கனடிய முதற்குடியினர் அனுபவித்த வன்முறை மீண்டும் நிகழாத எதிர்காலத்திற்காக பிரார்த்தனை செய்வதாக திருத்தந்தை பிரான்சிஸ் செவ்வாய்க்கிழமை (26) கூறினார்.
கனடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள போப் பிரான்சிஸ் செவ்வாயன்று Edmonton கால்பந்து மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் முதியோர்களின் முக்கியத்துவம் குறித்து திருத்தந்தை உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
முதற்குடியினர் நல்லிணக்கத்தை இலக்காகக் கொண்ட திருத்தந்தையின் ஆறு நாள் கனடிய பயணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.
கனடாவின் வதிவிட பாடசாலைகளில் கத்தோலிக்க திருச்சபை ஆற்றிய பங்கிற்கு போப் பிரான்சிஸ் திங்கட்கிழமை பகிரங்க மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை திருத்தந்தை Albertaவிலிருந்து Quebec நகரத்திற்கு பயணமாகிறார்.
அவர் தனது கனடிய பயணத்தை Nunavut பிரதேசத்தின் தலைநகர் Iqaluitடில் நிறைவு செய்யவுள்ளார்.