Scarboroughவில் அமையவுள்ள தமிழ் சமூக மைய கட்டுமானப் பணிகள் 2025 அம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தமிழ் சமூக மைய புதிய பணிப்பாளர் சபை விவரங்கள் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் October மாதம் 1ம் திகதி இடம்பெற்ற தமிழ் சமூக மையத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் புதிய பணிப்பாளர் சபை தெரிவு செய்யப்பட்டது.
புதிய பணிப்பாளர்களாக அனுசன் அருள்சோதி, சின்னத்துரை ஜெயக்குமார், சாந்தா பஞ்சலிங்கம், நேத்ரா ரொட்றிகோ, வைத்திய கலாநிதி வடிவேலு சாந்தகுமார், ரமணன் சந்திரசேகரமூர்த்தி, கார்த்திகா சரவணன், தீபிகா விக்னேஸ்வரன் ஆகியோர் தெரிவாகினர்.
இந்த பொதுக் கூட்டத்தை தொடர்ந்து புதிய பணிப்பாளர் சபையின் தலைவியாக நேத்ரா ரொட்றிகோ, செயலாளராக தீபிகா விக்னேஸ்வரன், பொருளாளராக கார்த்திகா சரவணன் நியமிக்கப்பட்டார்கள்.
அதேவேளை வைத்திய கலாநிதி வடிவேலு சாந்தகுமார் பணிப்பாளர் சபையில் இருந்து விலகுவதாக பணிப்பாளர் சபைக்கு அறிவித்தார். இதனை அடுத்து ஏற்பட்ட பணிப்பாளர் வெற்றிடத்திற்கு குபேஷ் நவரட்ணம் புதிய பணிப்பாளராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
தமிழ் சமூக மையத்தின் கட்டுமானப் பணிகளை 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கும் நோக்கில் கட்டுமான அனுமதியை பெற்றுக் கொள்ளல், அதற்கான நிதி சேர் நடவடிக்கைகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ளன. பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து கூட்டு செயற்திட்டங்கள் பலவற்றை மேற்கொள்ளவும் தமிழ் சமூக மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில் தமிழ் சமூக மைய செயல் குழுக்களில் இணைந்து தமிழ் சமூக மையத்தின் கட்டுமானத்தில் தங்கள் பங்களிப்பை வழங்க விரும்புகின்றவர்கள் எதிர்வரும் 16ம் திகதிக்கு முன்பாக தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுளளது.
கனடாவில் தமிழ்ச் சமூக மையம் ஒன்றை அமைப்பதற்கான செயல்திட்டத்திற்கு 26.3 மில்லியன் டொலர்கள் நிதியை மத்திய, மாகாண அரசுகள் வழங்கியுள்ளன.
Toronto நகர சபை 25 மில்லியன் டொலர்கள் பெறுமதியான காணியை தமிழ்ச் சமூக மைய செயற்றிட்டத்திற்காக நீண்டகாலக் குத்தகையாக வருடமொன்றிற்கு 1 டொலர் மற்றும் அதற்கான வரி என்ற அடிப்படையில் வழங்கியுள்ளது.