தேசியம்
கட்டுரைகள்

காட்டுக் கோழி – கனடிய தமிழ் குறும்படம் குறித்த ஒரு குறிப்பு

கனடாவைச் சேர்ந்த வாரன் சின்னத்தம்பியின் தயாரிப்பில் கலைச் செல்வனின் நெறியாள்கையில் வெளியாகும் குறும்படம் “காட்டுக் கோழி”.

இலங்கைத்தீவின் யுத்தத்தில் காயமடைந்த போராளிக்கு ஒரு குடும்பம் அடைக்களமளிக்கின்றது. அவர்களின் மகள் ஒரு கோழியை மிகவும் ஆசையாக வளர்த்து வருகின்றாள்.

இராணுவம் அக்கிராமத்தை ஆக்கரமிக்க எறிகணை வீசுகையில் கோழி இறந்து விடுகின்றது. இறந்த கோழியை மகள் புதைத்து கண்ணீர் விடுகின்றார். இராணுவம் போராளிக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக அக்குடும்பத் தலைவனை கைது செய்கின்றது.

அக்கிராமத்தில் தொடர்ந்து வாழ்வது கடினம் என உணர்ந்த தாயும் மகளும் வேறு கிராமத்துக்கு புலம் பெயர்கின்றனர். அவர்கள் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேறும் பொழுது மகள், தந்தை வீட்டின் முன் நிற்பதாக நினைக்கின்றாள்.

இராணுவத்தால் கைது செய்து  அழைத்துச் செல்லப்பட்டவர்களில் வெறும் பத்து சத வீதத்தினர் மட்டுமே திரும்பி வந்ததாக வரலாறு கூறுகின்றது.

காட்டுக் கோழி இலங்கையின் தேசியப் பறவையாகும். தவிரவும் காட்டுக் கோழி இலங்கையிலேயே மட்டும் வாழ்வதாக அமெரிக்க மிருகக் காட்சிச் சாலைக் குறிப்புக்கள் தெரியப்படுத்துகின்றன.

காட்டுக் கோழிக் குறும்படம் இலங்கையில் இனங்களுக்கிடையிலான சமாதானத்துக்கான சாத்தியக்கூறுகள் சாத்தியமற்றதாகிவிட்டதையும், காணாமல் போனோரை மீண்டும் காணமுடியாது என்பதனையும் 14 நிமிடங்களில் வெளிப்படுத்துகின்றது.

மண்ணுடன் மனிதர்கள் மட்டுமல்ல, மிருகங்கள், பறவைகள், ஊர்வன, மரங்கள் என அனைத்தும் இணைந்தே வாழ்கின்றன. அந்த மண்ணுக்கு உயிர்ப்பை இவையனைத்தும் இணைந்தே வழங்குகின்றன.

இக்குறும்படம் இலங்கையின் அண்மைக் கால பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்பாக படமாக்கப்பட்டது. ஆனாலும் இனங்களுக்கிடையிலான சமத்துவத்தின் முக்கியத்துவத்தை இக்குறும்படத்தை பார்க்கும் பொழுது உணரக்கூடியதாகவுள்ளது.

குறும்படத்தின் இறுதியில் வீட்டை விட்டு வெளியேறும் காட்சி இலங்கையில் யுத்த காலத்தில் நிகழ்ந்த பல வலிய இடப்பெயர்வு சம்பவங்களையும் நினைவுபடுத்துவதாக அமைந்தன.

இனக்கலவரங்களின் போது தங்களது உறவுகளின் உயிர்களை இழந்து, உறைவிடத்தையும் இழந்து வெளியேறிய மக்களையும் நினைவுபடுத்துவதாக அவை அமைந்தன.

யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்களும் நினைவுக்கு வந்தார்கள்.

காட்டுக் கோழியின் இறப்பு இனங்களுக்கிடையிலான சமாதானத்தின் மரணத்தின் குறியீடாக குறும்படத்தில் வருகின்றது.

உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இக்குறும்படம் எடுக்கப்பட்டதாக தயாரிப்பாளர் வாரன் சின்னத்தம்பி தெரிவித்தார்.

இவ்வாறு பல நூறு உண்மைச் சம்பவங்கள் எங்கள் மத்தியில் உள்ளன.

 

ரதன்

இக்குறும்படம் இதுவரை எங்கும் திரையிடப்படவில்லை. பிரத்தியேக காட்சி ஒன்றில் பார்த்த பின்னரே இக்குறிப்பு எழுதப்படுகின்றது.

 

இந்தக் கட்டுரை August 2022 தேசியம் பதிப்பில் வெளியானது.

Related posts

கனடிய தமிழ் சமூக மைய புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு கூட்டம் குறித்த கேள்விகள்

Lankathas Pathmanathan

எல்லாம் “Tamil Fest” செய்யும் மாயம்!

Lankathas Pathmanathan

முன்னிலை நலம் காப்போர் – முன்கள பணியாளர்கள்: செய்திகளில் அதிகம் இடம்பிடித்தவர்கள்!

Gaya Raja

Leave a Comment