COVID தடுப்பூசி ஆணையில் வங்கிகளையும், தொலைத்தொடர்பு துறைகளையும் உள்ளடக்க கனடிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கூட்டாட்சி ஒழுங்குமுறை படுத்தப்பட்ட அனைத்து பணியிடங்களையும் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய ஆணை பிறப்பிக்கப்படும் என செவ்வாய்க்கிழமை (07)அறிவிக்கப்பட்டது.
தொழில்துறை அமைச்சர் Seamus O’Regan இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பொதுத்துறை மற்றும் கூட்டாட்சி ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட விமானம், புகையிரதம், கடல் போக்குவரத்து துறைகளில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் தடுப்பூசிகளை பெறுவதற்கு கட்டாயப்படுத்துவதாக கூறிய இரண்டு மாதங்களுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியானது.
இந்த புதிய விதிமுறைகள் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடைமுறைக்கு வரும்.
அனைத்து கூட்டாட்சி ஒழுங்குபடுத்தப்பட்ட பணியிடங்களில் தடுப்பூசியை கட்டாயமாக்குவது தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள், அவர்களின் சமூகங்களைப் பாதுகாக்கும் என அமைச்சர் O’Regan ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதிய Omicron திரிபு பரவ ஆரம்பித்த காலத்தில் இருந்து, 12 வயதுக்கு மேற்பட்ட கனேடியர்களில் 15 சதவீதம் பேர் இதுவரை முழுமையாக தடுப்பூசி போடவில்லை என தரவுகள் காட்டுகிறது.