அமெரிக்க ஜனாதிபதியின் அண்மைய வரி விதிப்புகளுக்கு கனடிய பிரதமர் உடனடியாக பதிலளிக்க மாட்டார் என தெரியவருகிறது.
பிரதமர் அலுவலக வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏனைய நாடுகள் மீது செயல்படுத்தும் அமெரிக்காவின் கடுமையான வரிகளிலிருந்து கனடாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டாலும், சில கனடிய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என தெரியவருகிறது.
மேலும் புதன்கிழமை (02) நள்ளிரவு முதல் கனடா உட்பட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் 25 சதவீத வரியை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த வரி விதிப்புகளுக்கு Mark Carney உடனடியாக பதிலளிக்க மாட்டார் என பிரதமர் அலுவலக வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் பதில் நடவடிக்கைகளை வெளியிட ஒரு நாள் காத்திருக்கலாம் எனவும், “கனடியர்கள் மீதான வலியைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில், அதிகபட்ச தாக்கத்துடன் அமெரிக்காவைத் தாக்கும்” வர்த்தக நடவடிக்கைகளை எவ்வாறு சிறப்பாக இலக்கு வைப்பது என்பதை அரசாங்கம் மதிப்பிட இந்த தாமதம் அவசியம் எனவும் கூறப்படுகிறது.
இந்த வரி விதிப்பு அறிவித்தலை எதிர்பார்த்து பிரதமர் தனது தேர்தல் பிரச்சாரத்தை புதன்கிழமை நிறுத்தி வைத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் புதன்கிழமை அவர் கனடா – அமெரிக்கா உறவுகள் சபை, அமைச்சரவை ஆகியவற்றுடன் சந்திப்புகளை மேற்கொண்டார்.
Mark Carney வியாழக்கிழமை (03) காலை கனடாவின் மாகாண முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டவுள்ளார்.