Haiti இல் அனாதை இல்லம் கட்ட உதவும் பணியில் ஈடுபட்டிருந்த போது கடத்தப்பட்ட 17 பேரில் ஒரு கனேடியரும் அடங்குகின்றார்.
Christian Aid Ministries இந்த கடத்தலை ஞாயிற்றுக்கிழமை தனது இணையதளத்தில் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
இந்த குழுவில் ஐந்து குழந்தைகளும் இருப்பதாக நம்பப்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த Christian Aid Ministries தெரிவித்துள்ளது.
கனேடியர் உட்பட கடத்தப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகவில்லை.
அதேவேளை கனேடிய குடிமகன் Haitiயில் கடத்தப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அறிந்திருப்பதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தில் Haiti யில் உள்ள கனேடிய அரசாங்க அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகின்றனர் என கனேடிய வெளிவிவகார அமைச்சு மின்னஞ்சல் அறிக்கையில் தெரிவித்தது.
கனடா அரசாங்கத்தின் முன்னுரிமை தனது குடிமக்களின் பாதுகாப்பு எனக்கூறிய கனடிய வெளிவிவகார அமைச்சு, தனியுரிமைச் சட்டத்தின் விதிகள் காரணமாக, மேலும் எந்த தகவலையும் வெளியிட முடியாது என தெரிவித்தது.