கனடாவின் Olympic புறக்கணிப்பை கேலிக்கூத்து என சீனா நிராகரித்தது.
2022 Beijing குளிர்கால Olympic போட்டிகளை ஏனைய நாடுகளுடன் இணைந்து இராஜதந்திர ரீதியில் புறக்கணிப்பதாக புதன்கிழமை (08) கனடா அறிவித்ததை ஒரு கேலிக்கூத்து என சீனா விமர்சித்தது.
2022 Olympic, Paralympic போட்டிகளை இராஜதந்திர ரீதியில் புறக்கணிப்பதாக புதன்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் Justin Trudeau அறிவித்திருந்தார்.
இந்த முடிவின் மூலம், கனடிய அரசாங்க அதிகாரிகள் Beijing குளிர்கால போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார்கள் என பிரதமர் கூறினார்.
இது ஒரு சங்கிலி எதிர்வினையை தூண்டும் என சீனா கவலைப்படவில்லை என சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை (09) கூறினார்.
ஏராளமான நாட்டுத் தலைவர்கள், அரசுத் தலைவர்கள், அரச குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் குளிர்கால Olympic போட்டிகளில் கலந்து கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
சீனாவில் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் February 4 முதல் 20 வரை நடைபெறும் Olympic விளையாட்டுப் போட்டிகளுக்கு அரசு உயரதிகாரிகளை அனுப்ப மாட்டோம் என்று கனடா உட்பட மூன்று நாடுகள் இதுவரை அறிவித்துள்ளன.
இந்த இராஜதந்திர புறக்கணிப்பின் கீழ், மூன்று நாடுகளும் தங்கள் விளையாட்டு வீரர்களை போட்டியிட அனுமதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல முன்னாள் இராஜதந்திரிகளும் சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்களும் கனடா இந்த Olympics போட்டிகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.