தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள் கட்டுரைகள்

முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலை ;உண்மையும் நல்லிணக்கமும்

அண்மையில் British Colombiaவின் Kamloops முன்னாள் வதிவிடப் பாடசாலை வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த 215 முதற்குடியின சிறுவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையானது பல கனேடியர்களின் மனங்களை கனக்கச் செய்திருக்கிறது. இந்த நாட்டின் வரலாறு அதன் முதற்குடியின மக்களுக்கு எதிரான அநீதிகளாலும் துன்புறுத்தல்களாலும் நிரம்பியுள்ளது என்பதற்கான நினைவூட்டலாகவும் அது உள்ளது. இந்த அநீதியுடன் தமிழ் கனேடியர்களாகிய
எம்மையும் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும்.

முதற்குடியின சிறுவர்களின் கல்வியை நோக்காகக் கொண்டு 1867 ஆம் ஆண்டில் கனேடிய அரசாங்கம் வதிவிடப் பாடசாலைத்  திட்டத்தை ஆரம்பித்ததுடன், அப்பாடசாலைகள் தேவாலயங்களினால் நிர்வகிக்கப்பட்டன. கடைசியாக எஞ்சியிருந்த உறைவிட பாடசாலை 1996 ஆம் ஆண்டில் மூடப்பட்டது.

ஐரோப்பிய-கிறிஸ்தவ வாழ்க்கை முறையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்த குழந்தைகளை ‘வெள்ளை’ கனேடிய சமுதாயத்தில் இணைப்பதே முக்கிய நோக்கமாக இருந்தது. சிறுவர்கள் அவர்களின் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதுடன் ,அவர்தம் பழங்குடி பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் அங்கீகரிப்பதற்கான தகமையும் உரிமையும் மறுக்கப்பட்டது.

இந்த பாடசாலை அமைப்புகளில் இருந்து தப்பிப் பிழைத்த முன்னாள் மாணவர்கள் பாடசாலை நிர்வாகிகளினால் நிகழ்த்தப்பட்ட கடுமையான துஷ்பிரயோகங்களை நினைவு கூர்ந்துள்ளனர்.

அங்கு குழந்தைகள் உடல் ரீதியானதும், பாலியல் ரீதியானதும், உளவியல் ரீதியானதுமான துஷ்பிரயோகங்களை சகித்துக்கொண்டு இருந்துள்ளனர். பராமரிப்பு வசதிகளின் தரமும் மிக மோசமாக இருந்துள்ளது. பல குழந்தைகள் ஊட்ட குறைபாடுகளாலும் நோயாலும் பாதிக்கப்பட்டடுள்ளனர்.

இந்த பாடசாலை முறைமையில் 150,000 சிறுவர்கள் சிக்குண்டிருந்ததுடன், 6000 குழந்தைகள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. Kamloops சில் உடற்சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், கனடா முழுதும் இது போன்ற பல இடங்கள் இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. மேலும், இந்த எண்ணிக்கையானது முதற்குடியின மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரங்களின் உண்மையான பிரதிநிதித்துவம் அல்ல.

Kamloops இல் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பிலும் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக கனடா முழுவதும் நிகழ்ந்துள்ள எண்ணற்ற அவலங்கள் குறித்தும் எழுப்பப்படும் கேள்விகள் பலவற்றுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. இதற்கான பதில்களை கனேடிய அரசாங்கமும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையும் வழங்க வேண்டும். இந்த பாடசாலைகள் தொடர்பாக தம்மிடம் உள்ள பதிவுகளை வெளியிடவும் நடத்தப்பட வேண்டிய அனைத்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

கனேடிய அரசாங்கமும் திருச்சபையும் முதற்குடி கலாசார அம்சங்களை அழிப்பதற்கான நோக்கத்தைக் கொண்டிருந்ததன் காரணமாக வதிவிட பாடசாலை முறைமையை இனப்படுகொலையின் ஒரு வடிவமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். கனடாவிற்கு குடிபெயர்ந்த தமிழர்கள் என்ற வகையில், இனப்படுகொலையின் தாக்கங்களையும் விளைவுகளையும் நாம் நன்கு அறிவோம்.

இலங்கையின் இனப்படுகொலை ஆட்சியிலிருந்து தப்பித்து, அதே குற்றங்களைச் செய்துள்ள அரசாங்கத்தையும் நிறுவனத்தையும் கொண்டுள்ள மற்றொரு நாட்டிற்கு வந்துள்ளோம். வதிவிட பாடசாலை முறைமைகளை இனப்படுகொலையின் வடிவமாக அங்கீகரிப்பதற்காக முதற்குடி சமூகங்களுக்கு சட்ட உதவிகளுக்கான ஒத்துழைப்பை வழங்குவதில் தமிழ் கனேடியர்களாகிய எமக்கும் பங்குள்ளது.

இன்றும் ஓரங்கட்டப்பட்டுள்ள சமூகமாக இருக்கும் அவர்கள் மீது எமது அக்கறையை செலுத்தி, குரல் கொடுத்து அவர்களுக்காக நாம் முன்நிற்க வேண்டும். சுகாதார பராமரிப்பு, துப்புரவு, கல்வி போன்ற வசதிகளும் சௌகரியமான வாழ்க்கையும் கனடாவில் எமக்கு கிடைத்த அளவிற்கு முதற்குடி சமூகங்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு சுயாதீன விசாரணைக்கான அவர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிப்பதும் அங்கீகரிப்பதும் முக்கியமானது. உண்மைகளைக் கண்டறிவது நல்லிணக்கத்திற்கு வழிகோலும் என்பதுடன், தம் இழப்புக்களின் வலியை வருந்திக் கடப்பதற்கும் அது முக்கியமானதாகும்.

இந்நாட்டின் முதற்குடியின மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது மூலம் கற்றுக்கொள்ளக்கூடிய படிப்பினைகள் நிறைய உள்ளன. ஒரு தமிழ் சமூகமாக நாம் கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளலாம். நாட்டின் இருண்ட கடந்த காலத்தின் மீது வெளிச்சம் பரவியிருப்பது கனேடிய வரலாற்றில் இதுவே முதல் முறை.

தப்பிப்பிழைத்தவர்களினதும் காப்பக பதிவுகளினதும் சாட்சியங்களுடன், வதிவிட பாடசாலை முறைமையின் வரலாற்றையும் தாங்கங்களையும் ஆணைக்குழு ஆவணப்படுத்தியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையின் தாக்கங்களை உண்மையாகப் புரிந்துகொண்டு, அவற்றை ஆவணப்படுத்த எமது தமிழ் மக்களுக்கு இதேபோன்றதொரு செயன்முறை தேவையாகவுள்ளது. ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைவதற்கும் செவிசாய்ப்பதற்கும் பகிர்வதற்கும் பகிர்ந்துகொண்டவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதற்குமான நேரம் இது.
ஒற்றுமையாக நாம் உண்மையைக் கண்டுபிடித்து, அதனை மாற்றும் செயற்பாட்டைத் தொடங்க
முடியும்.

கற்பனா நாகேந்திரா – தமிழ் உரிமைகள் குழு
தமிழில்: Bella Dalima

(தேசியம் சஞ்சிகையின் June 2021 பதிப்பில் வெளியான கட்டுரை)

Related posts

COVID தடுமாற்றம்: CERBஐ விட CRB சிறந்தது COVID Dilemma: CRB Is Better and More Flexible than CERB

Lankathas Pathmanathan

பெருந் தொற்று நேரத்திலும் பசிபோக்கும் FYFB உணவு வங்கி!

Gaya Raja

நீங்கள் போதிப்பதை கொஞ்சம் பயிற்சியும் செய்து பாருங்கள்!

Gaya Raja

Leave a Comment