COVID பேரிடர் உலக நாடுகளின் பொருளாதாரத்தை மட்டுமல்ல மக்களின் இயல்பு
வாழ்க்கையையும் அடியோடு புரட்டிப்போட்டிருக்கும் நிலையில் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது யதார்த்தமான உண்மை.
இவ்வாறான சூழ்நிலையில் கற்பித்தல் செயற்பாடுகளை இணையவழியில் செயற்படுத்துவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஒரு முறைமையாகவே இணையவழிக் கற்பித்தல் அமைந்திருந்தது. ஆனால் இன்று கற்பித்தல் முறைமை முழுவதுமே இணையவழியாக மாறிவிட்ட தன்மையைக் காணக்கூடியதாக
இருக்கின்றது.
கனடாவின் மிகப்பெரிய மாகாணமான Ontarioவில் பாடசாலைகள் September மாதம் வரை மூடப்படும் என இந்த மாத ஆரம்பத்தில் முதல்வர் Doug Ford அறிவித்திருந்தார். இதன் மூலம் பாடசாலைகள் இந்த கல்வியாண்டில் நேரடி கற்றலுக்காக மூடப்படும் நிலை தோன்றியுள்ளது.
இது Ontario மாணவர்களை மீண்டும் இணையவழிக் கற்றலுக்கு தள்ளுகின்றது. கனடாவின் ஏனைய மாகாணங்கள் சிலவும் இணையவழிக் கற்பித்தலை தொடர்ந்தும்
நடைமுறைப்படுத்துகின்றது.
உலகளாவிய ரீதியில் பேரிடரினை கையாள்வதின் ஒருபடியாகவே இவ்வாறான இணையவழிக் கற்பித்தல் முறைமை தெரிவுசெய்யப்படடிருந்தாலும்கூட இக்கற்பித்தல் முறைமையானது எந்தளவிற்கு மாணவர்களிடத்து கற்றல் நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது கேள்விக்குறியான ஒரு விடயமே.
இன்றைய காலத்தில் மாணவர்களை மையமாகக்கொண்ட கற்பித்தல் முறைமையே மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. வகுப்பறை கற்பித்தல் முறைமையில் ஆசிரியர் மாணவர்களுக்கான இடைவினைத் தொடர்பு அதிகமாக இடம்பெறுவதால் இக்கற்பித்தல் முறைமை சிறப்பாகவே நடைபெறும்.
இந்நிலையில் இணையவழிக் கற்பித்தல் முறைமையில் ஆசிரியர் மாணவர்களுக்கான இடைவினைத் தொடர்பு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. ஆசிரியர் கற்பிப்பதை மாணவர்கள் செவிமடுக்கின்ற விரிவுரைக் கற்பித்தல் முறைமையே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த இணையவழிக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவர்கள் மட்டுமன்றி பெற்றோர் ஆசிரியர்கள் கல்விநிர்வாகம் எனப் பல்வேறுபட்ட பகுதியினரும் பெரும்
இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.
மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள்:
- வகுப்பறைக் கற்பித்தலில் மாணவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை – அதாவது
எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட விடயம் தொடர்பாக மாணவர்களுக்கு மேலதிக தகவல்கள்
தேவைப்படுகிறதா? அல்லது மாணவர்கள் தமக்குத் தெரிந்த விடயங்களை
கூறமுன்வருகிறார்களா? போன்ற விடயங்களை ஆசிரியரால் அவதானிக்க முடியும். ஆனால்
இணையவழிக் கற்பித்தலில் ஆசிரியர் கூறும் விடயங்களை மட்டுமே மாணவர்கள்
செவிமடுக்கின்ற தன்மை அதிகளவில் காணப்படுகிறது.
- சகமாணவர்களின் நேரடித் தொடர்பு இன்மை. தமது உள்ளக்கிடக்கைகளை நண்பர்களுடன்
நேரடியாகக் கலந்துரையாட முடியாமை. - வீடு, கற்கும் அறை போன்றவை கற்றல் சூழலுக்கு ஏதுவாக அமையாமை.
- இரண்டிற்கு மேற்பட்ட மாணவர்கள் இணையவழியில் கற்கும்போது கற்கும்
உபகரணங்களுக்கான பிரச்சினை. - வீட்டில் உள்ள தொலைபேசி, தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் மாணவர்களுக்கான கற்றல்
செயற்பாட்டிற்கு இடையூறாக அமைகின்றமை. - பெற்றோரின் கண்காணிப்பு கற்றலில் திசை திருப்ப முடியாமை. பாடசாலையின் மேலதிகாரியை
விடவும் கடுமையான கண்காணிப்பு. மாணவர்களை தொலைவில் நின்று கண்காணித்தல்,
அருகில் இருந்து கவனித்தல், கற்றலில் ஈடுபடுகிறார்களா என்பதனை அடிக்கடி வந்து பார்த்து
கண்காணிப்பதன்மூலம் மாணவர்கள் சுதந்திரமான கற்றல் செயற்பாட்டில் ஈடுபடமுடியாமை. - உள்ளக, வெளியக விளையாட்டுக்களில் ஈடுபடமுடியாமையினால் உடல் உளம் சார்ந்த
சோர்வுத் தன்மையுடன் காணப்படுதல். - நேரம், காலம் என்பவற்றில் ஒழுங்குமுறையற்ற தன்மை. பாடசாலை செல்கின்றபோது
காலையில் எழுந்து கடமைகள் முடித்து பாடசாலைக்குச் செல்வர். ஆனால் வீட்டில்
இணையவழிக்கற்பித்தல் செயற்பாடு ஆரம்பிக்கும் போதுதான் கற்றலுக்குத் தயாராகின்றனர்.
ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்:
- இலத்திரனியல் உபகரணங்களைக் கையாளும் திறன் குறைவு.
- கற்பித்தல் உபகரணங்களை தயார்செய்வதில் இடர்பாடுகள்.
- மாணவர்கள் அனைவரையும் ஒரு கட்டுக்குள் கொண்டுவரமுடியாமை.
- சில மாணவர்கள் தங்கள் வரவினை உறுதிப்படுத்திவிட்டு இணையவழியில் இல்லாமலிருத்தல்.
- மாணவர்கள் தமது கற்பித்தலை எவ்வளவு உள்வாங்கிக்கொள்கிறார்கள் என்பதனை
புரிந்துகொள்ள முடியாமை. - ஒரே நேரத்தில் மாணவர்கள் வினாக்களை எழுப்புகின்றபோது வினாக்களை விளங்கிக்கொள்ள
முடியாமை. - குறிப்பிட்ட பாட விடயத்தில் கற்பித்தலில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும் இணையவழியில்
அதனை முழுமையாக மாணவர்களிடத்து கொண்டுசேர்க்க முடியாமை. - ஒரு ஆசிரியரால் மாணவர்கள் அனைவருக்கும் கற்பித்தலில் ஈடுபடமுடியுமானால்
எதிர்காலத்தில் பல ஆசிரியர்கள் தமது வேலைவாய்ப்பினை இழக்கக்கூடிய நிலைமை.
பெற்றோர் எதிர்நோக்கும் சவால்கள்:
- இரண்டுக்கு மேற்பட்ட மாணவர்கள் இருக்கின்ற வீடுகளில் கற்றல் உபகரணங்களுக்கான
இடர்பாடு. - கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க முடியாமை.
- அதிகநேரம் பிள்ளைகள் இலத்திரனியல் உபகரணங்களுடன் செலவிடுவதால் உடலில்
உபாதைகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம். - அதிகரித்த இணையப்பாவனையால் பிள்ளை தவறான பாதைக்குச் சென்றுவிடுமோ என்ற
ஏக்கம். - பிள்ளை இணையவழியில் ஆசிரியரின் கற்பித்தலை சரியாக விளங்கிக்கொள்கிறாரா என்பதில்
உள்ள தயக்கம். - பிள்ளைகளுக்கு குறிப்பாக சிறுவர்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் ஏற்படுகின்ற போது
பெற்றோர் உடனிருத்தல் வேண்டும். இதனால் கற்றலில் ஈடுபடும் தனது மற்றய பிள்ளைகளைக்
கவனிக்க முடியாமை. - பிள்ளையை குறிப்பிட்ட இடத்திலேயே மணிக்கணக்காக இருத்தி வைக்கமுடியாத நிலைமை.
- தாய் தந்தை இருவருமே வேலைக்குச் செல்கின்ற நிலையில் பிள்ளைகளின் கற்றல்
செயற்பாட்டிற்காக ஒருவர் தமது வேலையையே கைவிடுகின்ற தன்மை.
கல்வி நிர்வாகம் எதிர்நோக்கும் சவால்கள்:
- மாணவர்களுக்கான கல்வியை சிறந்த முறையில் வழங்கமுடியாமை.
- மாணவர்களுக்கு இணைப்பாடவிதான செயற்பாடுகள் – அதாவது விளையாட்டுக்கள், கலை.
கலாசார விடயங்களை வழங்க முடியாமை. - மாணவர்கள் முழுமையான கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்களா என்பதனை
அளவிடமுடியாமை. - ஆசிரியர்கள் தமது இருப்பிடங்களில் இருந்து கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுவதால்
முழுமையான கல்வியை மாணவர்களுக்கு வழங்குகிறார்களா என்பதில் உள்ள ஐயப்பாடு.
இவ்வாறாக பல்வேறுபட்ட பிரச்சினைகளை பல்வேறு தரப்பினரும் எதிர்கொள்கின்றனர்.
குறிப்பாக சிறுவர்களுக்கு திரைநேரம் (screen time) மிகவும் குறைவாகவே வழங்கப்பட
வேண்டுமென ஆய்வாளர்கள் கூறிவருகின்ற நிலையில் இவ்வாறான கற்பித்தல் முறைமையில் சிறுவர்கள் அதிக நேரம் திரையில் செலவிடுவதால் அவர்களுக்கான பாதிப்பு என்பது அதிகப்படியானதாக இருப்பதை உணரமுடிகிறது.
இவ்வாறான கற்றல் சூழலில் இருந்து விடுபட அனைத்து சமூகத்தினருடன் இணைந்து மாணவ சமூகமும் தமது பாதுகாப்பு முறைமையை கடைப்பிடிக்க வேண்டும். ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்’ என்பதற்கு அமைய இந்த பெருந் தொற்றிலிருந்து மாணவர்களை உடல் உளரீதியாகப் பாதுகாத்து வரப்போகின்ற அழகான எதிர்கால சூழலுக்கு நம்மைத் தயார்ப்படுத்தி புதிய கல்வியாண்டில் சிறப்புடன் கல்வி கற்கும் காலத்தினை உருவாக்குவோம்.
கிருபாலினி விபில் ஆனந்தன்
(தேசியம் சஞ்சிகையின் June 2021 பதிப்பில் வெளியான கட்டுரை)