கடந்த வருடம் October மாதம் Annamie Paul கனடாவின் பசுமை கட்சியின் தலைமையைவெற்றி பெற்ற பின்னர் நடைபெற்ற இடைத் தேர்தலில் Toronto மத்திய தொகுதியில்போட்டியிட்டார். ஆனாலும் 2013ஆம் ஆண்டு முதல் Liberal கட்சியினால் வெற்றிகொள்ளப்பட்ட தொகுதியை அவரால் வெல்ல முடியவில்லை.
சமீபத்திய மாதங்களில் Paul தலைப்புச் செய்திகளில் பலமுறை இடம்பிடித்தாலும் அது கட்சியின் உட்பூசல் காரணமாக நிகழ்ந்தவை. முதலில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Jenica Atwin, இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலைச் சுற்றியுள்ள உள்கட்சி பிளவுகளைக் காரணம் காட்டி Liberal கட்சிக்கு மாறினார். இது நடைபெற்ற சில நாட்களுக்குப் பின்னர், Paul கட்சி தலைமைக்கு ஒரு சவாலை எதிர்கொண்டார். இது ஒரு வினோதமான தொடர் நிகழ்வுகளில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதன் போது கட்சி நிர்வாகிகள் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் திட்டமிட்டனர். மேலும் அவரது உறுப்பினர் உரிமையை இடைநிறுத்த முயன்றனர். இந்த இரண்டு முயற்சிகளும் கைவிடப்பட்டதாக Paul பின்னர் அறிவிக்க வேண்டியிருந்தது. கனடாவில் ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் யூதப் பெண்ணாகவும், முதல் கறுப்பு பெண்ணாகவும் மட்டுமே பலர் இவரை அறிந்திருக்கலாம். ஆனால் Paul ஒரு சர்வதேச வழக்கறிஞர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான கனடாவின் குழுவில் பணியாற்றியவர். Paul, மீண்டும் Toronto மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் போட்டியிடும் தொகுதியில் எல்லைகள் கடந்த 30 ஆண்டுகளில் சில முறை மாறிவிட்டன, ஆனால் Liberal கட்சிக்கான ஆதரவு மாத்திரம் மாறவில்லை. 1988ல் Progressive Conservative கட்சி அங்கு வெற்றி பெற்ற பின்னர், Liberal கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் அங்கு வெற்றி பெறவில்லை.அந்த நிலையை இம்முறை Paul மாற்றுவாரா?
ரம்யா சேது