வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட அச்சுறுத்தல் விசாரணையில் Torontoவைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் இந்த மாதத்தின் முதலாவது நாளில் (வெள்ளிக்கிழமை – October 1) நிகழ்ந்தது. கைது செய்யப்பட்டவர் Scarboroughவில் அமைந்துள்ள நிசாந்தன் சட்ட அலுவலகத்தின் சட்டத் தரணியான 47 வயதான உமாநந்தினி நிசாந்தன் என Toronto காவல்துறையினர் உருத்திப்பாடுத்தியுள்ளனர். ஓரினச் சேர்க்கையாளர்களான இரண்டு பெண்களின் திருமணத்தை நடத்தி வைத்த இந்து மத குருக்களும் கனேடிய திருமண பதிவாளருமான சிவஸ்ரீ.வி.ரங்கநாதக் குருக்களை மிரட்டிய குற்றச்சாட்டில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் திருமணத்தை ரங்கநாதக் குருக்கள் நடத்தியதனால் ஆத்திரமடைந்த உமாநந்தினி நிசாந்தன் அவரை தொலைபேசியில் மிரட்டியதாக தெரியவருகின்றது. இவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக Toronto காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொலைபேசியில் மிரட்டியதுடன் மாத்திரம் அவர் நின்றுவிடவில்லை. வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட இவர், சட்டப் பிரிவுகளை மேற்கோள் காட்டி ரங்கநாதக் குருக்களுக்கு எதிரான தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். ஆனாலும் இவரது முழுமையான பெயரோ அல்லது இவர் ஒரு வழக்கறிஞர் என்ற விபரமோ அந்த நிகழ்ச்சியில் பகிரப்படவில்லை.
இந்த விடயங்களை பகிராமல் ஏன் அவர் வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள
அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்வியும் இங்கு உள்ளது. இவை அனைத்திற்கும் பின்னணியாக அமைந்தது இரண்டு பெண்களுக்கு (இருவரில் ஒருவர் தமிழர்) இடையிலான ஒருபாலின திருமணமாகும். இந்தத் திருமணம் பெரும் விவாத வெளியொன்றை திறந்து விட்டுள்ளது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் தொடரும் இந்த விவாதம் ஒரு கருத்திய ல் வெளியை சமூகத்தின் மத்தியில் உருவாக்கி வருகின்றது என்பது மட்டும்உறுதியானது.
September மாதத்தின் கடைசி வாரம் இந்தத் திருமணத்தை ரங்கநாதக் குருக்கள் நடத்திவைத்திருந்தார். திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதனுடன் இணைந்து பரவியது விமர்சனங்களும்தான். முதலில் குறிப்பிட்ட இரண்டு பெண்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பின்னர் திருமணத்தை நடத்தி வைத்த ரங்கநாதக் குருக்கள் மீது விமர்சனங்கள் எழுந்தன. அவற்றுடன் கொலை மிரட்டல்களும் அடங்கியிருந்தது.
இவற்றுக்கு மகுடம் வைப்பது போன்று வெளியானது கனடா இந்து குருமார் ஒன்றியத்தின் அறிக்கை. ஒரு பாலின திருமணத்தை சைவ சமய ஆகம முறைப்படி நடத்தியதற்காக ரங்கநாதக் குருக்களை வன்மையாகக் கண்டிப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது. இந்து குருமார் ஒன்றியத்திலிருந்து அவரை விலக்குவதாக ரங்கநாதக் குருக்களிடம் தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. ரங்கநாதக் குருக்கள் மீது கண்டனம் தெரிவிக்கும் இந்து குருமார் ஒன்றியத்தின் அறிக்கைக்கு சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பும் வெளியாகியுள்ளது.
இந்த திருமணத்தை சைவ சமய ஆகம முறைப்படி ரங்கநாதக் குருக்கள் நடத்தியது குறித்தே இந்து குருமார் ஒன்றியம் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சைவ சமய ஆகம முறை குறித்து குருமார் ஒன்றியம் கரிசனை காட்ட எத்தனித்துள்ளதனால், கனடாவில் சைவ சமய ஆகம முறை தவறி நடைபெறும் சடங்குகள் அனைத்தையும் இனிவரும் காலத்தில் குருமார் ஒன்றியம் கண்டிக்குமா என்ற கேள்வி இங்கு எழுவது தவிர்க்க முடியாது. தவிரவும் இதுவரை காலமும் கனடாவில் நடந்த அனைத்து சைவ சமய ஆகம முறை மீறல்கள் குறித்த குருமார் ஒன்றியத்தின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. அந்தப் பொழுதுகளில் குருமார் ஒன்றியம் மௌனம் காத்த காரணம் என்ன என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதது. அவை குறித்தும் குருமார் ஒன்றியம் தனது தரப்பு கருத்தை விரைவில் வெளியிட வேண்டுமென எதிர்பார்ப்பு உள்ளது.
ரங்கநாத குருக்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்குவதற்குப் பதிலாக, அவருக்கும் மேலும் தடையை உருவாக்கும் ஒரு நகர்வாகவே இந்து குருமார் ஒன்றியத்தின் அறிக்கை வெளியீடு அமைந்துள்ளது. இந்த அறிக்கை யதார்த்தத்தை ஏற்க மறுக்கும் நிலையை எடுத்துக் காட்டுகிறது. இதுபோன்ற ஒரு அறிக்கையை வெளியிடுவதற்குப் பதிலாக இந்து குருமார் ஒன்றியம் மிரட்டலை எதிர்கொள்ளும் தனது ஒன்றியத்தின் செயலாளருக்கு (ஆம் கனடா இந்து குருமார் ஒன்றியத்தின் செயலாளர் இதே ரங்கநாதக் குருக்கள் தான்) ஆதரவாக குரல் எழுப்பியிருக்க வேண்டும். அதனைத் தாண்டி, அவர் மீதான மிரட்டலுக்கு கண்டனத்தை தெரிவித்திருக்க வேண்டும்.
ஒருவர் தான் வாழும் நாட்டின் அரசாங்கத்தினால் முறையாக அங்கீகரிக்கப்பட்ட தனது தொழிலை செய்ததற்காக கொலை மிரட்டலை எதிர்கொள்கிறார் என்பது காட்டுமிராண்டித் தனமானது – கடும் தொனியில் கண்டிக்கப்பட வேண்டியது. அந்தக் கண்டனக் குரலை இந்து குருமார் ஒன்றியம் முதலில் எழுப்பியிருக்க வேண்டும்.
அனைத்து மதங்களும் அன்பையே போதிக்கின்றன – போதிக்க வேண்டும். அந்தப் போதனைகளை வழிநடத்த வேண்டிய குருமார் வெறுப்பையும் பாகுபாட்டையும் வெளிப்படுத்தும் வகையில் நடந்து கொள்வது இந்து மதத்தை மேலும் பின்னடையச் செய்யும். குறிப்பாக இளைய சமூகத்தினரை மத விழுமியங்களில் இருந்து விலகியிருப்பதற்கு இதுபோன்ற நகர்வுகள் காரணமாக மாறிவிடும் அபாயம் அதிகம் உள்ளது. தவிரவும் இதுபோன்ற அறிக்கை மூலமாக வெளியாகும் வெறுப்புணர்வுகள், ரங்கநாதக் குருக்கள் மீதான மிரட்டல்களை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
உலகமே அன்பைத் தேடும் போது நீங்கள் மாத்திரம் ஏன் வெறுப்பையும் பாகுபாட்டையும் ஊக்குவிக்க வேண்டும்? நீங்கள் உண்மையிலேயே அன்பை போதிக்கும் மதத்தின்
பாதுகாவலர்கள் தானா? உங்கள் அறிக்கை, ‘மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த
கதை’ யாகத்தான் உள்ளது தமிழர் சமூகத்தில் மூன்றாம் பாலினத்தை அகற்ற காலனித்துவம் முன்னர் முயன்றது. பின்னர் தெற்காசிய சமூகங்கள் கனடாவில் குடியேறிய பின்னரும் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான நிலைப்பாடு தொடர்கிறது. இவை அப்பட்டமான மனித உரிமை மீறல்கள். இந்த வகையான பாகுபாடுகளுக்கு இன்றைய கனேடிய வாழ்வில் இடமில்லை.
இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்ட அதன் மரபுகளைப் பின்பற்றுபவன் என்ற முறையில் இந்து குருமார் ஒன்றியத்தின் குறுகிய மனப்பான்மையால் வெட்கப்படுகிறேன். இதுபோன்ற நகர்வுங்களினால் ஆலயங்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையும் போது அது குறித்து வருத்தப்படுபவனாக நான் இருபேன் – ஆனால் பக்தர்களின் வருகை குறைவுக்கு உங்களது இதுபோன்ற நகர்வுகள் தான் என்பதை இப்போதே பதிவு செய்தும் விடுகின்றேன். மதம் மக்களை பாகுபாடு செய்வதற்கான ஒரு ஆயுதமல்ல – மாறாக மக்களை அமைதியாக வாழ உதவும் ஒரு முறை. இந்து மதம் எப்போதும் காலத்தோடு தன்னை மாற்றி வந்துள்ளது – இந்த விடயமும் அந்த காலச் சூழச்சியில் மாறுபடும். அப்போது ரங்கநாதக் குருக்கள் இந்த மாற்றத்தின் முன்னோடியாக கொண்டாடப்படுவார்!
இவை அனைத்தையும் தாண்டியும் ஒரு விடையத்தை அனைவரும் மறந்து விடுகிறோம்:
அதுதான்”Law of the land” இருவர் தாம் விரும்பிய முறையில் திருமணம் என்ற பந்தத்தில் இணைந்திருக்கின்றார்கள். அவர்களின் இணைவை திருமணப் பதிவாளர் அனுமதி பெற்ற ஒருவர் நடத்தி வைத்திருக்கின்றார். இவை எதுவும் கனடாவில் சட்டத்திற்கு எதிரானது அல்ல. தவிரவும் அது அவர்களின் உரிமை – அதில் நாம் மூக்கை நுழைக்க முடியாது – இதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவையும் இல்லை. இறுதியாக இந்த விடயம் குறித்து தொடர்ந்தும் வன்மம் கொட்டுபவர்களுக்கு: கனடாவில் தமிழர்களின் மத்தியில் கருத்து தெரிவிக்க வேண்டிய விடயங்களுக்கு ஒன்றும் குறைவில்லை. இந்த விடயத்தில் ஆற்றலை வீணாக்குவதற்குப் பதிலாக, கனடாவில் பல சமூக அநீதிகள் (குறிப்பாக தமிழர்கள் மத்தியில்) நடைபெறுகின்றன. வேண்டுமானால் அவை குறித்து உங்கள் கரிசனையை வெளியிடுங்கள்!
இலங்கதாஸ் பத்மநாதன்