COVID தொற்றின் பரவலை தடுக்கும் நடவடிக்கைக்கு கனடிய அரசாங்கம் மேலதிகமாக 8.1 பில்லியன் டொலர்களை செலவு செய்ய உறுதியளித்தது.
துணை பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland புதிய Liberal அரசாங்கத்தின் முதலாவது பொருளாதார அறிக்கையை செவ்வாய்க்கிழமை (14) வெளியிட்டார்.
இந்த இலைதுளிர் கால பொருளாதார மற்றும் நிதி மேம்படுத்தல் அறிக்கையில் கனடிய அரசாங்கத்தின் பற்றாக்குறையில் மிதமான சரிவை அவர் கணித்துள்ளார்.
அடுத்த ஏழு ஆண்டுகளில் 71.2 பில்லியன் டொலர்கள் செலவினங்கள் இன்றைய அறிக்கையில் அறிவிக்கப்பட்டன.
இந்த செல்வீனங்கள் 2021-22 நிதியாண்டில் 28.4 பில்லியன் டொலர்களுடன் ஆரம்பிக்கின்றது.
இந்த 28.4 பில்லியன் டொலர்களில் Omicron திரிபை எதிர்கொள்ள 4.5 பில்லியன் டொலர்கள், 5 பில்லியன் டொலர்கள் British Colombia மாகாண வெள்ள மீட்பு முயற்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய தொற்று எதிர்ப்பு திட்டங்களில், COVID சிகிச்சை முறைகளுக்காக கனடாவின் பொது சுகாதார நிறுவனத்திற்கு 2021-22 முதல் இரண்டு ஆண்டுகளில் 2 பில்லியன் டொலர்கள் ஒதுக்க அரசாங்கம் முன்மொழிகிறது.
மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் விரைவு COVID சோதனைகளுக்காக Health கனடா மற்றும் கனடாவின் பொது சுகாதார நிறுவனத்திற்கு 1.7 பில்லியன் டொலர்களை வழங்கவும் அரசாங்கம் முன்மொழிகிறது.
குறைந்த வருமானம் கொண்ட மூத்தவர்களுக்கு வழங்குவதற்காக 742.4 மில்லியன் டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய பொருளாதார மதிப்பீடுகள் கனடிய பணவீக்கம் அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இரண்டு சதவீத இலக்கை அடையலாம் என பரிந்துரைக்கப்பட்டது.
ஆனாலும் Omicron திரிபின் அதிகரிப்பு, அந்த முன்னறிவிப்புகள் மாறக்கூடும் நிலையை தோற்றுவித்துள்ளதாக நிதியமைச்சர் Freeland கூறினார்.
2021-22 இல் பற்றாக்குறை 144.5 பில்லியன் டொலராக குறையும் என இன்று வெளியான பொருளாதார அறிக்கை கணித்துள்ளது.
இது வசந்த கால வரவு செலவு திட்டத்தில் மதிப்பிடப்பட்ட 154.7 பில்லியன் டொலர்களில் இருந்து 10.2 பில்லியன் டொலர்கள் குறைவாகும்.
இதன் மூலம் 2022-23 நிதியாண்டில், பற்றாக்குறை 58.4 பில்லியன் டொலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது முன்னர் கணிக்கப்பட்ட 59.7 பில்லியன் டொலரை விட சற்று குறைந்ததாகும்.