Quebec மாகாண சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கியூபாவில் விபத்துக்குள்ளானது.
ஞாயிற்றுக்கிழமை (02) நிகழ்ந்த இந்த விபத்தில் ஒருவர் மரணமடைந்தார் – 26 பேர் காயமடைந்தனர்.
Santa Clara விமான நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்து நிகழ்ந்த போது, Montreal நோக்கி பயணிக்க இருந்த 38 பயணிகள் பேருந்தில் இருந்ததாக Air Transat உறுதிப்படுத்தியது.
பேருந்தின் எதிரே சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியதால், அது கவிழ்ந்து விபத்துக்குள்ளாதாக விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
விமான நிலையத்திலிருந்து கிழக்கே 25 KM தொலைவில் உள்ள Camajuaní நகராட்சியில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த பேருந்தின் பயணிகள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வாகனத்தில் பயணித்த கியூபா குடிமகன் இந்த விபத்தில் மரணமடைந்ததாக கியூப ஊடகங்கள் தெரிவித்தன.
காயமடைந்தவர்களில் ஆறு குழந்தைகள் உள்ளடங்குகின்றனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
இந்த விபத்து குறித்து அறிந்திருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் தூதரக உதவியை வழங்க தயாராக இருப்பதாகவும் கனடிய வெளிவிவகார அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.