தேசியம்
கட்டுரைகள்ராகவி புவிதாஸ்

Trudeauவின் Liberal கட்சி தனது மூன்றாவது ஆட்சிக் காலத்துக்கென வழங்கியுள்ள வாக்குறுதிகள் …..

COVID பெருந்தொற்றிலிருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதற்காக பில்லியன் கணக்கான டொலர்கள் புதிய செலவீனங்களை உள்ளடக்கிய வாக்குறுதிகளை Justin Trudeauவும் அவரது Liberal கட்சியும் வழங்கி ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை மீண்டும் அமைத்துக் கொண்டுள்ளனர்.

அவரது Liberal கட்சி September முதலாம் திகதி வௌியிட்ட திட்டங்களில் பெருந்தொற்று (pandemic), காலநிலை மாற்றம் (climate change), வீடமைப்பு (housing), சுகாதார பராமரிப்பு (health care), பொருளாதாரம் (economy), நல்லிணக்கம் (reconciliation) என்னும் ஆறு முக்கிய வாக்குறுதிகள் அடிப்படையாகவிருந்தன.

Liberal கட்சியின் மூன்றாவது ஆட்சிக்காலத்தில் கனேடியர்கள் எதிர்பார்க்கக்கூடிய சில முக்கிய வாக்குறுதிகள்:

பெருந்தொற்று

தனிப்பட்ட சுகாதார உதவிகளை வழங்கும் ஆயிரக்கணக்கான புதிய தொழிலாளர்களுக்கு பயிற்சியளிக்கவும் சம்பள உயர்வை வழங்கவும் 9 பில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக உறுதியளித்துள்ளனர். மத்திய அரசின் ஊழியர்களுக்கு 10 நாட்கள் ஊதியத்துடன் கூடிய சுகயீன விடுப்பு, பாடசாலைகளில் காற்றோட்டத்தை மேம்படுத்த நிதி, தடுப்பூசிகள் தேவை என்று முடிவு செய்யும் வணிகங்களுக்கு சட்டபூர்வமான பாதுகாப்பு ஆகியவற்றை வழங்குவதாகவும் Liberal கட்சி வாக்குறுதியளித்துள்ளது.

COVID பெருந்தொற்றின் நீண்டகால சுகாதார பாதிப்புகளை ஆய்வு செய்ய 100 மில்லியன் டொலர்களை ஒதுக்குவதாகவும் Liberal கட்சியினர்  உறுதியளித்துள்ளனர். அதில் COVID பெருந்தொற்றின் நீண்ட கால பக்கவிளைவுகள் (long haulers), வெவ்வேறு மக்கள் தொகையில் அவற்றின் தாக்கம் என்பன குறித்தான ஆய்வும் அடங்கும். மாகாண தடுப்பூசி கடவுச்சீட்டுகளுக்கு (vaccine passports) 1 பில்லியன் டொலர்களை ஒதுக்குவதாகவும் Liberal கட்சி உறுதியளித்துள்ளது. அதன் ஏதேனுமொரு வடிவத்தை ஏறக்குறைய ஒவ்வொரு மாகாணமும் தற்போது பின்பற்றுகின்றன.

வீடமைப்பு

கனடாவின் வீட்டுவசதி நெருக்கடியை தீர்ப்பதற்கு, Liberal கட்சி அடுத்த நான்கு ஆண்டுகளில் 1.4 மில்லியன் வீடுகளை கட்டுவதாகவும், பாதுகாப்பதாகவும் அல்லது திருத்தம் செய்வதாகவும் உறுதியளித்துள்ளதுடன், தேசிய வீடமைப்பு இணை முதலீட்டு நிதிக்கு (National Housing Co-investment) 2.7 பில்லியன் டொலர்கள் அதிகரித்த நிதியுதவியை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

கனேடியர்கள் புதிய வீடொன்றை வாங்க உதவுவதற்காக, தொகை மறைப்பு ஏலங்களை (blind bid) தடை செய்வதாகவும் வீடு வாங்க உதவுவதற்கு 1 பில்லியன் டொலர் கடன்கள் மற்றும் மானியங்களை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சுகாதார பராமரிப்பு

அனைத்து கனேடியர்களும் குடும்ப மருத்துவரைக் கொண்டிருப்பதையும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பெற்றுக்கொள்வதையும் உறுதிப்படுத்துவதாக Liberal கட்சி வாக்குறுதியளித்துள்ளது. நீண்ட கால பராமரிப்பு இல்லங்களை உயர் தரத்தில் பேண 5 ஆண்டுகளில் 3 பில்லியன் டொலர்களை Liberal கட்சி வழங்குகிறது.

மனநலத்தைப் பொறுத்தவரை, COVID தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை இலக்காகக் கொண்ட மனநல, PTSD திட்டங்களுக்காக 150 மில்லியன் டொலர்களையும் Canada Mental Health Transfer ஒன்றுக்கு 5 ஆண்டுகளில் 4.5 பில்லியன் டொலர்களையும் ஒதுக்குவதாக Liberal கட்சி வாக்குறுதியளித்துள்ளது. மனநல பிரச்சினையை கையாள 3 இலக்க (three-digit) நேரடி தொலைபேசி அழைப்பு இலக்கத்தை (hotline) கட்சி செயற்படுத்தும்.

பொருளாதாரம்

பெருந்தொற்றின் போது இழக்கப்பட்ட ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகளை வடிவமைக்கப்பட்ட வணிகச் சலுகைகள் மூலம் மீட்டு, மக்களை மீண்டும் வேலையில் அமைர்த்துவதாக லிபரல்கள் உறுதியளித்துள்ளனர்.

பெருந்தொற்று காரணமாக வேலை இழந்தவர்களுக்கு சலுகைகள் மற்றும் வர்த்தகங்களுக்கான மானியங்கள் வழங்கல் உட்பட 2021 இலையுதிர்காலத்தில் பெரும்பாலான முக்கிய COVID நலத்திட்டங்களை நீட்டிக்க கட்சி திட்டமிட்டுள்ளது.

நல்லிணக்கம்

முதற்குடி சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் 5 ஆண்டுகளில் 18 பில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக முன்னதாக Liberal கட்சி உறுதியளித்தது.

முதற்குடி பெண்கள் காணாமற்போனமை, கொலை செய்யப்பட்டமை, வீட்டு வசதிகள், வறுமை, முதற்குடி கலாசாரம் அழிவடைந்து வருகின்றமை போன்ற விடயங்களை ஆராய்ந்து நிவர்த்திப்பதாகவும் கட்சி வாக்குறுதியளித்துள்ளது.

முதற்குடியின சமூகத்தினருக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்க தொடர் நடவடிக்கை எடுப்பதாகவும் கட்சி உறுதியளித்துள்ளது.

காலநிலை மாற்றம்

இந்த தசாப்தம் முடிவதற்குள் நாட்டின் பசுமை இல்ல வாயு உமிழ்வை 2005 இல் இருந்த மட்டத்தின் கீழ், 40 முதல் 45 சதவீதம் வரை கொண்டு வருவதாகவும், 2050 ஆம் ஆண்டிற்குள் பசுமை இல்ல வாயுக்களின் நிகர உமிழ்வு பூச்சியமாக உள்ள நாடாக கனடாவை மாற்றுவதாகவும் Trudeauவும் Liberal கட்சியும் உறுதிபூண்டுள்ளனர்.

கார்பன் உமிழ்விற்கான வரி விதிப்பை (carbon pricing) தொடர்ச்சியாக உயர்த்துவதாக Liberal கட்சி வாக்குறுதியளித்துள்ளதுடன், சுவட்டு எரிபொருள் (fossil fuel) தொழிற்துறையின் உமிழ்வைக் குறைக்க எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கான தள்ளுபடி திட்டத்திற்கு 1.5 பில்லியன் டொலர்களை ஒதுக்குவதாகவும் Liberal கட்சி உறுதியளித்துள்ளது.

ராகவி புவிதாஸ்

Related posts

இன அழிப்புக்கு எதிரான கனடாவின் நிலைப்பாடு!

Gaya Raja

கனடிய  நாடாளுமன்றத்தில் 100 பெண்கள்

Lankathas Pathmanathan

மிருகத்தமான – கோழைத்தனமான – வெட்கக்கேடான வன்முறைச் சம்பவம்!

Gaya Raja

Leave a Comment