December 12, 2024
தேசியம்
ஆய்வுக் கட்டுரைகள்இலங்கதாஸ் பத்மநாதன்கட்டுரைகள்

அஜித் சபாரத்தினத்திற்கு சாதகமான $123 ஆயிரம் நட்ட ஈடு தீர்ப்பு!

Ontario மாகாண உச்ச நீதிமன்றத்தில் தமிழரான அஜித் சபாரத்தினத்திற்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பில் $123,000 நட்ட ஈடு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் வாதியாக அஜித் சபாரத்தினம், பிரதிவாதியாக கணபதிப்பிள்ளை யோகநாதன் ஆகியோர் பெயரிடப்பட்டனர்.

பின்னணி

அஜித் சபாரத்தினம், பல ஆண்டு காலம் ஒரு காப்புறுதி முகவராக அறியப்படுபவர். அவர் October 2001 முதல் November 2017 வரை Sun Life Financial Distributors (Canada) Inc., Sun Life Financial Investment Services (Canada) Inc ஆகிய நிறுவனங்களின் பிரத்யேக நிதி ஆலோசகராக இருந்தவர். தொடர்ந்து தனியார் காப்புறுதி முகவராக செயல்பட்டு வருகின்றார். கனடிய  தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் (CTCC) முன்னாள் தலைவர். Mr.தமிழ் கனடா Inc என்ற அமைப்பின் இணை நிறுவனர்.

கணபதிப்பிள்ளை யோகநாதன், பறை என்ற இணையத்தை நடத்தி வந்தவர். தன்னை ஒரு ஊடகவியலாளராக பொது நிகழ்வுகளிலும், இணையம், சமூக வலைத்தளங்களிலும் அடையாளம் காட்டி வந்தவர். கணபதிப்பிள்ளை யோகநாதன், முக தமிழ் (Mooka Tamil/ Tamil Mooka, MK Tamil ஆகிய பெயர்களிலும் அறியப்பட்டவர். அவர் சட்டப்படி 2016ல் தனது பெயரை தமிழ் முகா என மாற்றியுள்ளார். 2137534 Ontario Corp., k PARAII Media Group, PARAII.com ஆகியவற்றின் உரிமையாளர்.

கணபதிப்பிள்ளை யோகநாதன், அஜித் சபாரத்தினம் குறித்து எழுதிய, பகிர்ந்த கட்டுரைகள், செய்திகளை அடிப்படையாக கொண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இந்த நட்ட ஈட்டுத் தொகை உத்தரவிடப்பட்டுள்ளது. கணபதிப்பிள்ளை யோகநாதன், தனது இணையத்திலும் சமூக வலைத்தளங்களூடாகவும் அஜித் சபாரத்தினம் குறித்து உண்மைக்குப் புறம்பான செய்திகளையும், தகுந்த ஆதாரங்கள் அற்ற செய்திகளையும், அவரது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பண்பாடற்ற வார்த்தைப் பிரயோகங்களையும் இழிமொழிகளையும் உபயோகித்து பகிர்ந்ததாக நீதிமன்றில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

2017ஆம் ஆண்டு Paraii Media Group என்ற நிறுவனத்தை பதிவு செய்து அதன் மூலம் paraii.com  என்ற இணையத்தை நடத்தி வந்தவர் கணபதிப்பிள்ளை யோகநாதன் என்கின்ற முக தமிழ். ஆனாலும் 2020ஆம் ஆண்டின் இலையுதிர் காலம் முதல் தனது இணையதளம் செயலிழந்துள்ளதாக  பிரதிவாதி தெரிவிக்கிறார். அதற்கான காரணம் தெளிவு படுத்தப்படவில்லை. ஆனாலும் இணையத்தளம் வேண்டுமென்றே அகற்றப்படவில்லை என அவர் கூறுகிறார்.

அவதூறு குற்றச் சாட்டு

2019ஆம் ஆண்டு July முதல் November வரை குறிப்பிட்ட அவதூறு பரப்பும் செயல்கள் நிகழ்ந்ததாக வாதி குறிப்பிடுகின்றார். நீதிமன்ற ஆவணங்களின் பிரகாரம் 2019ஆம் ஆண்டு July 7ஆம் திகதி முதலாவது கட்டுரை வெளியானது. தொடர்ந்து November 6, 7, 9, 10 ஆம் திகதிகளிலும் கட்டுரைகள் பதிவேற்றப்பட்டன.

வாதி குற்றவியல், மோசடி, முறையற்ற நடத்தையில் ஈடுபட்டதாக கட்டுரைகள் குற்றம் சாட்டுகின்றன. நிதி முறைகேடு உட்பட வேறு குற்றச்சாட்டுகளும் இதில் அடங்குகின்றன.

குறிப்பாக CTCC எனப்படும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக அஜித் சபாரத்தினம் செயற்பட்ட காலத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் இந்த கட்டுரைகளில் அதிகம் இடம் பிடித்துள்ளன.

வாதி CTCC இன் தலைவராக இருந்த காலத்தில் சரியான நிதி ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்பது இதில் பிரதான குற்றச்சாட்டாகும்.

தொடரப்பட்ட வழக்கு 

November 2019 இறுதியில், வாதி பிரதிவாதிக்கு அவதூறு கடிதம் அனுப்பினார். கடிதம் கிடைக்கப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் குறிப்பிட்ட கட்டுரைகள் அகற்றப்பட வேண்டும் எனவும் ஒரு வாரத்துக்குள் மன்னிப்புக் கோரப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டது.

அவதூறு கடிதம் கிடைத்த பின்னரும், பிரதிவாதிகள் மன்னிப்பு கோர  முன்வரவில்லை. கட்டுரைகளை அகற்றவும் இல்லை.

இந்த பின்னணியில் அவதூறு நடவடிக்கை December 30, 2019 அன்று ஆரம்பமானது.

இந்த வழக்கு Ontario மாகாண உச்ச நீதிமன்ற நீதிபதி J. VERMETTE முன்னினையில் February மாதம் 3ஆம் திகதி 2022 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அஜித் சபாரத்தினம் சார்பில் James Lane, கணபதிப்பிள்ளை யோகநாதன் சார்பில் Melvin Rotman ஆகியோர் வழக்கை வாதிட்டனர்.

வழக்கின் ஆரம்பத்தில் வாதி, பிரதிவாதிக்கு எதிராக, அவதூறு குற்றச் சாட்டில் $250,000 நட்ட ஈடு கோரினார். தவிரவும் $50,000 தண்டனைக்குரிய, ஏனையவர்களை இவ்வாறான செயல்களைச் செய்வதனைத் தடுக்கும் முகமாக முன்மாதிரியான சேதமாக கோரினார். மேலும் இனிவரும் காலத்தில் பிரதிவாதி தான் குறித்து அவதூறான அறிக்கைகள் வெளியிடுவதை தடுக்கும் நிரந்தரத் தடையையும் நீதிமன்றின் ஊடாக கோரினார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, தனது கட்டுரைகளுக்கு பதிலளிப்பதற்கு போதுமான வாய்ப்பை வாதிக்கு வழங்காதது குறித்து பிரதிவாதி தனது வாக்குமூலத்தில் வாதியிடம் மன்னிப்பு கோரினார். அவர் பின்வருமாறு தனது மன்னிப்பில் கூறியிருந்தார்.

எழுதப்பட்ட விடயங்களில் தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தியது என்னைப் பொறுத்தமட்டில் அபத்தமானது என்பதை இந்த வழக்கின் போது நான் உணர்ந்து கொண்டேன். மனுதாரர் (வாதி) குறித்த, ஒரு உறுப்பினரின் (CTCC) தனிப்பட்ட கருத்துக்களை எடுத்துக் கொண்டது எனது முடிவின் தவறாகும்.  நான் தகவல்களை மாத்திரம் வெளியிடுவதில் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும். அதன் மூலம் வாசகர்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதித்திருக்க வேண்டும்.

தீர்ப்பு

இந்த வழக்கின் தீர்ப்பில், நட்ட ஈட்டுத் தொகை இரண்டு தினங்களின் வழங்கப்பட்ட தீர்ப்பில் அறிவிக்கப்பட்டது.

August மாதம் 18 ஆம் திகதி $100,000 பிரதிவாதி வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பொது நட்ட ஈடாக $75,000, தண்டனையாகவும், ஏனையவர்களை இவ்வாறான செயல்களைச் செய்வதனைத் தடுக்கும் முகமாக முன்மாதிரியாக விதிக்கப்பட்ட $25,000 தண்டப் பணமும் அடங்குகின்றது.

November மாதம் 22ஆம் திகதி நட்ட ஈடாக $23,000 வாதிக்கு பிரதிவாதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நட்ட ஈடு தீர்ப்பு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் வழங்கப்பட்ட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தவிரவும் மேலதிக நிபந்தனைகளும், உத்தரவுகளும் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கதாஸ் பத்மநாதன்

(Sabaratnam v. Mooka (2022 ONSC 477920220818) வழக்கு விசாரணையின் முடிவுகளை அறிவிக்கும் நீதிமன்ற உத்தியோகபூர்வ ஆவணத்தின் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)

Related posts

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை பகிரங்கமாக வெளிப்படுத்திய Longueuil நகர முதல்வர்

மீண்டும் தமிழர்கள் வசம் வருமா ஏழாம் வட்டாரம்?

Lankathas Pathmanathan

கனடாவில் அவசர காலச் சட்டம்: “இது தகுமோ.. முறையோ.. தர்மம் தானோ…?”

Lankathas Pathmanathan

Leave a Comment