Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் இனப்படுகொலை நினைவு தூபிக்கு அடிக்கல் புதன்கிழமை (14) Brampton நகரில் நாட்டப்பட்டது.
இதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனடிய தூதுவர் Eric Walshசை அழைத்த அமைச்சர் அலி சப்ரி இந்த விடயத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
வாக்கு வங்கி அரசியலுக்காக முன்னெடுக்கப்படும் இது போன்று நகர்வுகளை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கனடிய அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு நினைவுத்தூபி கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Brampton நகர சபையின் தவறான ஆலோசனையின் அடிப்படையிலான செயற்பாடு இலங்கையில் உள்ள அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும் புண்படுத்துகிறது என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த நினைவுத் தூபியை அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு Brampton நகர முதல்வருக்கு கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் Thushara Rodrigo இரண்டு கடிதங்களை எழுதியிருந்தார்.
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றிய Brampton நகர முதல்வர் Patrick Brown, இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக கனடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
கனடிய உள்நாட்டு விவகாரங்களில் இலங்கை அரசாங்கத்தின் தலையீடுகளை கண்டு அஞ்ச போவதில்லை எனவும் Patrick Brown கூறியிருந்தார்.
புதன்கிழமை நடைபெற்ற அடிக்கல் நாட்டு நிகழ்வில், இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.