தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்கனடா மூர்த்தி

MR.BROWN: Barrie முதல் Brampton வரை

Patrick Brown – இந்த பெயர் கனடியத் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர். கனடாவில் குறிப்பிடத்தக்க இளம் அரசியல் தலைவர்களில் ஒருவர். தமிழ் மக்களோடு தன்னை இணைத்துக் காட்டுவதில் தயக்கம் காட்டாதவர். தன்னால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட Barrie தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து Ottawaவிலிருந்து வெளியே வந்த காலம் முதல், சமகாலத்தில் Brampton நகர முதல்வராக பதவியேற்று பணியாற்றும்வரை அவரது அரசியல் பயணத்தின் ஏற்றங்களுக்கும் இறக்கங்களுக்கும் தமிழ் கனடியர்களும் காரணமாகவோ அல்லது பின்னிப் பிணைந்தோ இருந்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

“தமிழன்” Patrick Brown …..

“இந்த B2B (Barrie முதல் Brampton வரை) காலப்பகுதியில் Patrick Brown உண்மையில் தமிழ் மக்களுக்கு என்னதான் ஆக்கபூர்வமாகச் செய்திருக்கிறார்?” என்ற கேள்வியை என்னிடம் பட்டினத்தார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கேட்டபோது நான் கொஞ்சம் திணறிப்போய்விட்டேன்.

பட்டினத்தார் என்னைப் பார்த்து இதைக் கேட்கக் காரணம் இருந்தது.

Ontario மாகாண Progressive Conservative கட்சித் தலைவராக Patrick Brown போட்டியிட முனைந்த காலப்பகுதியில் அவருக்கான தேர்தல் ஆதரவு வேலை செய்த “Tamils for Patrick” குழுவின் உள்வீட்டுப் பிள்ளைகளில் ஒருவனாக நானும் இருந்தேனென்பது பட்டினத்தாருக்குத் தெரியும். Patrick Brown குறித்து நான் Tamils for Patrick குழு சார்பில் பெருமைப்பட எழுதியும், வானொலிகளில் பேசியும், தமிழர் மத்தியிலிருந்த பல Conservative கட்சி எதிர்ப்பாளர்களுடன் மிகக் கடுமையாக சமூக வலைத்தளங்களில் வாதிட்டும் வந்த காலத்தில் பட்டினத்தார் என்னை இன்னும் நன்கு அறிந்திருந்தார்.

அதுமட்டுமல்ல, Tamils for Patrick குழுவில் இருக்கும்போதே அதன் செயல் தலைவர்களில் ஒரு சிலருடன் நான் ஒருமித்த கருத்து கொண்டவனாக இருக்கவில்லை என்பதையும் பட்டினத்தார் அறிந்தவராக இருந்தார். அக்கருத்து வேறுபாடுகள் அரசியலில் நாம் எதிர்பார்க்கும் தனிப்பட்ட, நேர்மைசார் கொள்கைகளால் ஏற்பட்டவை. அவற்றிற்கான உதாரணத்திற்கு சிலவற்றைச் சொல்லலாம்.

“Ontarioவின் முதல்வராக Patrick Brown வந்தால் தமிழ் மக்களுக்கு LCBO போன்ற வாரியங்களின் நிர்வாகத் தலைவர் போன்ற பதவிகள் பலவும் வழங்கப்படும்” எனச் சொல்லி பிரச்சாரம் செய்யுமாறு அப்போது கேட்டுக் கொள்ளப்பட்டது. இப்படியான ஆசைகாட்டல் வாக்குறுதிகளை பொதுவெளியில் தருவது அநாகரீகம் என்பதை அவர்களிடம் சப்தமாகச் சொல்வேன். மோதல் வந்துவிடும். வாக்கு கிடைக்க வேண்டுமானால் இப்படித்தான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பார்கள்.

தமிழ் வடை மோதகத்துடன் Patrick Brown ……

“2009ல் நாம் நிர்க்கதியாக வீதியில் நின்றபோது Conservative கட்சியிலிருந்து எமதருகே வந்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் Patrick Brown. அதற்காக அவருக்குப் பதில் நன்றி தெரிவிக்க அவருக்கே நாம் வாக்களிக்க வேண்டும்” என கேட்டுக் கொள்ளச் சொல்வார்கள்.”அவர் செய்தது ஒரு மனிதாபிமான செயல்பாடாயிற்றே… அது அவர் கடமை. அதை இப்போது அரசியலாக்கி விடுகிறோமன்றோ…இது தவறு” என்பேன்.

மீண்டும் மோதல் வந்துவிடும். ஆனால் குறுகிய காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் Patrick Brown பிரபலமானதற்கு இந்த வகையான உணர்வு ரீதியான பிரச்சாரங்களும், ஆசைகாட்டல் வாக்குறுதிகளும் பெரும் காரணம் என்பதை கண்கூடாகக் காண முடிந்தது. இந்தவகை technicகை நாம் நம்புகிறோமோ இல்லையோ நம் தமிழ் சமூகம் ஏற்றுக் கொள்கிறது என்பதைத்தான் Tamils for Patrick அனுபவம் எனக்கு சொல்லித்தந்தது.

“Patrick Brown உண்மையில் தமிழ் மக்களுக்கு என்னதான் ஆக்கபூர்வமாக செய்திருக்கிறார்?” என்று பட்டினத்தார் என்னிடம் கேட்டதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது.

Brampton நகர முதல்வராக Patrick Brown 2018இல் போட்டியிட முனைந்தபோதும் இதே வகையான பல்வேறு ஆசைகாட்டல்கள் Brampton வாழ் தமிழர்கள் பலருக்கும் அள்ளி வீசப்பட்டன. “எங்கட Patrickகை Mayor ஆக்குங்கள்… இங்குள்ள தமிழர்களுக்கு Municipality வேலை தருவோம்… தமிழர் நிறுவனங்களுக்கு contract தருவோம்.. Bramptonனில் அரச காணியில் தமிழர்களுக்கு ஒரு கலாச்சார மண்டபம் கட்டித்தருவோம்… இலங்கையில் தமிழ் பகுதியிலிருக்கும் மாநகர சபைகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வோம்… போர்க் குற்றவாளிகளை சிறைக்கு அனுப்ப பாடுபடுவோம்…நாம் வைத்திருக்கும் மனிதவுரிமை அமைப்பு மூலம் ஈழத்தமிழர் உரிமைக்காகப் பாடுபடுவோம்..” என Patrick Brownணுக்கான பிரச்சாரக் குழுவினர் Brampton வாழ் தமிழ் மக்களுக்கு ஆசை காட்டித்தான் வாக்குச் சேகரித்திருக்கிறார்களாம்.

தனது புத்தக வெளியீட்டின் போது Patrick Brown ……

அவற்றை அப்படியே நம்பியவர்களில் ஒருவராகத்தான் பட்டினத்தார் இருந்திருக்க வேண்டும். தனது மகளுக்கு City Hallலில் வேலை, தனது நிறுவனத்திற்கு cleaning contract என அந்தத் தேர்தல் காலத்தில் விசிறியெறியப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் இவர் மனதிலும் விதைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் தேர்தல் காலத்தில் தனக்குச் சொல்லப்பட்ட ஆசைகாட்டல்கள் எவையும் இதுவரை கைக்குக் கிட்டவில்லை என்ற காரணத்தால் ஏற்பட்ட கோபமும், அவமானமும் இப்போது அதிருப்தியாகி அவர் முகத்தில் பிரதிபலித்தது.

“முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி Bramptonனில் கட்டுவதாகச் சொல்லியிருக்கிறார்களே.. அதை Mayor Brown பெற்றுத்தரவில்லை. பொதுமக்களின் காசில்தான் கட்டுகிறோம். நினைவுத்தூபியைக் கோரியது Brampton தமிழ் ஒன்றியமும், Brampton தமிழ் முதியோர் ஒன்றியமும் ஆகும். கட்டுவதற்கான இடத்தைப் பெற்றுத் தந்தது Regional Councilorராக இருக்கும் ஒருவர்” என்று தகவல் சொன்னார் பட்டினத்தார்.

இந்தச் செய்தியை நானும் வேறு வழிகளில் கேள்விப்பட்டிருந்தேன். நான் அறிந்தவரையில் Bramptonனில் நடந்த விடயங்கள் உண்மையில் சுவாரஸ்யமானவையும்கூட. யாழ் பல்கலைக்கழக நினைவுத்தூபி உடைப்பின் பின்னர் Brampton நகரிலிருக்கும் தமிழர் குழு ஒன்று Brampton நகரின் 3ம் 4ம் வட்டாரங்களின் Regional Councillorராக இருக்கும் Martin Medeirosசை அணுகியிருக்கிறது. தூபி உடைப்பினால் கொதித்துப் போயிருக்கும் அவரது வட்டாரத்துத் தமிழ் வாக்காளர்களின் நிலைமையை அக்குழு எடுத்துக்கூறி “நினைவுத்தூபி ஒன்றை Brampton நகரில் அமைக்கமுடியுமா?”என்று காரியத்தில் இறங்கியிருக்கிறது.

தேசியம் சஞ்சிகையின் FEBRUARY மாத முகப்பு

இதன் விளைவாக பலருக்கும் தெரியாத நிலையில் ஒரு பிரேரணையை நகரசபையில் கொண்டுவருவதெனத் தீர்மானிக்கப்பட்டது. Patrick Brown உட்பட பலருக்கும் தெரியாத நிலையில் இந்தப் பிரேரணையை ஏன் கொண்டுவரவேண்டும் என்ற கேள்வி இவ்விடத்தில் எழலாம். பதிலை ஊகிப்பது மிகச் சுலபம். Patrick Brownணும் அவரது சகாக்களும் பல வாக்குறுதிகளை தமிழர்களுக்குத் தந்துவிட்டு, பின்னர் அவற்றைக் கிடப்பில் போட்டு விடுகிறார்கள். இந்த திட்டத்தை பற்றி அவர்கள் அறிந்தால், அதை தாமே செய்வதாக பறித்துக் கொள்வார்கள். தேர்தல் காலத்தில் இதையும் சேர்த்துப் பேசுவார்கள். அதன் பின்னர் அவை எல்லாமே கிடப்பில்தான் போடப்படும் என்ற எச்சரிக்கை உணர்வால்தான் “பிரேரணை சபைக்குக் கொண்டுவரப்படும் வரையில் அதை இரகசியமாக வைத்திருப்பதுதான் நல்லது” என சம்பந்தப்பட்டவர்கள் நினைத்திருக்கலாம்.

விளைவாக Martin Medeiros, நகரசபையின் January மாதம் 20ந் திகதி அமர்வில் அந்தப் பிரேரணையைக் கொண்டுவருகிறார். ஆம். அரச காணி ஒன்றில் தமிழர் நினைவுத் தூபி ஒன்று அமைக்கும் திட்டத்தை அவர்தான் அங்கு பிரேரிக்கிறார். திடீரென சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அந்தப் பிரேரணை சபையிலிருந்த பலருக்கும் ஆச்சரியத்தைத் தருகிறது. Mayor Brown உட்பட பலரும் “அடடே.. இதை நாமே செய்திருக்கலாமே”என நினைத்திருப்பார்களென்றால் அதில் ஆச்சரியமில்லை. Martin Medeiros தனது பிரேரணையைச் சமர்ப்பித்தபின் முதலாம் கட்ட வாசிப்புக்கு ஒப்புதலை தந்துவிட்டு நகரசபை கலைகிறது.

வெளியாட்களுக்கு அதன் பின்னர்தான் இந்தச் செய்தி பரவுகிறது. பலருக்கும் குதூகலம்… கொண்டாட்டம்! கூடவே பலதரப்பட்ட எதிர்வினைகளும் எழுகின்றன. இழுத்து விழுத்தும் நண்டுகளும் புறப்படுகின்றன. “நாமே இதையும் செய்தோம்” எனக் கோரும் ஆர்வ மனோநிலை அமைப்பு ஒன்றைச் சேர்ந்த சிலர் தம்மை வெளிக்காட்டவும், Brownணுடன் தொடர்பு கொள்ளவும் ஆரம்பிக்கிறார்கள் என்றும் அரசல் புரசலாக செய்திகள் பரவுகின்றன.

January மாதம் 27ந் திகதி – பிரேரணைக்கு இறுதி வடிவம் தரும் இரண்டாம் கட்ட வாசிப்பு Brampton நகர சபையில் இடம்பெறுகின்றது. அன்று அதில் கலந்துகொண்ட Brampton தமிழ் ஒன்றியத்தின் நிர்வாகசபை உறுப்பினரும், Brampton தமிழ் முதியோர் ஒன்றியத்தின் ஆலோசகருமான அமலிதன் சேவியர் “நினைவுத் தூபிக்கு தமிழ் இனப்படுகொலை ஞாபகார்த்த நினைவுத்தூபி என்ற பெயர் தரப்பட வேண்டும்” எனச் சபையை வேண்டுகிறார். அத்திருத்தமும் நகரசபையினால் ஏற்கப்படுகிறது. அப்போது Martin Medeiros அழுத்தமாக அர்த்தபுஷ்டியுடன் Patrick Brownணைப் பார்த்து zoom ஊடாக புன்னகை செய்கிறார். “ஈழத் தமிழர்களால் பல விடயங்களை சாதிக்க முடியும் – நாம் அதற்குக் காரணமாக இருக்க முடியும்” என்பதுதான் அந்தப் புன்னகையின் அர்த்தம்.

Brampton தமிழர் அமைப்பு சந்திப்பில் …..

“அதெல்லாம் சரி… Mayorராக Brown இருக்கும் காரணத்தால் நினைவுத்தூபித் திட்டத்தை தனித்து அவரே கொண்டு வந்தது போன்ற மாயை இப்போது தமிழ் மக்களிடையே உருவாக்கப்படுகிறது. அது உண்மைக்குப் புறம்பானதாகும்” என்கிறார் பட்டினத்தார்.

உண்மைதான். ஆனால் பிரச்சனை அதுவல்ல. தனது காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டமாக அது இருப்பதால் அத்திட்டம் யாரால் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறித்தும் தெளிவாக தமிழ் மக்களுக்கு அறியத் தரவேண்டியதும் “தமிழ் மக்களின் நண்பன்” Patrick Brownணின் கடமையல்லவா? ஆனால் அவர் அதை செய்யாமல் விடுகிறாரோ என்ற சந்தேகம் இப்போதுண்டு.

கனடியத் தமிழர் பேரவையின் (CTC) பொங்கல் விழாவிற்கு நகர முதல்வர் Patrick Brown அளித்த செய்தியில்கூட இதை அவதானிக்கலாம். அச்செய்தியில் Regional Councilor Medeirosசின் பெயரை Patrick Brown மறந்தும் கூடச் சொல்லவில்லை. ஏன்?

பொங்கல்விழா செய்தியில் Patrick Brown, “my chief of staff is Tamil… my senior advisor is Tamil… my scheduler is Tamil.. our IT director is Tamil” என்றெல்லாம் அடுக்குகிறார். ஆனால் அவ்வேலைகள் தமிழர்கள் வெளிப்படையாக விண்ணப்பங்கள் கோரி நேர்காணல்கள் வைத்து வழங்கப்பட்ட வேலைகள் அல்ல. தனிப்பட்ட காரணங்களுக்காக நெருங்கிய ஒருவரை திருப்திப்படுத்த அவரது சிபார்சின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டவை எனப் பேசப்படும் வகையில்தான் நிலைமை இருக்கிறது. (போதாக்குறைக்கு Chief of Peel Regional Police is Tamil என்று பல வருட அனுபவத்தின் பின்னர் காவல்துறையின் தலைமைக்கு தெரிவான நிஷான் துரையப்பாவையும் தனது பட்டியலில் இணைக்கின்றார் Patrick Brown). தமிழரைக் குஷிப்படுத்துவதற்காகத்தான் பொதுவெளியில் வைத்து இப்படியெல்லாம் சொல்கிறார் என்பது புரிந்தாலும் இப்படிப்பட்ட பேச்செல்லாம் நம்மை இளிச்சவாயராகக் கருதும் ஒருவகை ஏமாற்று என்றே நான் கருதுகிறேன்.

Barrie முதல் Brampton வரை Patrick Brown உண்மையில் தமிழ் மக்களுக்கு என்னதான் ஆக்கபூர்வமாக செய்திருக்கிறார்? அவர் செய்த பல வேலைகள் “கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தது” போலத்தான் எனக்குப்படுகிறது. இது “தமிழருக்கு அவர் எதுவுமே செய்யவில்லை”என்று அர்த்தப்படாது. சமூகத்தின் வளர்ச்சிக்காக ஆத்மார்த்தமாக அவரால் எதாவது செய்யப்பட்டதா என்பதுதான் நான் எழுப்பும் கேள்வி. இப்போது இந்தக் கேள்வி உங்களுக்கும் வருகிறதல்லவா! பதில்? “Patrick Brownணால் ஆத்மார்த்தமாக, ஆக்கபூர்வமான எந்த வேலைகளும் தமிழ்ச் சமூகத்திற்கு இதுவரை செய்யப்படவில்லை!”

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் Patrick Brown ……

Patrick Brown தமிழ்ச் சமூகத்தின்மீது ஆத்மார்த்தமாக அக்கறை கொண்டவராக இருந்திருப்பின் Brampton நகரில் ஒரு தமிழ் சமூக மண்டபத்திற்கான அடித்தளம் இற்றைவரையில் நாட்டப்பட்டிருக்க வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட Brampton-வவுனியா சகோதர நகரத் திட்டத்திற்கான பணியையாவது அவர் ஆரம்பித்திருக்க வேண்டும். அனுதினம் தனக்குப் பக்கத்திலிருக்கும் தனது தலைமைப் பணியாளர் (Chief of Staff) பாபு நாகலிங்கத்தால் உருவாக்கப்பட்ட CHRV அமைப்பினை (Canadian Human Rights Voice) கொண்டு ஜெனிவாவில் தமிழருக்காக குரல் எழுப்பியிருக்க வேண்டும் அல்லது இலங்கையில் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகளின் விடுதலைக்காக குறைந்த பட்சம் குரல் எழுப்பியிருக்க வேண்டும். தன்னுடன் நீண்ட காலமாக நெருக்கமான உறவிலிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஊடாக இந்தியாவிலிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு ஏதாவது செய்திருக்க வேண்டும். இல்லையா?

தேர்தல் வெற்றிக்காக சொல்லப்படும் வெற்று முன்மொழிவுகளும், தனிப்பட்ட நட்புக்கான பிரதியுபகாரங்களும்தான் இதுவரை Patrick Brownனால் தமிழ்ச் சமூகத்திற்கு தரப்பட்டவையாகும். போர்க்குற்றம், இனப்படுகொலை என்றெல்லாம் அவர் பேசுவதெல்லாம் மிகவும் நன்றே. ஆனால் அவையாவன நமது உணர்வாளர்களின் கவனத்தை திசை திருப்பப் போடப்படும் வாண வேடிக்கை என்றுதான் இனிமேல் கொள்ளப்படும்.

நாம் சொல்லாமேலே இங்கு குறிப்பிட்டதையும் தாண்டி ஆக்கபூர்வமாக பல விடயங்களை தமிழ் சமூகத்திற்கு Patrick Brown செய்து தந்திருக்க வேண்டும். அப்படி ஏதாவது நல்லது நடக்கும் என்றுதான் என்னைப்போன்ற பலரும் Brownணுக்கு ஒரு காலத்தில் ஆதரவுக் கொடி பிடித்தோம். “தமிழ் Conservative”களாக அது எம் கடமையும்கூட. ஆனால், சமூகமாக நாம் எதிர்பார்த்தது எதுவும் அவரிடமிருந்து வரவில்லையெனும்போது அவரின் Chief of Staff தமிழராக இருந்தாலென்ன … விட்டாலென்ன?”

கனடா மூர்த்தி

(தேசியம் சஞ்சிகையின் February மாத முகப்புக் கட்டுரை)

இந்தக் கட்டுரையின் குரல் வடிவம் (February 17 – புதன் காலை) வெளியாகும்.

இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவம் வடிவம் (February 17 – புதன் மாலை) வெளியாகும்.

Related posts

Brian Mulroney: முன்னாள் பிரதமரை நினைவு கொள்ளல்

Lankathas Pathmanathan

முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலை ;உண்மையும் நல்லிணக்கமும்

Gaya Raja

கனடா ஸ்ரீ ஐயப்பன் இந்து ஆலய தலைவர் பதவி விலக்கல்?

Lankathas Pathmanathan

Leave a Comment