கனடா முழுவதும் குழந்தைகளும் குடும்பங்களும் எதிர்கொள்ளும் சுவாச நோய் தொற்று குறித்து கவலை அடைவதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.
குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சுவாச நோய் தொற்று, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் மருத்துவமனைகளில் தொடர்ந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக அவர் கூறினார்.
கடந்த வார இறுதியில், காய்ச்சல் நோய்களின் அதிகரிப்பை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் வழக்கமான சேவைகளை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
குறிப்பாக Ontarioவின் சில பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
கிழக்கு Ontarioவின் குழந்தைகள் மருத்துவமனைக்கு செஞ்சிலுவைச் சங்கம் உதவி வருகிறது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க இரண்டாவது தீவிர சிகிச்சைப் பிரிவை கடந்த மாதம் இந்த மருத்துவமனை திறக்க வேண்டி இருந்தது.
November 26ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில், 16 வயதுக்குட்பட்டவர்ளில் 223 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் பொதுச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சுவாச தொற்று நோய்களின் பரவலைக் குறைக்க முகக்கவசங்களின் அறிமுகம் குறித்து நிபுணர்களின் ஆலோசனையை தொடர்ந்து பெற்று வருவதாக Trudeau கூறினார்.
அனைத்து கனடியர்களும் தங்கள் COVID தடுப்பூசிகளை பெற்றிருப்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் வலியுறுத்தினார்.