திங்கட்கிழமை (24) நடைபெறும் Toronto இடைத்தேர்தல் Justin Trudeauவின் அரசியல் எதிர்காலத்திற்கான வாக்கெடுப்பாக கருதப்படுகிறது.
June 24ஆம் திகதி Toronto-St. Paul தொகுதியில் இடைத் தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகிறது. இந்த இடைத் தேர்தல் பிரதமருக்கும் அவரது கட்சிக்கும் ஒரு முக்கிய சோதனையாக அமைகிறது. Liberal கட்சி பல தசாப்தங்களாக சிறப்பாகச் செயல்படும் தொகுதியில் கட்சி எவ்வாறு முன்னேறி வருகிறது என்பதைக் குறிக்கும் தருணமாக இது அமைகிறது.
இந்தத் தேர்தலில் Liberal அரசாங்கம் வெற்றி பெறத் தவறினால், Justin Trudeau பதவி விலக வேண்டும் என்பதற்கான அறிகுறி அதுவென வாக்காளர்கள் சிலர் கருதுகின்றனர். புதிய நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான இடைத் தேர்தலாக இது நடந்தாலும், சில வாக்காளர்கள் இந்த தேர்தலை Justin Trudeau ஆட்சியில் இருக்கும் காலம் குறித்த வாக்கெடுப்பாக கருதுகின்றனர்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக Liberal கட்சி இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று வந்தது. முன்னாள் நீண்ட கால Liberal நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான Carolyn Bennett இந்தத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 2011இல் கட்சியின் வரலாற்றில் மிகக் குறைந்த ஆதரவு இருந்த காலகட்டத்தில் கூட அவர் இலகுவாக வெற்றி பெற்ற தொகுதி இதுவாகும். கடந்த தேர்தலில் அவர் 20 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் அடுத்த திங்கட்கிழமை திட்டமிடப்பட்ட வாக்கெடுப்பு கடுமையான இருமுனை போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொகுதியை வெற்றி பெறக்கூடிய நிலையில் தான் Liberal கட்சி உள்ளது. இதில் வெற்றி பெற்றாலும் வாக்கு வித்தியாசத்தின் அளவு மிகக்குறைவாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பாகும்.
Liberal கட்சியின் ஆதரவு Ontario மாகாணத்தில் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. Ontarioவில் Pierre Poilievre தலைமையிலான Conservative கட்சிக்கான ஆதரவு Liberal கட்சியை விட குறைந்தது 15 சதவீதம் அதிகமாக உள்ளது. இது முன்னர் உறுதியான Liberal கட்சியின் தொகுதிகளில் கூட ஆளும் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். உண்மையில், Conservative கட்சியிடமிருந்து அவர்களை பிரிக்கும் 15 முதல் 20 புள்ளிகள் இடைவெளியை கடக்க Liberal கட்சி போராடுகின்றனர்.
Toronto – St. Paul போன்ற Liberal கட்சியின் “பாதுகாப்பான” தொகுதியில் வெற்றி பெற முடியாவிட்டால், அது கட்சியின் பொதுத் தேர்தல் வாய்ப்புகள் குறித்து கேள்விகளை எழுப்புகிறது. நாடு முழுவதும் உள்ள வாக்காளர்கள் மாற்றம் ஒன்றிற்கு ஆர்வமாக உள்ளதாக தேசிய அளவிலான கருத்துக் கணிப்புகள் சுட்டிக் காட்டும் நிலையில் இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத் தேர்தலில் வாக்காளர்கள் எதிர்கொள்ளும் தேர்வு அடுத்த பொதுத் தேர்தலில் அவர்கள் எதிர்கொள்ளும் தேர்வை பிரதிபலிக்கும் என பிரதமர் வியாழக்கிழமை கூறினார்.
இப்போது தேர்தல் நடத்தப்பட்டால், Conservative கட்சிக்கு 42 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. இது பெரும்பான்மை ஆசனங்களை வெற்றி பெற கூடிய சதவீதமாகும்.
ஆனாலும் Justin Trudeau இவற்றை எல்லாம் கருத்தில் எடுப்பது போல் தெரியவில்லை. 2025ல் வெற்றி பெறுவது சாத்தியம் என பிரதமர் தனது அமைச்சரவையில் சில வாரங்களுக்கு முன்னர் கூறினாராம். தனது குறைந்த ஒப்புதல் மதிப்பீடுகள் குறித்த கவலைகளை அண்மைய நேர்காணல்களில் பிரதமர் நிராகரித்து வருகின்றார். “கனடியர்கள் இப்போது முடிவெடுக்கும் மனநிலையில் இல்லை” என்பது பிரதமரின் ஒரு கருத்தாக இருந்தது.
பிரதமராக பதவியேற்று ஒன்பதாவது ஆண்டில் Justin Trudeau உள்ளார். 2025 தேர்தலில் Liberal கட்சி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், Justin Trudeau தொடர்ந்து நான்காவது முறையாக பிரதமர் பதவியில் கட்சியையும் நாட்டையும் வழிநடத்துவார். கனடாவில் October 2025க்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.