தேசியம்
கட்டுரைகள்

மிருகத்தமான – கோழைத்தனமான – வெட்கக்கேடான வன்முறைச் சம்பவம்!

London பயங்கரவாத தாக்குதலை முன்வைத்து..

Nathaniel Veltman ஒரு கொலைகாரன் என குற்றம் சாட்டப்பட்டவர். இஸ்லாமிய இனத்தின் மீது கொண்ட வெறுப்புணர்வின் காரணமாக திட்டமிட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மீது வாகனத்தால் மோதியவர்.

அவர் மீது நான்கு முதல் நிலை கொலை குற்றச்சாட்டுகள் – ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு – தவிரவும் இரண்டு பயங்கரவாத குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

Ontarioவின் London நகரில் இந்த தாக்குதல் நடந்தது. London நகரம் Torontoவுக்கு மேற்கே
இஸ்லாமிய மக்கள் சமுகத்தை பெரும் தொகையாக கொண்ட ஒரு நகரம்.

இந்தத் தாக்குதல் மாத்திரமல்ல தாக்குதலுக்கான நோக்கமும் பயங்கரமானது: ஒரு இஸ்லாமிய கனேடிய குடும்பத்தின் மூன்று தலைமுறைகள் இந்த தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டனர் – 9 வயது குழந்தை அனாதையாக்கப்பட்டது.

ஆனாலும், தாக்குதலை (திட்டமிட்டு) மேற்கொண்டவர் மனநோய்க்காக மருந்துவம் பெற்றவர் என்ற வகையில் செய்தி ஒன்று இப்போது பொது வெளியில் பரப்பப்படுகிறது.

ஏற்கனவே துயரில் உள்ள ஒரு சமூகத்தின் மீது, இது பல வகைகளில் துன்பத்தை ஏற்படுத்துகிறது. மன நோய் வன்முறைச் செயல்களைத் தூண்டுகிறது என்ற கருத்து தவறானது. உண்மையில், கனேடிய மனநல சங்கத்தின் கூற்றுப்படி, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளாக இருப்பதை விட வன்முறையால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது.

மேலும், பொது மக்களை விட வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதற்கான அதிக வாய்ப்பு அவர்களுக்கு இல்லை.மனநோயால் பாதிக்கப்பட்டவர்களால் ஏற்படக்கூடிய வன்முறையின் உண்மையான ஆபத்து மிகச் சிறியது. இது ஒரு நபர் ஒரு தீவிர மனநோய் இடைவெளியை அனுபவிக்கும் சூழலில் முக்கியமாக நிகழ்கிறது. இந்த நிலைமை மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற மனநோயிலிருந்து மிகவும் வித்தியாசமானது. அனைத்து மன நோய்களும் ஒரே மாதிரியானவை என்ற அடிப்படையுடன் செயல்படுவது பிழையானது.

அவர்கள் 2007 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இருந்து கனடாவுக்கு வந்தனர். தங்கள் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க கடுமையாக உழைக்கத் தயாராக இருந்தனர். அவர்களுக்கு கனடாவில் நெருங்கிய உறவினர்கள் இல்லை – ஆனாலும் சிறந்த எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையுடன் இருந்தனர்.

அந்த நம்பிக்கை June மாதம் 6 ஆம் திகதி துண்டு துண்டாக உடைக்கப்படுகிறது. கனேடிய வரலாற்றில் துயர் நிறைந்த ஒரு நாளாகவும் அந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பிடித்தது.

74 வயதான Talat Afzaal, அவரது மகன் 46 வயதான Salman Afzaal, மருமகள் 44 வயதான
Madiha Salman, அவர்களது மகள் 15 வயதான Yumna Afzaal, 9 வயதான Fayez Afzaal
ஆகியோர் வாகனத்தால் மோதப்பட்டனர். இதில் 9 வயது சிறுவன் தவிர ஏனைய நால்வரும் கொல்லப்பட்டனர் – சிறுவன் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின்னர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டான்.

மாலை நேர உலாவுக்காக வீதியில் சென்று கொண்டிருந்த இந்த இஸ்லாமிய குடும்பத்தின் மீது 20 வயதான Veltman தனது வாகனத்தை மோதினான். இது இஸ்லாமிய இனத்தின் மீது கொண்ட வெறுப்புணர்வின் காரணமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என ஆரம்ப விசாரணையின் பின்னர் காவல்துறையினர் கூறினர். தாக்குதல் நடைபெற்ற தினமே Veltmanகைது செய்யப்பட்டான்.

பாட்டி: Talat Afzaal – Talat ஒரு பாடசாலை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். தாக்குதலில் கொல்லப்பட்ட இவர் குடும்பத்தின் தலைவராக இருந்தார்.

தந்தை: Salman Afzaal – Salman, ஒரு physiotherapist ஆவார். தென்மேற்கு Ontarioவில் உள்ள
பல பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் மூத்தவர்களுக்கு அன்பையும் பராமரிப்பையும்
வழங்கியவர். அவர் Karachi பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று 1997இல் பட்டம் பெற்றவர்.

ஆங்கிலம், உருது, பஞ்சாபி என மூன்று மொழிகளை பேசும் ஆற்றல் கொண்டவர்.
தாய்: Madiha Salman – Madiha, பாக்கிஸ்தானில் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். 174 பேர் கொண்ட வகுப்பில் இவர் தான் ஒரே பெண்மணி. Western
பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், PhD கல்வியை நிறைவு செய்யும் முயற்சியில் இருந்தவர்.

மகள்: Yumna Salman – Yumna, Oakridge மேல்நிலைப் பாடசாலையில் 9ஆம் வகுப்பு மாணவி. அதற்கு முன்னர் அவர் London இஸ்லாமிய பாடசாலையில் பட்டம் பெற்றவர்

கனடாவின் அனைத்துச் சமூகத்தினரும் இந்தத் தாக்குதலினால் அதிர்ச்சியும், துயரமும் அடைந்துள்ளனர். திட்டமிடப்பட்ட இந்தப் படுகொலைகளை அனைத்துச் சமூகத்தினரும் ஆரம்பம் முதல் ஒரே குரலில் கண்டித்தனர். இந்தப் படுகொலை களுக்கு எதிராகவுள்ளார்கள். அரசியல் வேறுபாடுகளற்று – பலரும் குரல் கொடுத்தனர்.

கனேடிய பிரதமர், Ontario முதல்வர், கனேடிய முஸ்லிம்களின் தேசிய சபை உள்ளிட்ட பலர் இதை ஒரு பயங்கரவாத தாக்குதல் என ஆரம்பம் முதல் வரையறுத்தனர்.

இந்தச் சம்பவம் கனடாவில் செறிந்து வாழும் சிறுபான்மைச் சமூகங்கள் மீது எதிர்கால அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் வெறுப்பின் அடிபடையிலான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னர் கனடாவில் வெறுப்பின் அடிபடையில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு எதிராக போராடுவதற்கான வாய்ப்பை இழந்ததன் விளைவுதான் இந்தத் தாக்குதல் என்பது பலரது கருத்தாகவும் உள்ளது.

சமீப காலத்தில் முஸ்லீம் விரோத வெறுப்பு அதிகரித்த போதிலும் அதனை
எதிர்கொள்வதில் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்பது பொதுவான ஒரு குற்றச்சாட்டாகும்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் (January 29, 2017) Quebec நகர மசூதியில் துப்பாக்கி ஏந்திய நபர் 6 பேரை சுட்டுக் கொன்றார். இந்தத் தாக்குதலில் 19 பேர் காயமடைந்தனர். Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Iqra Khalid, இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்தார். முஸ்லிம் இனத்தின் மீது கொண்ட வெறுப்புணர்வு குறித்த ஒரு பிரேரணையாக அது அமைந்தது.

இந்த பிரேரணை March 2017 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் 91 Conservative மற்றும் Bloc Quebecois உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர். அதில் இப்போதைய Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole உம் ஒருவர்.

இந்த கொடூரமான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெள்ளையர்களாக இருக்கும்போது நாம் ஏன் சமூகமாக அந்த குற்றத்தை மனநோய் என்ற பக்கம் மாற்றுகிறோம்? இது Quebec நகர மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய குற்றவாளியின் விடயத்திலும் நடைபெற்றது.

இத்தகைய பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர் ஒரு சிறுபான்மை சமூகத்தின் நபராக இருந்தால், அத்தகைய ஒரு விவாதம் முன்னெடுக்கப்பட்டிருக்காது.

குற்றம் சாட்டப்பட்டவர் வெள்ளை இனத்தவராக இருக்கும்போது மாத்திரம் – மன நோய் உட்பட

  • ஏனைய காரணிகள் வகிக்கும் முக்கிய பங்கை ஏன் ஆராய வேண்டும்?

அனைத்து வன்முறைச் செயல்களிலும் இந்த வெளிப்புறக் காரணிகளும், சூழ்நிலைகளும் வகிக்கும் பங்கை நாங்கள் விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்யவேண்டும்.

ராகவி புவிதாஸ்

(தேசியம் சஞ்சிகையின் June 2021 பதிப்பில் வெளியான கட்டுரை)

Related posts

September வரை மூடப்படவுள்ள Ontario பாடசாலைகள் ;இணையவழிக் கல்வியும் இடர்பாடுகளும்

Gaya Raja

கனடாவில் அவசர காலச் சட்டம்: “இது தகுமோ.. முறையோ.. தர்மம் தானோ…?”

Lankathas Pathmanathan

COVID தொற்றும் பல்கலாச்சார ஊடகங்களும்

Gaya Raja

Leave a Comment