தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள் குயின்ரஸ் துரைசிங்கம்

Conservative கட்சித் தலைமைக்கான போட்டி : முன்னாள் வேட்பாளர் ஒருவரின் பார்வை

ஒரு சிறந்த அரசியல் தலைவர், நேர்மையும் பொறுப்பும் நிறைந்தவராக இருப்பதுடன், தவறிழைத்தால் அதைத் துணிச்சலுடன் சந்திக்கும் திராணியுள்ளவராக இருப்பது அவசியம். கட்சிக்குள் உள்ள தனது ஆதரவாளர்களை அதிகம் ஆதரித்து, ஒருவர் ஒருவரின் முதுகைச் சொறிந்து, தமக்குத் தேவையானவர்களை அல்லது தமது கட்சிக்கு ஆதாயமும் புகழும் தேடித் தருபவர்களைக் காப்பாற்றுபவராகவும், அதற்காக தவறுகளை நியாயப்படுத்துபவராகவும் இருந்தால், அது நாளடைவில் கட்சிக்கும் கட்சியின் நம்பகத் தன்மைக்கும் பங்கம் ஏற்படுத்தவே செய்யும்.

எத்தனை ஆலோசகர்கள் சுற்றியிருந்து தலைமைக்காகப் பணியாற்றினாலும், இறுதித் தீர்மானம் என்று வரும்போது, தனது சொந்த புத்தியிலும் கொள்கைமீதான தனது சுய வேட்கையிலும் முடிவுகளை மீள்பரிசீலனை செய்து, தனது தலைமைப் பண்பைப் பாதிக்காத இறுதி முடிவை உறுதி செய்ய வேண்டும்.

கனடாவின் Conservative கட்சியைப் பொறுத்தவரை, தலைமைப் பண்புகளும் தகைமைகளும் நிறைந்த ஒரு சிலரும் இம்முறை தலைமைப் போட்டியில் குதித்திருப்பது ஆரோக்கியமான ஒரு முன்னேற்றம். இதற்கு ஏதுவாக, இம்முறை, கட்டுப் பணத்தை பல மடங்கு அதிகரித்திருப்பதும், கையெழுத்து சேகரிப்பது உட்பட, பல்வேறு முன்நிபந்தனைகளையும் தேவைகளையும் பலப்படுத்தியிருப்பதும், வரவேற்கத்தக்க நடவடிக்கைகள். வெற்றிபெற முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களது சமூக அறிமுகத்தையும் விளம்பரத்தையும் அதிகப்படுத்திக் கொள்ளவும், நாளடைவில் பழுத்த பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் திட்டங்களுடனும் தலைமைப் போட்டிக்குப் போட்டியிடும் நிலைமை, கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்தன. இது அனைத்து பிரதான கட்சிகளிலும் காணப்படும் ஒரு தவறான நிலைப்பாடு. இந்த நடைமுறையை, Conservative கட்சி கவனத்தில் எடுத்து, நல்ல முன்னுதாரணமாக பல்வேறு விதிகளையும் கடுமையாக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதை ஏனைய கட்சிகளும் நடைமுறைப் படுத்துவது கனடிய நாட்டின் அரசியல் வளரச்சிக்கு அவசியம் உதவும்.

மிக முக்கியமான கொள்கைகள் என்று வரும்போது, தலைமைக்குப் போட்டியிடுபவரினதும் கட்சியினதும் கொள்கைகள் தவிர, போட்டியிடும் காலப்பகுதியில் முக்கியமானவையாக மக்கள் முன்னிலைப்படுத்தும் விடயங்கள் சார்ந்த தெளிவான கொள்கைகளை, காலதாமதமோ வேறு சாக்குப்போக்குகளோ இன்றி வெளிப்படுத்துவதும், அதில் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதும் முக்கியமானது. உதாரணமாக, கடந்த சில ஆண்டுகளில் பிரதான பேசுபொருளாக மாறியுள்ள காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுதல், ஒருபால் வர்க்கத்தினருக்கான சம உரிமைகள், கல்வி மற்றும் சுகாதார வசதி போன்றவற்றில் சீர்திருத்தம், புதிய குடிவரவாளர் உள்வாங்கல் போன்ற பல விடயங்களும் முதன்மை பேசுபொருளாகக் காணப்படுகின்றன. இவற்றை, தாம் சார்ந்த கட்சிக்காக ஊதிப் பெரிதாக்கி பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் மக்களைத் திசை திருப்பும் பாரிய முயற்சிகளை சில மைய ஊடகங்கள் மிகப்பெரிய நிதிச் செலவில் முன்னெடுக்கின்றன. இதற்காக இரகசிய நிதிப் பரிமாறல்களும் நடைபெறுவதுடன், இத்தகைய பிரச்சாரத்தை இலக்குவைத்து, தமது ஆட்சிக்காலத்தில் பாரிய அரச ஒப்பந்தங்களை தமது செல்வாக்குக்கான ஊடகங்களுக்கு வழங்குகின்ற செயற்பாடுகளும் பெருமளவில் இடம்பெறுகின்றன. இதனால் நாட்டிற்கும் மக்களுக்கும் ஏற்படும் நஷ்டங்களையும் நிதி வங்குரோத்துக்களையும் மக்கள் புரிந்து கொள்ளத் தவறுவது கவலையான விடயமே.

இது தவிர, கனடிய நாட்டின் நிதி வருவாயையும் நிதிவலு நிலையையும் பெரிதும் பாதிக்கும் மற்றைய காரணியாக அல்லது காரணிகளாக தொழிற்சங்கங்களின் (Unions) செயற்பாடுகள் காணப்படுகின்றன. பல கோடி Dollarகளை வருவாயாகப் பெறுகின்ற இத்தகைய தொழிற்சங்கங்கள், தங்களது செயற்பாடுகளுக்கு ஏதுவான, தங்களது செயற்பாட்டை ஆதரிக்கின்ற ஓரிரு கட்சிகளை மட்டும், கண்மூடித் தனமாக புகழ்ச்சியும் பொய்களும் நிறைந்த கடும் பிரச்சாரத்தின் மூலம் மக்களிடம் நியாயப்படுத்தி வருவதுடன், தங்களது முன்னெடுப்புக்களைக் கேள்வி கேட்கும் அல்லது எதிர்கொண்டு சவால்விடும் அனைத்து சக்திகளையும் கடும் நிதிச் செலவுடன் எதிர்கொண்டு அழித்துவிடும் பாணியை தொடர்ந்து செய்து வருவதை மக்கள் கண்டுகொள்ளத் தவறுவது கவலைக்குரியது.

உதாரணமாக, தற்போது Ontario மாகாணத்தில் நடைபெற்று வருகின்ற ஆசிரியர் வேலை நிறுத்தத்தைப் பொறுத்தவரை, தொழிற்சங்கத்தின் தலைமை விளக்கம் கூறும்போது, இந்த வேலை நிறுத்தம் ஆசிரியர்களுக்கானதல்ல, அது ஏனைய தற்காலிக தொழிலாளர்கள், ஏனைய பாடசாலை தொழிலாளர்கள் போன்றவர்களின் நன்மையும் சம்பள உயர்வும் சம்பந்தப்பட்டது என்று ஊடகத்திடம் தெரிவிக்கின்றனர். அது உண்மையாக இருந்தால், மாணவர்களின் கல்வியைப் பாதிக்காத வகையில், நிரந்தர ஆசிரியர்களை தொடர்ந்து பாடசாலையில் கல்வி போதிக்க அனுமதித்து, உண்மையில் பாதிப்டைந்தவர்களாக தொழிற்சங்கம் கருதுகின்ற ஏனைய தொழிலாளர்கள் குறித்து வேலை நிறுத்தத்தையும் பேச்சு வார்த்தைகளையும் மட்டுப் படுத்தலாம். ஆனால், தங்களது வருவாயின் அதிகரிப்பிற்காகவும், பாரிய அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம் தாம் பெறக்கூடிய மேலதிய சொந்த நலன்களுக்காகவும், எதுவித தொழில்சார் அல்லது வருவாய்சார் பிரச்சனைகள் எதுவுமற்ற நிரந்தர ஆசிரியர்களையும் வீதியில் இறக்கி, மாணவர்களையும் அவர்களது பெற்றோரையும் கடும் மன உழைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறார்கள். இத்தகைய தொழிற்சங்கங்களின் பிரச்சார உதவியுடன் வெற்றி பெறும் அரசியல் கட்சி(கள்), தங்களது பிரச்சார வெற்றிக்கான பிரதிபலனாக, தெரிந்தும் தெரியாததுபோல நாடகமாடுவதுடன், அதற்கான கைமாறாக பல்வேறு ஒப்பந்தங்களையும் ஏனைய பரிமாற்றங்களையும் உள்வாங்குகின்றன.

ஒரு கட்சியின் தலைமைக்குப் போட்டியிடும் போது, இத்தகைய மூன்றாம் நிலைக் காரணிகளின் அபரிமிதமான செல்வாக்கும், அந்த செல்வாக்கினால் மக்களுக்கு ஏற்படும் நஷ்டங்களும் தீமைகளும், சரியான முறையில் மக்களைச் சென்றடைய வைப்பது மிக முக்கியமானது.  அவர் ஆணா பெண்ணா என்பதும், அவரது வயது, தொகுதி போன்றவற்றை விட, அவருக்கு மக்கள் மத்தியில் இருக்கின்ற அறிமுகம், செல்வாக்கு, ஆதரவு போன்றன முக்கியத்துவம் பெறுகின்றன.

தற்போதைய கனடிய அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தவரை, ஆளும் கட்சி சிறுபான்மை ஆட்சியைத் தக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில், தலைமையில் தவறுகளும் கட்சியின் சில கொள்கைகளில் காணப்படும் உறுதியற்ற நிலைப்பாடுகளும், நாளடைவில் சிறுபான்மை ஆட்சியை ஆட்டம் காண வைக்கலாம். கட்சியின் வலுவான நிதி நிலையின்மை காரணமாக, சிறுபான்மை ஆட்சிக்கு தற்காலிக ஆதரவு வழங்கக்கூடிய இரு கட்சிகளும், ஆட்சிக் கவிழ்ப்பை விரைவில் மேற்கொள்ள வாய்ப்பில்லாத போதிலும், நாளடைவில் வேறு வழியின்றி அக்கட்சிகள் அதற்கான முன்னெடுத்தலுக்குத் தள்ளப்படலாம். விரைவில் இடம்பெறவுள்ள Conservative கட்சித் தலைமைக்கான போட்டியில், மக்களிடம் ஏற்கனவே செல்வாக்குள்ள ஒருவர் தெரிவுசெய்யப்பட்டால், கட்சியின் அரசியல் வளர்ச்சிக்கு அது பெரிதும் உதவும்.

குயின்ரஸ் துரைசிங்கம்

(2019 கனடிய பொது தேர்தலில் Scarborough-Guildwood தொகுதியின் Conservative கட்சி வேட்பாளர்)

Related posts

யார் இந்த இடைக்கால Conservative தலைவர் Candice Bergen?

Lankathas Pathmanathan

Donate to seek the support of the Premier of Ontario regarding the Tamil Genocide Bill? An invitation on behalf of MPP Vijay Thanigasalam!

thesiyam

அஜித் சபாரத்தினத்திற்கு சாதகமான $123 ஆயிரம் நட்ட ஈடு தீர்ப்பு!

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!