கனடிய நாடாளுமன்ற புதிய சபாநாயகராக Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Greg Fergus தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஏழு வேட்பாளர்கள் இந்த முக்கிய பதவிக்கு போட்டியிட்டனர்.
இவர்களில் Greg Fergus கனடாவின் 38ஆவது சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.
கனடிய நாடாளுமன்றத்தின் முதல் கறுப்பின சபாநாயகராக இவரது தெரிவு முக்கியத்துவம் பெறுகின்றது.
Ottawaவிற்கு அருகிலுள்ள Hull-Aylmer, Quebec தொகுதியை அவர் பிரதிநிதித்துவ படுத்துகின்றார்.
இந்த தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை சபையில் நடைபெற்றது.
சபாநாயகர் பதவியில் இருந்து Anthony Rota கடந்த வாரம் பதவி விலகினார்.
இரண்டாம் உலகப் போரின்போது Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியருக்கு கனடிய நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட வரவேற்பின் பின்னணியில் இந்த பதவி விலகல் அறிவிக்கப்பட்டது.
உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கடந்த மாதம் கனடாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
இந்த பயணத்தின் போது, கனடிய நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார்.
இந்த உரையின் போது Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்த தவறுக்கு முழு பொறுப்பேற்கிறேன் என Anthony Rota அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மன்னிப்பு கோரினார்.
இதனை தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
Naziகளுடன் இணைந்து போரிட்ட உக்ரேனியரை கனடிய நாடாளுமன்றம் அங்கீகரித்ததற்கு பிரதமர் Justin Trudeau மன்னிப்பு கோரியிருந்தார்.
இது கனடாவை பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்திய தவறு என Justin Trudeau ஒப்புக் கொண்டார்.