மாநகர சபையின் கட்டடங்களின் முன்பாக வெளிநாடுகளின் கொடிகளை ஏற்றுவதைத் தடை செய்யும் தீர்மானத்திற்கு எதிராக Markham நகரசபை உறுப்பினர்கள் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை (February 11) வாக்களித்துள்ளனர்.

கனடிய தேசியக் கொடி தவிர்ந்த வேறு எந்தக் கொடிகளையும் Markham நகரசபைக்குச் சொந்தமான கட்டடங்களின் முன்பாக ஏற்றுவதற்கு அனுமதிக்கக் கூடாது என Markham சபையின் கடந்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான இறுதி விவாதம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இந்த விவாதத்தை நகர முதல்வர் Frank Scarpitti ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து, பொது மக்களின் கருத்துக்களுக்கு இடம் அளிக்கப்பட்டது. 5 மணித்தியாலங்களுக்கு மேல் தொடர்ந்த பொதுமக்களின் கருத்தறியும் நேரத்தில் சீன சமூகத்தை சேர்ந்தவர்கள் கருத்துக்களால் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் மோதிக் கொண்டனர். இந்த பொது மக்களின் கருத்தறியும் நேரத்தில் 70க்கும் மேற்பட்டவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர். தொடர்ந்து, நகரசபை(Councillors) மற்றும் பிராந்திய சபை உறுப்பினர்களின்(Regional Councillors) கருத்துக்களுக்கு இடம் அளிக்கப்பட்டது.

இறுதியில் இந்த தீர்மானத்தின் மீது நடை பெற்றவாக்கெடுப்பில் நகர முதல்வர், உதவி முதல்வர் உட்பட நகர சபை உறுப்பினர்கள் 10 பேரும், பிராந்திய சபை உறுப்பினர்கள் 3 பேரும் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

மொத்தம் 13 உறுப்பினர்களில் 8 பேர் தீர்மானத்திற்கு எதிராகவும் 5 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்து இந்தத் தீர்மானத்தினைத் தோற்கடித்துள்ளனர். இவர்களில் நகர முதல்வர் இந்தத்  தீர்மானத்துக்கு எதிராகவும், உதவி முதல்வர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும், மிகுதி 8 நகரசபை உறுப்பினர்களில் 4 பேர் ஆதரவாகவும், 4 பேர் எதிராகவும் வாக்களித்தனர். சபை உறுப்பினர்கள் 3 பேரும் இந்தத் தீர்மானத்துக்கு எதிராகவே வாக்களித்தனர். இதன் மூலம் Markham மாநகரசபைக்கு உரிய கட்டடங்களின் முன்பாக எந்த ஒரு நாட்டின் தேசியக் கொடிகளையும் ஏற்றுவதற்கு எது வித தடையும் இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (Chinese Communist Party)  தலைமையின் கீழ் சீனக் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவதுஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் கடந்த ஆண்டு October மாதம் சீனக் குடியரசின் தேசியக் கொடி Markham நகரசபையில் ஏற்றப்பட்டது. Hong Kong மற்றும் சீனாவிற்கும் இடையிலான அரசியல் அமைதியின்மை தொடரும் நிலையில் Markham நகரசபைக் கட்டிடத்திற்கு முன்பாக சீனாவின் கொடியை ஏற்றுவது பொருத்தமற்றது என Markham நகர குடியிருப்பாளர் சிலர் முறையிட்டிருந்தனர்.

Markham நகரில் பெருமளவில் சீன சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். Markham நகரத்தின் வலைத் தளம், 2016 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகளை மேற் கோள்காட்டி, Markham குடியிருப்பாளர்களில் 67 சதவீதம் பேர் ஆசிய இனப் பின்னணியைக் கொண்டவர்கள் எனவும், ஆங்கிலத்திற்குப் பிறகு பெருமளவில் பேசப்படும் தாய் மொழி மொழிகள் Mandarin மற்றும் Cantonese எனவும் குறிப்பிடுகின்றது.

Markham நகரம், கொடுங்கோன்மையைத் தவிர்ப்பதற்காக கனடாவுக்கு தப்பி வந்த புலம் பெயர்ந்தோர் உட்பட பலருக்கு ஒடுக்கு முறையை பிரதி நிதித்துவப்படுத்தும் ஒரு நாட்டின் கொடியை ஏற்றிவைக்கக்கூடாது என ஒரு தரப்பினர் வாதிட்டனர். சீனாவின் Xinjiang பிராந்தியத்தில் உள்ள தடுப்பு முகாம்களில் ஒரு மில்லியன் முஸ்லீம்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  தவிரவும் கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அரசியல் உறவுகளில் விரிசல் நிலை இன்றும் தொடர்கின்றது. இதில் கனடியர்களான Michael Spavor மற்றும் Michael Kovrig ஆகியோரை சீன அரசாங்கம் கைது செய்து தடுத்து வைத்திருப்பது பிரதானமாகும்.

இந்தப் பின்னணியில் தொடர்ந்த முறைப்பாட்டை அடுத்து Markham நகரசபை சீனக் கொடிஏற்றும் வைபவத்தை இரத்து செய்வதாக முதலில் உறுதியளித்தது. ஆனாலும் கொடி ஏற்றும் வைபவம் திட்ட மிட்ட படி நிகழ்ந்தது. இந்த நிகழ்வில் Torontoவிற்கான சீனாவின் தூதர் Han Tao, Markham நகர முதல்வர் மற்றும் ஒரு சில நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இரத்து செய்யப்படுவதாக கூறப்பட்ட ஒரு நிகழ்வு மீண்டும் நடைபெறுவது தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதனால் கோபமடைந்த Markham நகரவாசிகள் சிலர் அதற்கு எதிராக ஒரு அமைதி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். எந்தவொரு வெளி நாட்டுக் கொடியையும் ஏற்றுவது – குறிப்பாக கேள்விக்குரிய மனித உரிமைகள் பதிவுகளுடன் தொடர்புடைய நாடுகளின் கொடியையும் – ஏற்றுவது கலாச்சாரத்தின் கொண்டாட்டத்தைக் குறிக்கவில்லை, மாறாக கேள்விக்குரிய ஆட்சியின் மறைமுகமான மற்றும் உணர்ச்சியற்ற, ஒப்புதலைக் குறிக்கிறது என்பது விமர்சகர்களின் குற்றச்சாட்டாகும்.

இந்த நிகழ்வு தொடர்பாக எழுந்த புகார்களுக்கு பதிலளிக்கும் விதமாக, துணை முதல் வரும் பிராந்திய சபை உறுப்பினருமான Don Hamilton இந்த விடயத்தை பொதுக் குழுவிற்கு முன் வைத்து, Markham நகரின் கொடி ஏற்றும் கொள்கை தொடர்பாக நகர சபை ஊழியர்களிடமிருந்து ஒரு அறிக்கையை கோரியிருந்தார்.

பல கனடிய நகராட்சிகளைப் போலவே, நகராட்சி பொது ஊழியரின் ஒப்புதலுக்கு உட்பட்டு, சிறப்பு சந்தர்ப்பங்களில் சமூக குழுக்களால் City Hall கட்டிடத்திக்கு வெளியே பல்வேறு நாடுகள், பிரதேசங்கள் அல்லது சமூகங்களின் கொடிகளை ஏற்ற Markham நகரசபை அனுமதிக்கின்றது. Markham நகரத்தின் கொடி ஏற்றும் கொள்கை 2011ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இது Markham Civic Centre உட்பட்ட நகராட்சி கட்டிடங்கள் அனைத்திற்கும் பொருந்தும். ஒரு நாட்டின் தேசிய அல்லது சுதந்திர நாட்களின் நினைவாக, நிதி திரட்டும் இயக்கங்களுக்கு ஆதரவாக அல்லது பல் கலாச்சார நிகழ்வுகளை கொண்டாட ஒரு நாட்டின் கொடியை ஏற்றுமாறு குடியிருப்பாளர்கள் கோரலாம். Markham நகரத்தின் பன் முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில் இந்தக் கொள்கை அமைகின்றது. கடந்த January மாதம் இது போல Markham நகரின் தமிழ் அமைப் பொன்று தை மரபுத் திங்களை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்வொன்றை முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் ஒரு கொடியை ஏற்றுவதை “ஒரு அரசியல் நகர்வு” என குறிப்பிடுகின்றனர் இதற்கு எதிரானவர்கள். செவ்வாய்க் கிழமை விவாதிக்கப்பட்ட இந்தப்  பிரேரணை நகரசபையில் சில சர்ச்சையை ஏற்படுத்தியது. Markham நகரின் சில குடியிருப்பாளர்கள் வெளிநாட்டு தேசிய கொடிகளை தடை செய்வது இன ரீதியாக தூண்டப்படும் ஒரு நகர்வு என வாதிட்டனர். இந்த விடயம் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த Markham நகர முதல்வர் Scarpitti, ஒரு வெளிநாட்டின்  தேசியக் கொடியை ஏற்றுவது அந்த நாட்டின் அரசியலை ஏற்றுக் கொள்வதாக அமையாது என கூறினார். இது Markham நகரில் பன் முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கான மற்றொரு வழியாகும் என்றார் அவர்.

இந்த விடயத்தில் செவ்வாய்க்கிழமை ஆறு மணி நேரம் தொடர்ந்த விவாதத்தின் பின்னர் தற்காலிகமாக வெளிநாட்டுக் கொடிகளை ஏற்றும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தீர்மானத்தை நிராகரிக்கும் வகையில்  5 – 8 என Markham நகர சபை வாக்களித்தது.

இலங்கதாஸ் பத்மநாதன்

Related posts

முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலை ;உண்மையும் நல்லிணக்கமும்

Gaya Raja

நெறிமுறை விதிகளை மீறிய விஜய் தணிகாசலம் மன்னிப்பு கோரினார்!

Lankathas Pathmanathan

MR.BROWN: Barrie முதல் Brampton வரை

Lankathas Pathmanathan

Leave a Comment