தேசியம்
கட்டுரைகள்

சவாலான காலத்தை எதிர்கொள்ளும் Andrea Horwath

நீண்ட காலமாக அரசியலில் உள்ள Ontario மாகாண புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) தலைவி Andrea Horwathதிற்கு இது சிக்கலான காலம்.

கனடாவில் தற்போது பெரிய அரசியல் கட்சியொன்றின் தலைவராக மிக நீண்டகாலமாக இருப்பவர் Andrea Horwath தான். கடந்த (February) மாதம், Ontario மாகாண NDPயின் தலைவராக Horwath தெரிவாகி 12 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. இந்த நாட்களில் மிகவும் கடினமான, அழுத்தம் மிக்க, துன்பகரமான அரசியல் பயணத்தில் அவரது நீண்ட கால சாதனையை தற்போதுள்ள மாகாண அல்லது மத்திய கட்சித் தலைவர்கள் எவரும் இதுவரை நெருங்கவில்லை.

பல தராதரங்களின்படி, Horwath, NDP தலைவராக குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அனுபவித்துள்ளார். Ontarioவில் மிகவும் நம்பகமான கட்சித் தலைவராக அவர் தொடர்ந்தும் இருந்து வருகிறார். கடந்த மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் அவர் தனது கட்சியை வழிநடத்தியுள்ளார். ஒவ்வொரு தேர்தலிலும் சட்டப்பேரவையில் NDPயின் ஆசனங்கள் அதிகரித்ததுடன், வாக்குகளின் சதவீதமும் உயர்ந்து இருக்கிறது.

தற்போது Ontarioவில் Horwath 40 ஆசனங்களுடன் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைவராக அவர் உள்ளார்.

1990ஆம் ஆண்டுகளில் முன்னாள் தலைவர் Bob Rae தலைமையில் NDP ஆட்சியமைத்ததில் இருந்து இதுவே அந்தக் கட்சியின் அதிக ஆசன எண்ணிக்கையாக அமைந்துள்ளது. நிதி, சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் அடங்கலாக மிக முக்கிய பதவிகளில் பெண்களை நியமித்து, தனது நிழல் அமைச்சரவையை மாற்றியமைத்தமைக்காக அண்மையில் அவர் பலரதும் பாராட்டைப் பெற்றார்.

முதல்வர் Doug Ford கடுமையாக எதிர்க்கும், Ontario தொழிலாளர்களுக்கு ஊதியத்துடனான சுகயீன விடுமுறை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக மாகாண சட்டமன்றத்தில் போராட்டத்தை வழிநடத்தியமைக்காக கிடைக்க வேண்டிய பாராட்டுக்களையும் Horwath அண்மையில் பெற்றுக் கொண்டார்.

NPDக்கான நிதி திரட்டலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 2020 ஆம் ஆண்டில் 2.9 மில்லியன் டொலர்கள் நன்கொடை வசூலித்த Conservative கட்சிக்கு அடுத்தபடியாக, NDP 2.5 மில்லியன் டொலர்களை திரட்டியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலுக்கான கடுமையான தயார்ப்படுத்தல்களை ஆரம்பித்துள்ள Horwathதிற்கு இதன் மூலம் கணிசமான நிதி கிடைத்துள்ளது.

இவ்வளவு சாதகமான விடயங்கள் இருந்தாலும், Horwathதிற்கு மிகவும் சிரமமான நேரங்கள் இவை.

Conservative கட்சிக்கும், Steven Del Ducaவின் புதிய தலைமைத்துவத்துடன் மீளெழும் Liberal கட்சிக்கும் அடுத்து, மூன்றாவது இடத்தில் NDP இருப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. Abacus Data கணக்கெடுப்பில் Conservative கட்சி 34 சத வீதத்தைப் பெற்றுள்ளனர். 2018ஆம் ஆண்டு தேர்தலில் பெற்றுக்கொண்ட வீதத்தை விட இது 7 சத வீதம் குறைவாக பதிவாகியுள்ளது.

Liberal கட்சி 29 சத வீதத்தைப் பெற்றுள்ளனர். கடந்த தேர்தலை விட இது 10 சத வீத அதிகரிப்பாகும். NDP 6 சத வீத வீழ்ச்சியுடன், 25 சத வீதத்தைப் பெற்றுள்ளனர். பசுமைக் கட்சியினருக்கு 8 வீதம், அதாவது 3 புள்ளிகள் அதிகமாகக் கிடைத்துள்ளது.

இதனைவிட, Horwathத்துக்கான வாக்காளரிடையே பரந்தளவிலான உற்சாகம் கவலையளிக்கும் விதமாக குறைவடைந்திருப்பதுடன் அவர் குறித்த தனிப்பட்ட பிம்பம் கலவையானதாகவே உள்ளது. 2009ஆம் ஆண்டு March 7 ஆம் திகதி தலைவரானதில் இருந்து இந்த நடப்புக் கோலம் அவரை விடாப்பிடியாகத் தொடர்கிறது.

உண்மையில், தற்போதைய நிலை தொடர்ந்தால், Del Duca ஒப்பீட்டளவில் வாக்காளர்கள் மத்தியில் அறியப்படாத நிலையிலும் கூட, 2022ஆம் ஆண்டு June மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் Horwath ஆசனங்களையும் வாக்குகளையும் இழந்து, Conservative கட்சிக்கும், Liberal கட்சிக்கும் பின்னால் மூன்றாவது இடத்திற்கு தனது கட்சியை வீழ்த்தும் உண்மையான அச்சுறுத்தலை எதிர்கொள்வார்.

Horwathத்தின் தலைமையிலான NDPக்கு பொது நிதியும், பணியாளர்களும் Liberal கட்சியை விட அதிகமாக இருந்தாலும், அதன் பலனை அனுபவிக்காதவாறு அவர்கள் மூன்றாவது இடத்திற்கு வீழ்த்தப்படுவது மோசமானதாக அமையும்.

அதிகாரபூர்வ எதிர்க்கட்சி என்பதால், NDP தனது தலைவரின் அலுவலகத்திற்காகவும் ஆய்வு நடவடிக்கைகளுக்காகவும் வருடாந்தம் சட்டமன்ற வரவு செலவுத் திட்டத்தில் 4.07 மில்லியன் டொலர்களைப் பெறுகிறது.
ஒட்டுமொத்தமாக கட்சிக்காக பணியாற்ற ஊதியம் பெறும் 50 பணியாளர்கள் உள்ளனர்.

2018ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் உத்தியோகபூர்வ கட்சி என்னும் அந்தஸ்தை Liberal கட்சி பெறத் தவறியதை அடுத்து, அக்கட்சிக்கு எவ்வித சட்டமன்ற நிதியும் கிடைப்பதில்லை. Liberal கட்சியின் அனைத்து ஊழியர்களுக்கும் கட்சி நேரடியாக ஊதியம் வழங்குகிறது அல்லது அவர்கள் ஊதியம் பெறாத தன்னார்வத் தொண்டர்களாகவும் உள்ளனர்.

NDP விசுவாசிகளைப் பொறுத்தவரை, கட்சி ஏன் கருத்துக் கணிப்புகளில் பின்நோக்கிச் செல்கின்றது என்பது இந்த நேரத்தில் குழப்பமாகவுள்ளது. அதன் தற்போதைய வாக்காளர் ஆதரவு பாரம்பரிய மட்டங்களை விட அதிகமாக உள்ளது என்பது உண்மையான விடயம். குறைவான ஆதரவைப் பெற்றுள்ள Liberal கட்சி வளர்ச்சிப் போக்கைக் கொண்டிருப்பதும், NDP கீழ்நோக்கி செல்வதும் கவலையளிக்கிறது.

மக்கள் Fordஐ விரும்பாத போதும், 2022 ஆம் ஆண்டில் ஆளும் Conservative கட்சியை தோற்கடிப்பதற்கு, உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான NDPயை அல்லாமல், மூன்றாமிடத்திலுள்ள Liberal கட்சியையே சிறந்த வாய்ப்பாகப் பார்க்கிறார்கள்.

இது Horwathதிற்கு ஒரு சிக்கலான காலத்தை எடுத்துரைக்கின்றது. அதிக வாக்காளர்களுடன் இணைவதற்கும், அதிக ஊடக வெளிப்பாட்டைப் பெறுவதற்கும், கட்சியின் வரவிருக்கும் பிரசாரத்தில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் புகுத்தவும் அவர் ஒரு வழியைக் கண்டுபிடித்தேயாக வேண்டும்.

அவர் அவ்வாறு செய்யத் தவறினால், தேர்தலுக்குப் பின்னர், கனடாவில் நீண்டகாலம் கடமையாற்றிய கட்சித் தலைவர் எனும் நிலையை முடிவிற்குக் கொண்டு வந்து, தனது NDP தலைவர் பதவியிலிருந்து அவர் விலகவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு விடும்.

ராகவி புவிதாஸ்


(தேசியம் சஞ்சிகையின் March 2021 பதிப்பில் வெளியான கட்டுரை)

Related posts

முன்னிலை நலம் காப்போர் – முன்கள பணியாளர்கள்: செய்திகளில் அதிகம் இடம்பிடித்தவர்கள்!

Gaya Raja

Brian Mulroney: முன்னாள் பிரதமரை நினைவு கொள்ளல்

Lankathas Pathmanathan

கொண்டாடப்படுவது போல் Funny Boy ஒன்றும் முற்போக்கான திரைப்படம் அல்ல!

Lankathas Pathmanathan

Leave a Comment